Rewind 2023: ‘வாரிசு’ முதல் ‘ஜப்பான்’ வரை - ஏமாற்றிய படங்கள்!

By கலிலுல்லா

சில படங்கள் நம் எதிர்பார்ப்பை மீறி ஹிட்டடிக்கும். தற்செயலாக பார்த்த அப்படியான படங்கள் ஃபேவரைட்டாக கூட மாறும். அதேசமயம் மிகவும் எதிர்பார்த்து தவம் கிடந்த சில படங்கள் வெளியாகும்போது, “ணோவ் விட்ருங்கணா” என ஓடவைக்கவும் செய்திருக்கின்றன. சினிமா எப்போதும் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுதானே. இயக்குநர் உள்ளிட்டோரின் முழு உழைப்பும் முதலீடாக்கப்பட்டு தான் திரைப்படங்கள் வெளியாகின்றன. வெற்றியை இலக்காக கொண்டு வரும் படங்கள் சிலசமயம் மிஸ்ஸாகிவிடுகின்றன. அப்படி 2023-ல் பல்வேறு சோகங்களுக்கு இடையே மற்றொரு சோகமாய் எதிர்பார்த்து ஏமாந்து ‘ஏன்டா வந்தோம்’ என திரையரங்குகளை நோக்கி ஓடாமல், திரையரங்கத்திலிருந்து வெளியேறி ஓடிய படங்கள் குறித்து பார்ப்போம்.

வாரிசு: தெலுங்கு இயக்குநர் வம்சியுடன் இணைகிறார் விஜய் என்ற செய்தி பரவியதும் எதிர்பார்ப்பும் கூடியது. காரணம் ‘பீஸ்ட்’ படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஒரு வெற்றி தேவையாக இருந்தது. வித்தியாசமான காம்போ என்பதால் பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்தார்கள். விஜய்யின் இன்ட்ரோ பாடலான ‘வா தலைவா’ பாடலின் சிஜியே படத்தின் தரத்தை உணர்த்தியிருந்து. இருப்பினும் வம்சி கற்றுக்கொண்ட வித்தையை இறக்கியிருப்பார் என நம்பினால், “சீரியலா இருந்தா என்ன தப்புங்குறேன்” என பட ரிலீஸுக்கு பின் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார்.

உண்மையில் அவர் ஒப்புக்கொண்டது போல படம் சீரியல் பாணி. குடும்பக் கதையில் நடித்து நாளாகிவிட்டது என்பதை வம்சி தவறாக புரிந்திருப்பார்போல. தந்தையின் தொழிலை வழிநடத்தி சகோதரர்களை நேர்வழிப்படும் புத்தம் புதிய கதையில்(?!) எல்லாமே எளிதாக கணிக்கக்கூடிய காட்சிகளாகவே அமைந்தன. இதுதான் நடக்கும் என தெரிந்த பிறகும் படத்தைப்பார்ப்பது சோர்வு. குறிப்பாக க்ளைமாக்ஸ் நெருங்கும்போது தியேட்டரின் கதவை நெருங்கி கொண்டிருந்தார்கள் சாமானிய சினிமா ரசிகர்கள். ‘வாரிசு’ பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவித்தது என கூறினாலும், இப்போது ஓடிடியில் பார்க்கும் அளவுக்கு தைரியம் வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

மைக்கேல்: ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவான இப்படம் அதன் ட்ரெய்லர் உள்ளிட்ட விளம்பர அம்சங்களால் கவனத்தை ஈர்த்தது. படத்தின் கலர் டோன், பின்னணி இசை, ஒளிப்பதிவு ரசிக்க வைத்தது. ஆனால், ‘கேஜிஎஃப்’ படத்தின் சாயலும், கேங்க்ஸ்டர் கதைக்கான அழுத்தமோ இல்லாததும், தேவையில்லாத ஹைப், கதைக்குத் தொடர்பில்லாத ரொமான்ஸ், லாஜிக் மீறல்கள் படத்தை மொத்தமாக சறுக்கிவிட்டது. இருந்தாலும், ரஞ்சித் ஜெயக்கொடி படத்துக்கு பின்னான எதிர்மறை விமர்சனஙகளை ஏற்றுக்கொண்டார். எந்த விளக்கமும், பொய்யான ஃப்ளாஷ்பேக் என எதையும் சொல்லாதது பாராட்டத்தக்கது.

ராவண கோட்டம்: ‘மதயானைக் கூட்டம்’ லேட்டாகத்தான் பிக்அப் ஆனது. இருந்தாலும் அப்படியான படத்தை கொடுத்த இயக்குநரின் படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. சாந்தனு, ஆனந்தி, பிரபு நடித்திருந்த இப்படம் ‘கீழத்தூவல் படுகொலை’, சீமைக் கருவேல மர பிரச்சினை, கார்ப்ரேட் மாஃபியா என பல்வேறு விஷயங்களை கையிலெடுத்தது. ஆனால் எதுவுமே அழுத்தமாக இல்லாமல் மேலோட்டமாக இருந்ததும், ‘குனிஞ்சித்தான் கிடந்தவன அட நிமிர்ந்துதான் நடக்க வைச்சாரு’ என ஆதிக்க மனநிலையை வெளிப்படுத்தும் பாடல் வரிகளும், ஆதிக்க சாதியத்துக்கு ஆதரவான நுணுக்கமான அம்சங்களும் இருந்தது கவனிக்கவைத்தது.

தவிர, முதல் பாதி வழக்கமான காட்சிகளால் நகர, இரண்டாம் பாதி எதிர்பார்க்க வைத்து ஏமாற்றமளித்தது. சாதி, தண்ணீர் பஞ்சம், கார்பரேட், தவறாகப் புரியப்படும் காதல் எனச் செல்லும் திரைக்கதை, இறுதியில் அங்கும் இங்குமாகச் சென்று ஓர் அதிர்ச்சியைக் கொடுக்கும். ஆனால் அந்த அதிர்ச்சி, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நகர்வது பெரும் பலவீனம். “மதயானைக்கூட்டம் படம் வந்தபோதே ஆதரவு கொடுத்திருந்தால், 10 வருடகாலத்தை வீண்டித்திருக்க வேண்டியதில்லை” என்ற ஆதங்கத்தையும் இயக்குநர் முன்வைத்தது கவனிக்கத்தக்கது.

வீரன்: ‘மரகதநாணயம்’ புகழ் ஏஆர்கே.சரவணன் இயக்கத்தில் ஆதி நடிக்க ‘தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ படம்’ என்ற ஆர்வத்தை தூண்டியது. அதற்கான விளம்பரங்களும் மேற்கொள்ளப்பட்டன. சூப்பர் ஹீரோ கதையை நாட்டார் தெய்வ வழிபாட்டுக்குள் பொருத்தியிருந்த ஒன்லைன் சுவாரஸ்யம் தான். ஆனால் அது பேப்பரில் மட்டும் இருந்தது தான் சோகம். நிறைய கேள்விகள் தான் படம் முழுவதும் இருந்தது. கிராம மக்கள் நாட்டார் தெய்வத்தை புறக்கணிக்க காரணம் என்ன? ஹீரோவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா, காமெடி சயின்டிஸ்ட் வில்லன், ஹிப்னாடிஸம், மின் சக்தியை வரவழைத்து எதிரிகளை பறக்க விடுவது, பாடல்கள், காதல் காட்சிகள், நீளம் என ஏதாவது ஒரு சூப்பர் ஹீரோ வந்து நம்மை காப்பாற்றமாட்டாரா என ஏங்க வைத்தது படம்.

எல்ஜிஎம்: தோனி புரொடக்‌ஷன், ஹரிஷ் கல்யாண் காம்போ படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் 2019-ல் உலக கோப்பை அரையிறுதியில் தோனி ரன்அவுட் ஆன போது ஏற்பட்ட சோகத்தை விட பன்மடங்கு சோகத்தை கொடுத்த அதிசோக படைப்பு. தமிழ்நாட்டு மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு கைமாறாக தனது முதல் தயாரிப்பு தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை தயாரித்ததாக தோனி கூறியிருந்தார். உங்கள் அன்புக்கு நன்றி தோனி. ஆனால் இப்படியான கைமாறு மட்டும் இனி வேண்டாம். ப்ளீஸ்!

கோவாவுக்குச் சென்று ஷாப்பிங் செய்வது, செல்ஃபி எடுப்பது, பார்ட்டிக்கு செல்வது, போதை மருந்து சாமியார் மடத்தில் சிக்கிக்கொள்வது, காட்டில் புலியைக் கடத்திச் செல்பவர்களின் வாகனத்தில் புலியுடன் சிக்கிக்கொள்வது என தறிகெட்டும் ஓடும் திரைக்கதையைப்பார்த்து தெறித்து ஓடிய ரசிகர்கள் ஏராளம். இந்த ஆண்டில் மறக்க வேண்டிய நினைவுகள் அவை!

கஸ்டடி: உண்மையில் இப்படியொன்ற எதிர்பார்க்கவில்லை வெங்கட்பிரபு அவர்களே! ‘மாநாடு’ கொடுத்த நம்பிக்கையில் தானே வந்தோம். ஆக்‌ஷன் படம் என்பதை நிறுவ பரபர சேஸிங், சண்டைகள் என படம் முழுக்க இருந்தும் பார்க்கும் நமக்கு அவை எந்தவொரு பதட்டமோ, பரபரப்போ ஏற்படாத பலவீனமான திரைக்கதை ஒருபுறமும், வெங்கட்பிரபு படங்களில் இடம்பெறும் வழக்கமான காமெடியும் மிஸ்ஸிங். கேமியோ ரோல் செய்திருக்கும் ராம்கிக்கு ஏஜெண்ட் பிலிப் என்று ‘விக்ரம்’ படத்தை ஸ்பூஃப் செய்து வைத்திருக்கும் காட்சிகள், எமோஷனல் அம்சங்களுக்காக வைக்கப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சி என எதுவுமே மனதில் தேங்கவில்லை. மாறாக தூங்கதான் வைத்தது.

இறைவன்: அகமது இயக்கத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு ஜெயம்ரவி படத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதன் அவுட்டேடட் திரைக்கதை மொத்த எதிர்பார்ப்பையும் சுக்குநூறாக்கியது. திணிக்கப்பட்ட காதல், தேவையற்ற பாடல், எமோஷனல் இல்லாத நட்பு, அழுத்தமில்லாத வில்லன் கதாபாத்திரம், நாயகன் குற்றவாளியை எந்தவித பெரிய சிரமும் இல்லாமல் உடனுக்குடனே நெருங்கிவிடுவதும், நியாயம் சேர்க்கும் காட்சிகள் இல்லாமல் வெறுமேனே சைக்கோ கொலைகாரனுக்கு ஹைப் கொடுப்பதும் என ஏகப்பட்ட சிக்கலுக்குள் சிக்கிய படம் நம்மையும் சிக்கலில் மாட்டி விட்டது. திரையரங்குக்குள்ளேயே ‘இறைவா!’ என பிரார்த்தித்தவர்களுக்கு கருணை காட்டியிருந்தது அந்த கடைசி ட்விஸ்ட் மட்டுமே.

ரத்தம்: சிஎஸ் அமுதனின் முந்தைய படங்கள் ஏற்படுத்திய தாக்கமும், அவரின் சீரியஸான முயற்சியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது. ஆனால், படத்தின் டைட்டிலை வைத்தே குறிப்பால் உணர்த்தியிருந்தது பின்புதான் புரிந்தது. யூகிக்கக் கூடிய திருப்பங்கள், ஆமை வேகத்தில் நகரும் காட்சிகள், தொடர் கொலைகளை திரைக்கதையில் விளக்காமல், பேசிக்கொண்டேயிருந்து என படம் முழுவதும் ரத்தம் வரத்தான் செய்தது. ‘வெறுப்புக் குற்ற’ங்களைப் பேசியதற்காகவும் அதற்காக உளவியல் ரீதியாக இளைஞர்களைத் தேர்வு செய்து எப்படி அவர்களைத் தூண்டுகிறார்கள் என்பதைச்சொன்னதற்காகவும் சி.எஸ்.அமுதனைப் பாராட்டலாம். ஆனால், இந்த விஷயங்கள் அனைத்தையும் கொண்டதிரைக்கதை, அழுத்தமான தாக்கத்தைத் தர மறுப்பதுதான் படத்தின் பெருங்குறை.

