பானை பிடித்தவள் பாக்கியசாலி: பந்தயக் குதிரைகளை வளர்த்த நகைச்சுவை நடிகர்!

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவில் 1940 மற்றும் 50களில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்தவர் டி.எஸ்.துரைராஜ். ன்.எஸ்.கிருஷ்ணனுடன் இணைந்து இவர் நடித்த திருநீலகண்டர், சகுந்தலை படங்களில் இவர்கள் நகைச்சுவைக் காட்சிகள் அப்போது பேசப்பட்டன. நாடகத்தில் இருந்து நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய துரைராஜ், குதிரை ரேஸில் ஆர்வம் கொண்டவர். பந்தயக் குதிரைகளை வளர்த்து வந்த இவர் சொந்தமாக 3 குதிரைகளை வைத்திருந்தார்.

‘பிழைக்கும் வழி’, ‘ஆயிரங்காலத்து பயிரு’, ‘பானைபிடித்தவள் பாக்கியசாலி’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள இவர், பிந்தைய இரண்டு படங்களை இயக்கியும் இருந்தார். ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படம் ஞாபகமிருக்கிறதோ இல்லையோ, இதில் இடம்பெற்றுள்ளப் பாடலைஎங்காவது நீங்கள் கேட்டிருக்கக் கூடும். முக்கியமாக, கிராமங்களில் திருமணங்களில், தாலி கட்டி முடிந்ததும் ஒலிபரப்பாகும் பாடல் இது. அந்தப் பாடல், ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பொண்ணே, தங்கச்சி கண்ணே...’. திருச்சி லோகநாதன் பாடியிருந்தார்.

இந்தப் படத்தின் அடையாளமாக மாறியிருக்கும் இந்தப் பாடல், இப்போதுவரை பிரபலம்! டி.எஸ்.துரைராஜ், தனது மரகதா பிக்சர்ஸ் மூலம் தயாரித்து இயக்கிய இந்தப் படத்தின் மூலக் கதையை எழுதியது காங்கேயன். திரைக்கதை, வசனத்தை டி.கே.சுந்தர வாத்தியார், மக்களன்பன் எழுதி இருந்தனர். கமால் கோஷ் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்தில் சாவித்திரி நாயகியாக நடித்தார். கே.பாலாஜி, பி.எஸ்.வீரப்பா, வி.எஸ்.ராகவன், டி.பி.முத்துலட்சுமி உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன், எஸ்.ராஜேஷ்வர ராவ் இசை அமைத்தனர். தஞ்சை ராமையாதாஸ், டி.கே.சுந்தர வாத்தியார் பாடல்களை எழுதினர்.

சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா குரலில், ‘சோலைக்குள்ளே குயிலு குஞ்சு சும்மா சும்மா கூவுது’ உட்பட சில பாடல்கள் சூப்பர் ஹிட். ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே’ பாடல் பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.

‘சல்ரே சல்ரே கோடா/ ஐயா நல்ல ஜல்சா சவாரிடா’ என்ற பாடல், இஸ்லாமிய குதிரை வண்டி ஓட்டுபவர் பாடுவது போல அமைந்திருக்கும். உருது வார்த்தைகளும் சென்னை பேச்சுவழக்கும் கலந்த இந்தப் பாடலை தஞ்சை ராமையா தாஸ் எழுதியிருந்தார். டி.எம்.சவுந்தர்ராஜன் பாடியிருந்தார். இந்தப் பாடலும் வரவேற்பைப் பெற்றது.

சாவித்திரிக்கு இதில் அப்பாவி கிராமத்துப் பெண் வேடம். அவர் சகோதரராக டி.எஸ்.துரைராஜும் காதலராக பாலாஜியும் நடித்தனர். இதில் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வந்த ஆர்.நாகேஷ்வர ராவ் கொள்ளைக்காரனாக நடித்தார். இந்தப்படம் வெளியான அடுத்த வருடம் உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்தது சோகம்.

இயக்குநர் என்று டி.எஸ்.துரைராஜ் பெயர் போடப்பட்டிருந்தாலும் படத்தை இயக்கியது, ஒளிப்பதிவாளர் கமால் கோஷ்தான் என்று அப்போது கிசு கிசு உலா வந்தது. கருப்பு வெள்ளையில் உருவான இந்தப் படத்தின் ஒளிப்பதிவு, நடிப்பு, இசை அப்போது பாராட்டப்பட்டன. 1958ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது, இந்தப் படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்