சினிமாவில் தடம் பதிக்க போட்டோ எடுத்து தந்த மதுரை ‘ராசி’ - விஜயகாந்த் இளமைப் பருவ நினைவு பகிரும் ஆசைத்தம்பி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மறைந்த திரைப்பட நடிகர் விஜயகாந்த் சினிமாவில் சாதிக்க போட்டோ எடுத்துத் தந்த அனுபவத்தைப் பற்றி மதுரை ஸ்டூடியோ உரிமையாளர் ஆசைத்தம்பி தனது அனுபவங்களை உருக்கமாக பகிர்ந்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மிக அருகிலே மேற்கு மாசி வீதியில் நடிகர் விஜயகாந்த் வீடு உள்ளது. இந்த வீட்டில் தற்போது விஜயகாந்த் தம்பி செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த வீட்டில்தான் விஜயகாந்த் பிறந்து சினிமாவுக்கு செல்லும் வரை வளர்ந்துள்ளார். இந்த வீட்டின் பெயர் ஆண்டாள் இல்லம். அவரது தாய் ஆண்டாள். அவரது நினைவாகவே அவரது தந்தை அழகர் சாமி இந்த வீடடுக்குகு பெயரை சூட்டியுள்ளார். அதற்கு முன் விஜயகாந்த் குடும்பத்தினர் இதே இடத்தில் ஓட்டு வீட்டில் வசித்துள்ளனர். இந்த வீட்டில் இருந்துகொண்டுதான் அவரது சினிமாவுக்கு செல்ல முயற்சி செய்துள்ளார்.

இந்த வீட்டின் அருகே மேலமாசி வீதியில்தான் மதுரையின் மிக பழமையான சென்ட்ரல் தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில் விஜயகாந்த், சிறு வயது முதலே திரைப்படங்களை பார்த்துதான் சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் இளமைப் பருவத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள விஜயகாந்துக்கு, அதற்கு மேல் படிப்பு வரவில்லை. மதுரை கீரைத்துரையில் உள்ள தந்தையின் அரிசி ஆலையில் சிறிது காலம் பணிபுரிந்தள்ளார். அதன்பிறகு அந்த தொழிலிலும் நாட்டமில்லை.

மதுரை கரிமேடு பகுதிக்கு விஜயகாந்த் வருகை: நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு மதுரை தியேட்டர்களில் படம் பார்ப்பது, ஊரை சுற்றுவதுமாக இருந்து வந்துள்ளார். அப்படி அவர் தனது நண்பர்களுடன் அடிக்கடி செல்லும் இடமாக தற்போதைய புதுஜெயில் ரோடு உள்ள கரிமேடு. பிற்காலத்தில் 'கரிமேடு கருவாயன்' என்ற படத்தில் நடிப்பதற்கும், இந்த கரிமேடு பகுதிக்கும் ஒரு தொடர்பு இருந்துள்ளது.

கரிமேடுக்கு அருகே மதுரை ரயில் நிலையத்தில் வேலைபார்த்த சிலர், விஜயகாந்த்துக்கு அந்த காலத்தில் நண்பர்களாக இருந்துள்ளனர். அவர்களை பார்க்க, நண்பர்களுடன் விஜயகாந்த் கரிமேடு பகுதிக்கு வந்து செல்வராம். அப்போது கரிமேட்டில் உள்ள ஆசைதம்பியின் மாநகராட்சி கடை எண்-62ல் உள்ள 'ராசி' ஸ்டூடியோவுக்கும் வந்து செல்வராம். இந்த ஸ்டூடியோதான் விஜயகாந்த் சினிமாவுக்கு அடித்தளமாக இருந்துள்ளது. இந்த ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள்தான், சினிமாவுக்கு வாய்ப்புகளை தேடி தந்துள்ளது.

அதன்பிறகு அவரது நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் சென்னை சென்று திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த ஸ்டியோ தற்போது வரை மதுரையில் அதே இடத்தில் அதே பெயரில் ஆசைதம்பி நடத்தி வருகிறார். தற்போது அவருக்கு வயது 73. விஜயகாந்த்தை வைத்து எடுத்த பழைய ஸ்டில்களை, அவரது ஸ்டூடியோவில் இன்றும் வைத்துள்ளார்.

ஸ்டூடியோ உரிமையாளர் ஆசைத்தம்பி பேட்டி: ஆசைதம்பி கூறுகையில், ''விஜயராஜ் (விஜயகாந்த்) கரிமேட்டில் உள்ள எனது ஸ்டூடியோ அருகே நண்பர்களுடன் தினமும் வந்து அமர்ந்து சீன் பை சீனாக பேசிவார். தாங்கள் அன்றாடம் பார்த்த சினிமா படங்களை பற்றி என்னோட ஸ்டூடியோ பக்கம் அமர்ந்துதான் பேசுவார்கள். வேலையில்லாதபோது நானும் அவர்களுடன் அமர்ந்து பேசி அரட்டை அடிப்பேன். இப்படி எங்கள் நட்பு தொடர்ந்தது.

மதுரையில் உள்ள ராசி ஸ்டூடியோ

என்னோட ஸ்டூடியோ தவிர, அந்த காலத்தில் விஜயகாந்த் தனது நண்பர்களுடன் மதுரையில் உள்ள திரைப்பட விநியோக நிறுவனமான சேனாவின் பிலிம்ஸ் அருகே ஒன்று கூடுவார்கள். சேனா பிலிம்ஸின் உரிமையாளர் விஜயகாந்தின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார். ஒரு நாள் அவர், விஜயகாந்திடம் படங்களில் நடிக்க ஆர்வமா என்று கேட்டுள்ளார். அதுவரை விஜயகாந்த்துக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததே தவிர, நடிக்க போகனும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. நண்பர்களின் அழுத்தத்தால், விஜயகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து சேனா பிலிம்ஸ் ஊழியர்கள், மேலமாசி வீதியில் உள்ள ஒரு ஸ்டூடியோவுக்கு அனுப்பி உள்ளார். அந்த ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள் சரியாக வரவில்லை. உடனே, சேனா பிலிம்ஸின் ஊழியர்கள், கரிமேட்டில் என்னோட 'ராசி' ஸ்டூடியோவை குறிப்பிட்டு அங்கு ஒருத்தன் ரசனையாக படமெடுப்பான் என்று போக சொல்லியுள்ளனர்.

'ராசி ஸ்டூடியோ' - ஆசைத்தம்பி

விஜயகாந்த், எனக்கு அதற்கு முன்பே அறிமுகம் என்பதால், அவர் என்னை தெரியும் என்று என்னோட ஸ்டூடியோவுக்கு வந்தார். நான் அவரை விதவிதமான ஸ்டில்கள் எடுத்தேன். அப்போது இந்த காலத்தைபோல் இல்லை, உடனே படத்தை எடுத்துக் கொடுத்துவிட முடியாது. ஸ்டில் எடுத்தால் அதைப் பார்க்க 2 மணி நேரத்துக்கு மேலாகும். அந்தக் காலத்தில் சினிமா ஸ்டில்கள்தான், ஒருவர் நடிகராகுவதற்கும், சினிமா கம்பெனிகளுக்குள் நுழைவதற்கு துருப்புச் சீட்டாக இருந்தது. அப்படி நான் எடுத்த ஸ்டில்களை பல சினிமா கம்பெனிகளுக்கு விஜயகாந்த் அனுப்பி வைத்தார். அந்த ஸ்டில்கள்தான் அவருக்கு முதல் படமான 'இனிக்கும் இளமை' பட வாய்ப்பை தேடிக் கொடுத்தது. அது முதல் என்னோட ஸ்டூடியோவும் சினிமா ஸ்டில்கள் எடுப்பதற்கு பிரபலமானது. என்னோட தொழிலும் விஸ்திரமானது.

என்னோட குழந்தைகளை இன்ஜினிரிங் படிக்க வைத்து அவர்கள் இன்று அமெரிக்காவில் உள்ளனர். விஜயகாந்த் சினிமாவில் சென்று பல வெற்றிப் படங்களில் நடிக்க தொடங்கியபிறகும் கூட எனக்கும் அவருக்குமான நட்பு தொடர்ந்தது. மதுரை வந்தால் என்னை அழைத்து பேசுவார். காலப்போக்கில் கொஞ்சம், கொஞ்சமாக அது குறைந்து அதன்பிறகு அவரை நான் பார்க்க முடியவில்லை. நம்முடன் பழகிய மதுரைக்காரர் ஒருவர், இன்று சினிமாவிலும், அரசியலிலும் உச்சத்தில் இருக்கிறார் என்று தூரத்தில் நின்று மகிழ்ச்சியடைந்து கொள்வேன்'' என்றார். விஜயகாந்திற்கு ஸ்டில் எடுத்த பழைய கேமராக்களை ஆசை தம்பி தன்னுடைய 'ராசி' ஸ்டூடியோவில் தற்போதும் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்