சந்திரமுகி 2: இந்த ஆண்டில் நிகழ்ந்த சோகம் ஒருபுறம் இருந்தாலும், புத்தாண்டிலும் படத்தை சேட்டிலைட் சேனல் ஒன்றில் ஒளிபரப்புவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் ஆண்டாவது இனிய ஆண்டாக அமையட்டுமே!. லாரன்ஸின் இன்ட்ரோ காட்சி மட்டும் போதும். மொத்த படத்துக்கும் ஒரு சோறு பதம். எதை நோக்கி செல்கிறது என்பதே தெரியாமல் ஓடும் திரைக்கதையில், ஆங்காங்கே வரும் காமெடி தண்டனை வேறு. எந்த வகையிலும் சுவாரஸ்யம் கூட்டாத பழிவாங்கல் திரைக்கதையில் இறுதியில் பழிவாங்கப்பட்டது என்னமோ ஆடியன்ஸ் தான்.

ஜப்பான்: ராஜூமுருகன் + கார்த்தி காம்போவே தீபாவளியை களைகட்ட வைக்கும் என எதிர்பார்த்து சென்றவர்கள் களைத்து தான் போனார்கள். சரவெடியாக வெடிக்க வேண்டிய இந்த தீபாவளி பூஸ்வானமாய் போனதற்கு அழுத்தமே இல்லாமல் போன திரைக்கதை தான் காரணம். கொள்ளைக்காரனான நாயகன், பெருமைக்காக சினிமா நாயகனாகவும் நடிப்பதாகக் காட்டும் காட்சிகள் மிகையான கற்பனை.

ஒருகட்டத்தில் கொள்ளைக்கார நாயகனுடன் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து பயணிப்பது போன்ற காட்சிகள் பூச்சுற்றல். “அவன் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா” என பில்டப்புகளால் போற்றப்படும் நாயகன் அப்படி என்னதான் செய்தார் என்பதை கடைசீவரை சொல்லாமல் போனது, கவர்ச்சி பொம்மையாக அனு இமானுவேல் கதாபாத்திரம், லாஜிக் ஓட்டைகளால் இழுக்கப்பட்ட படம் இறுதியில் ‘அதுல ஒண்ணுமில்ல தூக்கி போட்ரு’ என வசனத்தைத்தான் நினைவூட்டியது. படத்தில் வரும் அரசியல் ஒன்லைன்கள் கவனிக்க வைத்தன.

சலார்: தமிழ் சினிமாவை கடந்து சென்றால் பான் இந்தியா பேனரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘சலார்’ விட்ட பளார் அறை இன்றும் காதுகளில் சத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பில்டப்புகளும், நினைவில் வைக்க போராடும் அளவுக்கான அதீத கதாபாத்திரங்களும், நியாயம் சேர்க்காத வன்முறைக்காட்சிகளும், தொய்வான திரைக்கதையும் பிரசாந்த் நீல் மீதான பிம்பத்தை அசைத்துப்பார்த்தது. கலவையான விமர்சனங்கள் இருந்த போதிலும், ஒரே மாதிரியான கதையமைப்பு அயற்சி. ‘கேஜிஎஃப்’ படத்துக்கு அம்மா சென்டிமென்ட் கைகொடுத்தது. அதையே இப்படத்தில் நட்பு சென்டிமென்டாக மாற்றியிருப்பதும் புதுமை சேர்க்காத வறட்சியான காட்சிகளும் எதிர்பார்ப்பை நொறுக்கிவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்