‘‘ஒரு திரைப்படத்தை உருவாக்குவது எளிது, சிறந்த படத்தை உருவாக்குவது போர் (war), மிகச் சிறந்தப் படத்தை எடுப்பது அதிசயம்’’ - திரைப்பட உருவாக்கம் பற்றி இப்படிச் சொல்லியிருந்தார் ‘ரெவனன்ட்’ படத்தை இயக்கிய அலெஜான்ட்ரோ கோன்சாலஸ் இனாரிட்டு (Alejandro Gonzalez Inarritu). ஒவ்வொரு இயக்குநருமே அப்படியொரு சிறந்த, மிகச்சிறந்த படத்தை எடுத்துவிடும் முயற்சியில்தான் இருக்கிறார்கள். ஆனால், அந்த ‘அதிசயம்’, எப்போதாவது மட்டுமே நடக்கிறது. அதனால்தான் அது அதிசயம்! அவர் சொல்லும் அதிசயம் இல்லை என்றாலும் தமிழில் பல அறிமுக இயக்குநர்கள், நம்பிக்கைக்குரியவர்களாக அதை நெருங்கி வந்திருக்கிறார்கள் இந்த வருடம்!
ஒவ்வொரு வருடமும் தமிழில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடம், கடந்த வெள்ளிக்கிழமை வரை 235 படங்கள் வெளியாகி இருக்கின்றன. பெரும் பட்ஜெட் படங்கள் கோடிகளைக் கொட்டி கோடிகளை அள்ளினாலும் அறிமுக இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகம் வரவேற்பைப் பெற்றுள்ளன, 2023-ல். ஒரே வருடத்தில் அதிகமான அறிமுக இயக்குநர்கள் கவனிக்கப்பட்டிருப்பதும் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியத்தை கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் கோலிவுட்டில். அவர்கள் பற்றிய விவரம்...
கணேஷ் கே.பாபு: இந்த வருடத் தொடக்கத்திலேயே ‘டாடா’ படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார், கணேஷ் கே.பாபு. கவின், அபர்ணா தாஸ் காதலர்கள். திருமணத்துக்கு முன்பே தாய்மை அடையும் அபர்ணா, வறுமை காரணமாக பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட, குழந்தையை வளர்க்கும் பொறுப்பு கவினுக்கு வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்ற கதையை சுவாரஸ்யமாக படமாக்கி இருந்தார்.
மந்திரமூர்த்தி: சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி நடித்த ‘அயோத்தி’ மூலம் அறிமுகமாகி இருக்கிறார் இவர். மதம் கடந்த மனிதநேயத்தை வலியுறுத்திய இந்தப் படம் உணர்வு ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
விநாயக் சந்திரசேகரன்: குறட்டையை மையமாக வைத்து ‘குட்நைட்’ என்ற ‘ஃபீல்குட்’ படம் தந்தவர் இவர். மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரின் நடிப்பு இந்தப் படத்துக்கு பலமாக அமைந்தது.
விக்னேஷ் ராஜா: அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்த ‘போர் தொழில்’ மூலம் கவனிக்க வைத்தவர் விக்னேஷ் ராஜா. ஒரு கிரைம் த்ரில்லர் படத்தை விறு விறுப்பாகவும் பரபரப்பாகவும் ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு சென்று ரசிக்க வைத்தார்.
ராம் சங்கையா: கிராமத்து உறவுகளையும் சுயநல மனங்களையும் ‘தண்டட்டி’ வழியே கலகலப்பாகச் சொன்னவர், ராம் சங்கையா. இந்தப் படத்தில் பசுபதி, ரோகினி உட்பட அனைவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர்.
ராம்குமார் பாலகிருஷ்ணன்: ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா நடித்த ‘பார்க்கிங்’ படத்தைத் தந்தவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். சாதாரண பார்க்கிங் பிரச்சினையால் ஏற்படும் ஈகோ, எந்தளவுக்கு மனிதனை கொண்டு செல்கிறது என்பதை அளவாக, அழகாகத் திரைக்கதையாக்கி இருந்தார் இவர்.
டி.அருள் செழியன்: விதார்த், யோகிபாபு நடித்த ‘குய்கோ’ படத்தை இயக்கிய அருள் செழியன், பிரீஸர் பாக்ஸ் பின்னணியில், ஒரு காமெடி கதையை அழகாகச் சொல்லியிருந்தார், இந்தப் படத்தில். யதார்த்தம் மீறாத அந்தப் படத்தை வெறும் காமெடி என்று கடந்துவிட முடியாது.
ஹரிஹரன் ராம்: ரியோ ராஜ் நடிப்பில் உருவான ‘ஜோ’ படத்தை இயக்கியவர் இவர். கல்லூரி காதல், மோதல், விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டவர்களின் மனப்போராட்டம் ஆகியவற்றை ரசனையாகக் கையாண்டிருந்தார், இந்தப் படத்தில்.
ரவி முருகையா: விதார்த், சரவணன் நடித்த ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தை இயக்கியவர். ஒரு புதையல், கிராமத்துக்குள் கொண்டு வரும் வில்லங்கத்தை லாஜிக்கான நகைச் சுவையோடு சொல்லியிருந்தார்.
ரா.வெங்கட்: காளி வெங்கட், பூ ராமு நடித்த கிடா படத்தை இயக்கியவர் இவர். பேரனின் ஆசையை நிறைவேற்ற வறுமையில் இருக்கும் தாத்தா என்ன செய்கிறார் என்பதை அசலான வாழ்க்கை மூலம் காண்பித்திருந்தார் படத்தில்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago