அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: குடும்பத்துடன் பங்கேற்கிறார் நடிகர் ரஜினி

By செய்திப்பிரிவு

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.“பகவான் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்‌ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்து அழைப்பிதழ் வழங்கினர். அழைப்பிதழை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், இந்த விழாவில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் 21-ம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து தனது மனைவி மற்றும் சகோதரருடன் புறப்பட்டு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 22-ஆம் தேதி முழுவதுமாக அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், மறுநாள் 23-ஆம் தேதி சென்னை புறப்படுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE