திரை விமர்சனம்: மறக்குமா நெஞ்சம்

By செய்திப்பிரிவு

பிளஸ் டூ படிக்கும்போது சக மாணவி பிரியதர்ஷினியை (மெலினா) காதலித்த கார்த்திக் (ரக்‌ஷன்), தனது காதலைச் சொல்லாமலேயே ‘இதயம்’ முரளியைப் போல இருந்துவிடுகிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறது. இம்முறையாவது கார்த்திக் தனது காதலைச் சொன்னாரா, இல்லையா என்பது கதை.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் சில காலத்துக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக்கொள்ளும் ‘ரீயூனியன்’ கதைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான சட்டகத்தைக் கொண்டிருக்கும். இந்தப் படத்தில், 10 ஆண்டுகளுக்கு முன், ஒரு பள்ளியில், ஒரே வகுப்பில் படித்த மாணவ, மாணவியர், பள்ளிக்கு 3 மாதம் வந்து, பிளஸ் டூ பாடங்களைப் படித்து மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுவதாக அமைக்கப்பட்டிருப்பது திரைக்கதைக்கு ஊக்கம் அளித்திருக்கிறது.

ஆனால், முதல் பாதியில், நடக்கும் பெரும்பாலான பள்ளிப் பருவச் சம்பவங்களில் அழுத்தம் இல்லை. பார்வையாளர்கள் பார்த்துப் பழகியவை வரிசையாக வந்து படுத்துகின்றன. உடற்கல்வி ஆசிரியருக்கும் கணித ஆசிரியைக்குமான காதல் விதிவிலக்காகக் கவர்கிறது. அதை இன்னும் தரமுயர்த்தி ரொமாண்டிசைஸ் செய்திருக்கலாம்.

முதல் பாதியின் சோதனைகளைப் பொறுத்துக்கொண்டால், இரண்டாம் பாதியின் எதிர்பாராத உணர்வுத் தோரணங்களை ரசிக்க முடியும். கார்த்தி - பிரியதர்ஷினியின் மீள் சந்திப்பு, 10 ஆண்டு பணி வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் முன்னாள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் பக்குவம், பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பை முன்னாள் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் விதம், பேனா பிடித்து எழுத மறந்துபோனவர்கள் மீண்டும் தேர்வு எழுத உட்காரும்போது படும் அவஸ்தை என 2கே கிட்ஸின் எண்ண ஓட்டங்களை, உணர்வுகளை அழகாகப் படியெடுத்துக் காட்டி கவர்கிறார் அறிமுக இயக்குநர் இரா.கோ.யோகேந்திரன்.

பள்ளி மாணவர் கதாபாத்திரம் ரக்‌ஷனுக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. ஆனால், நடிப்பில் அவர் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.

பிரியதர்ஷினியாக நடித்திருக்கும் மெலினா அழகாகவும் ஈர்க்கும் விதமாகவும் இருக்கிறார். அவருமே கூட காதலுக்கான நடிப்பில் மினிமம் பாஸ் தான். அவருடைய தோழிகளாக நடித்திருப்பவர்கள் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். தீனாவின் பங்களிப்பையும் ‘ப்ராங்ஸ்டர்’ ராகுலின் நடனத்துடன் கூடிய நடிப்பையும் குறை சொல்ல முடியாது. உடற்கல்வி ஆசிரியராக வரும் முனீஸ்காந்துக்கான குணச்சித்திரப் பங்களிப்பை இன்னும் கூட்டியிருந்தால் படத்துக்கு வலிமை கூடியிருக்கும்.

நாகர்கோவிலின் பசுமை, நீரோட்டம் ஆகியவற்றை உலர்ந்துபோகாத காதலின் அடையாளமாக ஒளிப்பதிவுக்குள் கொண்டுவர முயன்றுள்ளார் கோபி துரைசாமி. சச்சின் வாரியரின் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றில் இளமையின் ஆராதனை வழிந்தோடுகிறது.

இரண்டாம் பாதித் திரைக்கதையில் நினைவுகளையும் உணர்வுகளையும் கிளர்த்தும் காட்சிகளைப் போல, முதல் பாதியிலும் அழுத்தம் கூட்டிருந்தால் இன்னொரு ‘96’ ஆகியிருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்