நடிகர் விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவர், பத்தாம் வகுப்போடு படிப்பை முடித்துவிட்டு, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான ரைஸ் மில்லை கவனித்து வந்தார். சிறு வயதில் இருந்தே அவருக்கு சினிமா ஆசை. அதன் மீதான ஆர்வத்தால் தனது நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தருடன் சென்னைக்கு வந்தார்.
சென்னையில் பல அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் முதலில் சந்தித்தார். சிவப்பான நடிகர்கள் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. விஜயராஜை நடிக்க வைக்க எந்த நிறுவனமும் இயக்குநர்களும் உடனடியாக முன் வரவில்லை.
ஆனால் தனது முயற்சிகளை கைவிடாத விஜயகாந்த், தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடி வந்தார். அவர் முயற்சிக்கு ஒரு கட்டத்தில் பலன் கிடைத்தது. சுதாகர், ராதிகா நடித்து 1979-ல் வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தில் வில்லனாக அறிமுகமானார் விஜயராஜ். இதை எம்.ஏ.காஜா இயக்கி இருந்தார். இவர்தான் விஜயராஜின் பெயரை விஜயகாந்த் என மாற்றியவர். இந்தப் படம் அதிக வரவேற்பைப் பெறவில்லை.
அடுத்து, அன்னக்கிளி ஆர்.செல்வராஜ் இயக்கிய ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இதுவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அடுத்து நடித்த, நீரோட்டம், சாமந்திபூ ஆகிய படங்களும் தோல்வியைத் தழுவின.
முதல் வெற்றி: தனக்கான வெற்றி தேடிவரும் என்று காத்திருந்தார். அடுத்து, விஜயன் இயக்கிய ‘தூரத்து இடி முழக்கம்’ படம் அவரைக் கவனிக்கவைத்தது. இந்தப் படம் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’படம்தான் விஜயகாந்தின் முதல் வெற்றி படம். முந்தைய தோல்விகளின் கவலையை, இந்தப் படத்தின் வெற்றி மறக்கடித்தது. அவருக்கு இந்தப்படம் நட்சத்திர அந்தஸ்தையும் கொடுத்தது.
இதற்குப் பிறகுதான் தயாரிப்பாளர்கள், விஜயகாந்தைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கினர். எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் தொடர்ந்து நடித்தார், அவர். ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘ஓம் சக்தி’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து நடித்தார்.
‘சிவப்பு மல்லி’ படத்தில் கம்யூனிஸ்ட்டாக நடித்த அவர், பல படங்களில் கோபக்கார இளைஞனாக, அதிகாரத்துக்கு எதிராகக் கேள்விக்கேட்கும் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். இந்தப் படங்கள் அவரை கிராமங்களுக்கும் கொண்டு சென்றன. ஹீரோவாக நடித்து வந்தபோது, எஸ்.ஏ.சியின் ‘ஓம் சக்தி’ என்ற படத்தில் வில்லனாக நடித்தார். முதல் படத்துக்குப் பிறகு அவர் மீண்டும் வில்லனாக நடித்தப் படம் இது. பிறகு அவர் வேறு படங்களில் வில்லனாக நடிக்கவில்லை.
நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்: விஜயகாந்தின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தவர், அவரது நண்பர், தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர். சென்னையில் அவருடன் இருந்து ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்ட விஜயகாந்த், பிறகு படிப்படியாக முன்னேறினார். அவருக்கு மேனேஜராகவும் ராவுத்தர் செயல்பட்டார். அவருக்கான கதைகள் கேட்டு ஓகே செய்வது ராவுத்தர்தான். இப்போது விஜயகாந்த் மினிமம் கேரண்டி நடிகராக மாறியிருந்தார். இதனால் அவருக்கு அதிக வாய்ப்புகள் வரத் தொடங்கின.
ஒரே வருடத்தில் 18 படங்கள்: த்ரில்லர், ரொமான்ஸ், சென்டிமென்ட் படங்களிலும் நடிக்கத் தொடங்கிய விஜயகாந்த், தொடர்ந்து காலை, மாலை, இரவு என நடிப்பில் பிசியானார். அவர் கால்ஷீட் ஃபுல்லாகி இருந்தது. 1984-ம் ஆண்டில் மட்டும், அவர் நடித்த 18 திரைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதில், நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் படங்கள் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்ட்டில் சேர்ந்தது.
வைதேகி காத்திருந்தாள் பாடல்கள் அப்போது எங்கெங்கும் ஒலித்துக்கொண்டி ருந்தன. கமல்ஹாசனுடன் இணைந்து ‘மனக்கணக்கு’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.
சிவாஜி கணேசனுடன் ‘வீரபாண்டியன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். சூப்பர் ஹிட்டான ‘ஊமை விழிகள்’ படத்தில் வித்தியாசமான கேரக்டரில், வயதான போலீஸ் அதிகாரியாக நடித்தார். இந்த கேரக்டர் பேசப்பட்டது. இதற்கு பிறகு ரஜினி, கமல் ஒரு பக்கம் நடித்துக்கொண்டிருக்க விஜயகாந்த் இன்னொரு பக்கம் வேகமாக வளர்ந்தார்.
90-களில் வித்தியாசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரங்கள் அவருக்குக் கிடைத்தன. அநியாயங்களுக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகளை போலீஸ் உடையில் அவர் பந்தாடிய காட்சிகளை மக்கள் அதிகம் ரசித்தார்கள். அவர், காலைச் சுற்றி வில்லன்களை அடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் ரசிக்கப்பட்டன.
கேப்டன் ஆனார்: ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘புலன் விசாரணை’ அவருக்குத் திருப்புமுனை படமாக அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றியால் இயக்குநர் செல்வமணியை அழைத்து தனது நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை இயக்கச் சொன்னார் விஜயகாந்த். வனத்துறை அதிகாரியாக விஜயகாந்த் நடித்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. வசூலிலும் சாதனைப் படைத்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதாவுக்கு பிறகு தனது 100-வது படத்தில் வெள்ளிவிழா கண்ட நடிகர் விஜயகாந்த் மட்டுமே என்கிறார்கள். இந்தப் படத்துக்குப் பிறகுதான் விஜயகாந்த், ரசிகர்களால் ‘கேப்டன்’ என்று அழைக்கப்பட்டார்.
இயக்குநர் விஜயகாந்த்: தனது திரை அனுபவங்களை வைத்து ‘விருதகிரி’ என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார். அதன் பிறகு ஐந்து வருடங்கள் படங்களில் நடிக்காமல் இந்த விஜயகாந்த், 2015-ம் ஆண்டு தனது மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக அறிமுகமான ‘சகாப்தம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அடுத்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் சண்முகபாண்டியனுடன் நடிக்க இருந்தார். படத்துக்கான பூஜை போடப்பட்டது. ஆனால், படம் தொடங்கப்படவில்லை. பிறகு விஜயகாந்த் சினிமா பக்கம் வரவில்லை. அவர் 154 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
உதவிகள்: 90-களில் விஜயகாந்தின் அலுவலகத்தில் மாதக் கடைசியில் ஒரு பெரிய லிஸ்ட் மணியாடர் கட்டு இருக்கும். அதெல்லாம் மாதாமாதம் அவர் அனுப்பும் கல்வி உள்ளிட்ட உதவி தொகைகள். அவர் உதவியால் பலர் மருத்துவர்களாகவும் உயர் படிப்புகளையும் முடித்திருக்கிறார்கள் என்கிறார்கள் அவருக்கு வேண்டியவர்கள்.
சிவபெருமானாக... திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்த விஜயகாந்த், ‘மீனாட்சி திருவிளையாடல்’ என்ற பக்தி படத்திலும் நடித்துள்ளார். அதில் சிவபெருமானாக நடித்தார். ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த விஜயகாந்துக்கு வேறொரு இமேஜை கொடுத்த படம், ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘சின்ன கவுண்டர்’. விஜய்யுடன் ‘செந்தூரபாண்டி’ படத்திலும் சூர்யாவுடன் ‘பெரியண்ணா’ படத்திலும் நடித்துள்ளார்.
90-களில் ஆக்ஷனின் கலக்கிய விஜயகாந்த், 2000-ம் ஆண்டில் சென்டிமென்ட் படங்களிலும் நடித்தார். விக்ரமன் இயக்கத்தில் அவர் நடித்த ‘வானத்தை போல’ வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ‘ரமணா’, காமெடி படமாக உருவான ‘எங்கள் அண்ணா’ உட்பட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
எப்போதும் உண்டு சாப்பாடு: விஜயகாந்தின் அலுவலகம் தி.நகர் ராஜாபாதர் சாலையில் இருந்தது, அப்போது. ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகமும் அதுதான். அங்கு மதியம் சென்றால், யார் சென்றாலும் சாப்பிடலாம் என்ற நிலை இருந்தது. சாப்பாடும் சாதாரண சாப்பாடு இல்லை. விஜயகாந்த், ராவுத்தர் சாப்பிடும் அதே உணவுதான் அனைவருக்கும். அந்தப் பகுதி ஆட்டோ டிரைவர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் அங்கு சாப்பிடுவதற்காகவே செல்வார்கள்.
நடிகர் சங்க கடன்: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக 1999-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். அப்போது நடிகர் சங்கத்துக்கு, ரூ.4.75 கோடி கடன் இருந்தது. அதை வங்கியில் பேசி வட்டியை தள்ளுபடி செய்ய வைத்தார். அதை ஏற்றுக்கொண்டு, ரூ.1.68 கோடியை கட்டச் சொன்னது வங்கி. அதற்காக சிங்கப்பூர், மலேசியாவில் நட்சத்திரக் கலை விழா நடத்தி, நடிகர் சங்கத்தின் அந்தக் கடனை அடைத்தார் விஜயகாந்த். அதோடு சங்கத்துக்காக ரூ.1 கோடியை டெபாசிட்டும் செய்தார். சிறிய வேடங்களில் நடிக்கும் நடிகர்களையும் சங்கத்தில் சேர்த்து, நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago