Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை - டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

By கலிலுல்லா

தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு காரணமாக இருந்தாலும், உச்ச நட்சத்திரங்களின் ரசிகர்கள் பட்டாளமும் வியூஸ்களுக்கு காரணமாகிவிடுகிறது. ஏனென்றால், இதே ஆண்டில் சில ரிபீட் மோட் பாடல்களான ‘மாமன்னன்’ படத்தில் வரும் ‘ராசாகண்ணு’, ‘நெஞ்சமே நெஞ்சமே’, ‘சித்தா’ படத்தில் ‘கண்கள் ஏதோ’ பாடல்கள் வெளிவந்த போதிலும் வியூஸ் கணக்கில் குறைவாகவே உள்ளன. விஜய்யின் குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில், அவர் பாடிய இரண்டு பாடல்கள் டாப் 10-ல் இடம்பெற்றுள்ளன.

காவாலா (லிரிக்கல்): நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ லிரிக்கல் வீடியோ பாடல் 22 கோடி (228 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜின் வரிகளில் உருவான இப்பாடலை ஷில்பா ராவுடன் இணைந்து அனிருத் பாடியுள்ளார்.

நான் ரெடி (லிரிக்கல்): லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ‘நான் ரெடி தான் வரவா’ லிரிக்கல் பாடல் 20 கோடி (202 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. விஷ்ணு எடவன் எழுதியுள்ள இப்பாடலை விஜய்யும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர்.

ரஞ்சிதமே: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே வீடியோ பாடல் 14.9 கோடி (149 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. தமன் இசையைத்துள்ள இப்பாடலை விஜய், மானசியுடன் இணைந்து பாடியுள்ளார். விவேக் பாடலை எழுதியுள்ளார்.

காவாலா (வீடியோ): ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ வீடியோ பாடல் (video song) 14 கோடி (140 மில்லியன்) பார்வைகளைக் கடந்து 4-வது இடத்தை பிடித்துள்ளது.

வா வாத்தி: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வா வாத்தி’ பாடல் 13 கோடி (135 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். தனுஷ் இப்பாடலை எழுதியுள்ளார்.

ஹூக்கும் (லிரிக்கல்): ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘ஹூக்கும்’ பாடலின் லிரிக்கல் வீடியோ 11 கோடி (111 மில்லியன்) பார்வைகள கடந்துள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை அவரே பாடியுள்ளார். சூப்பர் சுப்பு வரிகளை எழுதியுள்ளார்.

ஜிமிக்கி பொண்ணு: வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடல் வீடியோ 9 கோடி (94 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ள இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

காட்டுமல்லி: இளையராஜா இசையில் உருவான ‘விடுதலை பாகம் 1’ படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘காட்டுமல்லி’ பாடலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அனன்யா பட் மற்றும் இளையராஜா பாடியுள்ள இப்பாடலை இளையராஜாவே எழுதியுள்ளார். இதுவரை இப்பாடலின் வீடியோ 7.2 கோடி (72 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது.

படாஸ்(லிரிக்கல்): லியோ படத்தில் இடம் பெற்ற ‘படாஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோ 6.4 கோடி (64 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது. அனிருத்தே பாடி இசையமைத்துள்ள இப்பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.

செலிப்ரேஷன் ஆஃப் வாரிசு: ‘வாரிசு’ படத்தில் வெறும் தமனின் இசையமைப்பில் உருவான இப்பாடலின் வீடியோ 4.1 கோடி (41 மில்லியன்) பார்வைகளை கடந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE