“உங்கள் ரசிக மனப்பான்மையை இப்படி காட்ட வேண்டாம்” - ரசிகர்களிடம் யஷ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: தனது பிறந்தநாளுக்காக பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 ரசிகர்களின் வீட்டுக்கு நடிகர் யஷ் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், தனது ரசிகர்கள் தங்களுடைய ரசிக மனப்பான்மையை இப்படி காட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்த் (24), முரளி (20), நவீன் (20) ஆகிய மூவரும் நடிகர் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு சூரனகி என்ற கிராமத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க முடிவு செய்தனர். நேற்று முன்தினம் (ஜன.07) நள்ளிரவில் அங்கிருந்து மின்கம்பம் ஒன்றில் ஏறி பேனரை கட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு உதவி செய்த மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ரசிகர்களின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் யஷ் அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் உறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரசிகர்கள் என்னை முழுமனதாக வாழ்த்த வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்துங்கள். அதுவே எனக்கு போதுமானது. இதுபோன்ற துயரமான சம்பவங்கள் என்னுடைய சொந்த பிறந்தநாளைக் கண்டே பயம் கொள்ளச் செய்கின்றன. உங்களுடைய ரசிக மனப்பான்மையை இப்படி காட்டக் கூடாது.

உங்களுடைய அன்பை தயவு செய்து இந்த வழியில் காட்டாதீர்கள். உங்கள் அனைவரிடமும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். பேனர் வைப்பதோ, பைக் ரேஸில் ஈடுபடுவதோ, ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பதோ வேண்டாம். என்னைப் போலவே என்னுடைய ரசிகர்களும் வாழ்க்கையில் வளரவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். என்னுடைய உண்மையான ரசிகராக இருந்தால், உங்களுடைய வாழ்க்கையை உங்களுக்காகவே மட்டும் அர்ப்பணித்து பணியாற்றுங்கள். நீங்கள்தான் உங்கள் குடும்பத்தினருக்கு அனைத்துமே. அவர்களை பெருமைப்படுத்தும் குறிக்கோளை மனதில் வையுங்கள்” என்று யஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE