திரை விமர்சனம்: மதிமாறன்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார் நெடுமாறன் (வெங்கட் செங்குட்டுவன்). அவர் உயரம் சராசரிக்குக் குறைவாக இருப்பது ஒருகுறைபாடாக உணராத வகையில்தந்தையும் (எம்.எஸ்.பாஸ்கர்) சகோதரி மதியும் (இவானா) அவர் மீது அன்பு செலுத்துகிறார்கள். கல்லூரியில் படிக்கும்போது பேராசிரியரைக் காதலித்து சென்னைக்குச் சென்றுவிடுகிறார் மதி. இதனால் மதி-நெடுமாறனின் பெற்றோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அக்காவைத் தேடி சென்னைக்கு வருகிறான் நெடுமாறன். சென்னையில் அடுத்தடுத்து பெண்கள் சிலர் கொல்லப்படுவது மற்றும் காணாமல் போவது ஆகியவற்றுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறார் நெடுமாறன். குற்றவாளிகள் யார்? நெடுமாறனுக்கும் அவன் சகோதரி மதிக்கும் நடப்பது என்ன? என்பதைச் சொல்கிறது மீதிக் கதை.

உயரக் குறைவு, குறைபாடு அல்ல என்பதையும் உருவக் கேலிஇழிவானது என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதற்காகவே அறிமுக இயக்குநர் மந்திரா வீரபாண்டியனைப் பாராட்டலாம். உயரம் குறைவான நாயகனைப் பரிதாபத்துக்குரியவராகவோ, திறமை கொண்ட சாதனையாளராகவோ சித்தரிக்காமல் இயல்பான மனிதனாகக் காண்பித்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம். எமோஷனல், த்ரில்லர் என இரண்டு வகைமைகளையும் உள்ளடக்கிய கதையைத் தொய்வின்றி சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில் வெகுஜன ரசனைக்குரிய படமாகவும் இது தேறுகிறது.

அதே நேரம் தொடர் கொலைகளுக்குப் பின்னால் உள்ளவர்களை நாயகன் கண்டுபிடிக்கக் கிளம்புவதற்கான காரணம் வலுவாகச் சொல்லப்பட்டிருக்கலாம். அது இல்லாததால் இரண்டாம் பாதியில் த்ரில்லர் பாணிக்குத் திரைக்கதை தடம் மாறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கொலையாளியை நாயகன் கண்டுபிடிப்பது நம்பகத்தன்மையுடனும் சுவாரசியமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு குற்றவாளியைக் கண்டுபிடித்த பிறகு இன்னொரு குற்றவாளி இருப்பதாகச் சொல்லி காட்சிகளை நீட்டித்திருப்பது தேவையற்றத் திணிப்பு. ஆனாலும் மொத்தப் படமும் 2 மணி நேரத்தில் முடிந்துவிடுவதால் இந்தக் குறைகள் தொந்தரவாக இல்லை.

அறிமுக நடிகர் வெங்கட் செங்குட்டுவன் வரவேற்கப்பட வேண்டியவர். புதுமுகம் என்று நம்ப முடியாத பங்களிப்பைத் தந்திருக்கிறார். முற்போக்கு எண்ணங்கள் கொண்ட தபால் ஊழியராக, தன்குழந்தைகள் மீது பேரன்புகொண்ட தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் முத்திரை பதிக்கிறார். இவானா, நாயகனின் தோழியாகவும் காவல்துறை அதிகாரியாகவும் வரும் ஆராத்யா இருவரும் குறையற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்கள். காவல்துறை ஆணையராக ஆடுகளம் நரேனும் அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாவலராக பவா செல்லதுரையும் கவனம் ஈர்க்கிறார்கள்.

வசனங்கள் படத்துக்குப் பெரிய பலம். ‘உசரத்துல என்ன இருக்கு உசுருதான் முக்கியம்’ என்னும் ஒற்றைவசனம் படத்தின் உயரிய நோக்கத்தைஅழகாகக் கடத்திவிடுகிறது. கார்த்திக்ராஜாவின் இசையில் பாடல்கள் இனிமை.பின்னணி இசையும் சரியான உணர்வுகளைக் கடத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறது. குறைகளைக் கடந்து மனதைக்கவர்கிறான் ‘மதிமாறன்’.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்