ரஜினி முதல் நயன்தாரா வரை - ‘கலைஞர் 100’ விழாவில் நட்சத்திர அணிவகுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் ‘கலைஞர் 100’ விழாவில் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசிடம் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் எதிர்பாராதவிதமாக சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாலை 5 மணி அளவில் ‘கலைஞர் 100’ நிகழ்வு தொடங்கியது. இதற்காக 22,500 இருக்கைகள் தயார் செய்யப்பட்டன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய் தொடங்கி திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நடிகர் ரஜினி, கமல் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

தவிர, கார்த்தி, சூர்யா, தனுஷ், சிவராஜ்குமார், உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, வடிவேலு, சோனியா அகர்வால், ரோஹினி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான், டி.ராஜேந்திரன், ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். ஆந்திர அமைச்சர் ரோஜாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்த நடிகை நயன்தாரா இந்நிகழ்வுக்கு வருகை தந்துள்ளார்.

5 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பிரபலங்கள் ஒவ்வொருவராக தற்போது வந்துகொண்டிருக்கும் நிலையில், நிகழ்வு நிறைவு பெற நள்ளிரவு ஆகலாம் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE