திரை விமர்சனம்: நந்திவர்மன்

By செய்திப்பிரிவு

செஞ்சி வட்டாரத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்துக்கு அகழ்வாராய்ச்சியாளர் போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு வந்து தங்குகிறது. ஒரு மலையும் புதர்களும் நிறைந்த அந்த ஊரில், 8-ம் நூற்றாண்டில் புதையுண்டதாக நம்பப்படும் நந்திகேஸ்வரர் ஆலயம், அதற்குள் இருக்கும் பல்லவ மன்னன் நந்திவர்மன் பயன்படுத்திய வாள் உள்ளிட்டவற்றை அகழாய்வு மூலம் கண்டறிந்து வெளியுலகத்துக்கு அறிவிப்பதுதான் அக்குழுவின் நோக்கம். ஆனால், அகழாய்வு செய்வதை ஊர் மக்கள் எதிர்க்க, அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறார், காவல் துறை அதிகாரி குரு வர்மன் (சுரேஷ் ரவி). இதற்கிடையில் சில கொலைகளும் அமானுஷ்ய சம்பங்களும் அங்கே நடக்க, என்ன காரணம் என விசாரணை செய்கிறார் காவல் அதிகாரி. அவர் கண்டறிந்த உண்மைகள் என்ன என்பதுதான் கதை.

கற்பனை வரலாறு ஒன்றையும் சமகாலத்தையும் இணைக்கும் கதைக்களம். அதை த்ரில்லர், ஹாரர் அம்சங்கள் கலந்த திரைக்கதை மூலம் கொடுக்க முயன்று அதில் ஓரளவு வெற்றிப் பெற்றுள்ளார் அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன். குறிப்பாக நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனின் பெயரைத் தவிர்த்து, அவன் பயன்படுத்திய அரூப வாள், வீர மரணத்தின் பின்னணி என அவனைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் கற்பனை வரலாற்றைச் சித்தரிக்கும் அனிமேஷன் காட்சி, படத்துக்குள் சட்டென்று இழுத்துச் செல்கிறது.

ஆனால், பிறகுதான் சிக்கல். நிகழ்காலத்தில் வரும் கதாபாத்திரங்கள் புதிதாகப் பார்ப்பதுபோல் தோற்றம் காட்டினாலும், அவற்றுக்குத் தரப்பட்டிருக்கும் சவால்,எதிர்பார்த்த பாதையிலேயே பயணிப்பதால், திருப்பங்கள் வரும்போது கிடைக்கும் திரை அனுபவம், சுவாரஸ்யம் இல்லாமல் தட்டையான உணர்வையே கொடுக்கிறது. ஒரு மாற்றாக, இருந்திருக்க வேண்டிய அரூபவாள் தொடர்பான காட்சிகள் முன்கதையில் எடுபட்டஅளவுக்கு, நிகழ்காலக் கதையில் புதிய பரிமாணத்துடன் இல்லாமல் போய்விடுவதுடன், அதை கிராஃபிக்ஸ் காட்சியாகச் சுருக்கிவிட்டதும் ஏமாற்றமே.

படத்தின் சில சுவாரஸ்யங்களில் , கிளைமாக்ஸ் காட்சியையும், காவல் அதிகாரி–அகழாய்வாளர் இலக்கியா (ஆஷா வெங்கடேஷ்) இடையிலான காதலின் துளிர்ப்பையும் வளர்ச்சியையும் சொன்ன காட்சிகளையும் சொல்லலாம்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சுரேஷ் ரவி, இதில் காவல் அதிகாரி கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தி நடித்திருப்பதுடன், காதல் காட்சிகளிலும் தன்னால் முடிந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இலக்கியாவாக வரும் ஆஷா, தரப்பட்டக் கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார். நிழல்கள் ரவி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் ஏற்கெனவே பல படங்களில் பார்த்த உணர்வையே கொடுக்கிறார்கள். கலை இயக்குநர் முனிகிருஷ்ணன், இசையமைப்பாளர் ஜெரால்ட் ஃபெலிக்ஸ் கதைக்களம் கோரியதை ’டெலிவரி’ செய்திருக்கிறார்கள்.

நல்ல கதைக்களம் கிடைத்தும் அதைப் பழகிய பாதையில் கொண்டு சென்றதில் பந்தி வைக்கத் தவறிவிடுகிறான் இந்த நந்திவர்மன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE