சென்னை அசோக் நகருக்கு அடையாளமாக சொல்லப்படுவது அசோக் பில்லர். ஆனால், அதைத் தாண்டி அசோக நகரின் மற்றொரு பிரம்மாண்ட அடையாளமாக கடந்த 40 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் உதயம் தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறது.
1983-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உதயம் திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று. கட்டப்பட்டபோது உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரைகளை கொண்டிருந்தது. பின்னாட்களில் சொத்துப் பிரச்சினை காரணமாக உதயம் திரையரங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு, மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரை சேர்க்கப்பட்டது. மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள் பெரியளவில் கால் பதிக்காத காலக்கட்டத்தில் சென்னை ரசிகர்களின் ஆதர்ச திரையரங்கங்களில் ஒன்றாக ‘உதயம்’ திகழ்ந்தது.
உதயம் திரையரங்கில் முதலில் திரையிடப்பட்ட படம் ரஜினி நடித்த ‘சிவப்பு சூரியன்’. 80-கள், 90-கள் தொடங்கி இன்று வரை ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பெரிய ஹீரோக்கள் படங்களுக்கான முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்களுக்கு பேர் போன ஒரு சில திரையரங்குகளில் உதயமும் ஒன்று. குறிப்பாக, 80-கள், தொண்ணூறுகளில் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும் நாட்களில் சாலையின் ஓரம்வரை ரசிகர்கள் கூட்டம் அலைமோதி போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். ரஜினியின் ‘படையப்பா’, ‘அருணாச்சலம்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட படங்கள் இங்கு ஒரே ஸ்க்ரீனில் 150 நாட்களை கடந்து ஓடியுள்ளன.
90-களுக்குப் பிறகு இந்த திரையரங்கம் விஜய், அஜித் ரசிகர்களின் கோட்டையாக மாறியது. பல படங்கள் இங்கு வெள்ளி விழா கண்டன. அதேபோல சென்னையில் நல்ல வசூல் ஆவர்த்தனம் நடக்கும் திரையரங்குகளில் ஒன்றாகவும் உதயம் விளங்கியது.
சென்னையில் மல்டிப்ளெக்ஸ் கலாச்சாரம் தலைதூக்கிய பிறகு மெல்ல உதயம் போன்ற திரையரங்கங்களின் மவுசு குறையத் தொடங்கியது. பல்வேறு சட்ட சிக்கல்களால் 2008 வரை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்த உதயம் தியேட்டரை 2009-ஆம் ஆண்டு ஐந்து உரிமையாளர்களில் ஒருவரான பரமசிவம் பிள்ளை, ரூ.80 கோடி ஏலத்தில் வாங்கியிருந்தார். அன்று முதல் கடந்த 15 ஆண்டுகளாக ‘இப்போது விற்கப்படுகிறது, நாளை விற்கப்படுகிறது’ என்று வதந்திகள் அவ்வப்போது கிளம்பினாலும், இந்த முறை அது உண்மையாகி இருக்கிறது.
பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று, 1.3 ஏக்கர் பரப்பளவு கொண்ட உதயம் தியேட்டர் இடத்தை வாங்கியிருப்பதாகவும், விரைவில் அங்கு 25 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது சென்னை சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் உதயம் திரையரங்குடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
கரோனா பரவலுக்குப் பிறகு தமிழகத்தின் அடையாளமாக இருந்த பல்வேறு திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. அதிலும் ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு பார்வையாளர்கள் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கும் போக்கு குறைந்துவிட்டதால் பல திரையரங்கங்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது. சென்னையில் ஒரு காலத்தில் ரசிகர்களின் ஆதர்ச தியேட்டர்களாக இருந்த சாந்தி, அகஸ்தியா போன்ற பிரபல திரையரங்குகள் இன்று காணாமல் போய்விட்டன. அந்த வரிசையில் தற்போது உதயமும் இணைகின்றது.
40 ஆண்டு காலமாக சென்னை சினிமா கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக, எண்ணற்ற நினைவுகளை சுமந்து நிற்கும் ‘உதயம்’ திரையரங்கம் அஸ்தமனம் ஆகப் போவதாக வரும் செய்தி சினிமா ரசிகர்களின் நெஞ்சை கனக்கச் செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
44 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago