கலைஞர் 100 விழா | ரஜினி, கமலுக்கு புதிய அழைப்பிதழ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கான புதிய அழைப்பிதழ் நடிகர்கள் ரஜினி, கமல் இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது. மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன்படி, தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும்விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் கடந்த நவம்பர் மாதம் நேரில் சந்தித்து அவரது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அவருக்கு ‘கலைஞர் 100’ விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கினர்.

இதனையடுத்து சென்னையில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ‘கலைஞர் 100’ விழா ஜனவரி 6ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விழாவுக்கான புதிய அழைப்பிதழை மீண்டும் ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE