“விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்” - கமல்ஹாசன் @ நினைவேந்தல் நிகழ்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “விஜயகாந்த் கொடுப்பது பல பேருக்கு தெரியாது. அவரால் பயனடைந்தவர்கள் அதனை மறக்க மாட்டார்கள். 70, 80-களில் சமூக அரசியலை பிரதிபலிக்கும் சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், “விஜயகாந்தை நான் முதலில் சந்தித்தபோது அவர் என்னிடம் எப்படி பழகினாரோ அப்படித்தான் பெரிய நட்சத்திரமான பின்பும் பேசினார். விஜயராஜ், விஜயகாந்த் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாத அளவில் பார்த்துக் கொண்டவர். பல விமர்சனங்கள், அவமானங்களைத் தாங்கி, மேலோங்கி வந்தவர். அதற்காக எந்த காழ்ப்புணர்ச்சியை வைத்துக்கொள்ளாமல், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் மற்றவர்களுக்கு ஏற்பட கூடாது என்பதில் முனைப்பாக இருந்தவர். அது உண்மையில் பெரிய விஷயம்.

மற்றவர்களுக்காக போராடும் குரல் அவருடையது. தொடக்க மற்றும் கடைநிலை நடிகர்களுக்கான குரலாக இருந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கெல்லாம் வரும் கூட்டம் இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். அவர் கொடுப்பது பல பேருக்கு தெரியாது. அவரால் பயனடைந்தவர்கள் அதனை மறக்க மாட்டார்கள். 70,80-களில் அந்த சமூக அரசியலை பிரதிபலிக்கும் சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார் என்றால் மிகையாகாது.

எனக்கு அவரிடம் பிடித்த பல நல்ல குணங்களில் ஒன்று, அவருடைய நியாயமான கோபம். அது நடிகர் சங்கத்துக்கும் உதவியிருக்கிறது என நினைக்கிறேன். அவர் நடித்த முதல் படமாக ‘தூரத்து இடி முழக்கம்’ திரைப்பட விழாவுக்கு போக வேண்டிய படம். அதிலிருந்து ஒரு கமர்ஷியல் ஹீரோவாக பெயர் எடுத்தது அவரது திறமை. நானும் அவர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன். தனக்கு பிடிக்காதவர்களைக்கூட அழைத்து பேசும் தைரியம் அவருக்கு உண்டு. அந்த மாதிரியான குணாதியசங்களை பின்பற்றலாம். அவர் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும். குட் பை கேப்டன்” என பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE