Rewind 2023: நந்தினி முதல் சக்தி வரை - தாக்கம் தந்த பெண் கதாபாத்திரங்கள் @ தமிழ் சினிமா

By செய்திப்பிரிவு

சமீப ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் அழுத்தமான பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகின. தமிழ் சினிமா நாயகிகளுக்கான வழக்கமான டெம்ப்ளேட், க்ளிஷேக்கள் எதுவும் இன்றி இயல்பான பெண் பாத்திரங்களும் அவற்றில் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் குறிப்பிடத்தக்க பெண் கதாபாத்திர படைப்புகளின் பட்டியலை பார்க்கலாம்.

‘பொன்னியின் செல்வன் 2’ - நந்தினி: தமிழ் வாசகர்கள் மத்தியில் ஓரளவு பரிச்சயமான இந்த கதாபாத்திரத்தில் ஒரு பாலிவுட் நடிகையாக எங்குமே தெரியாமல் படம் முழுக்க நந்தினியாகவே தெரிந்தார் ஐஸ்வர்யா ராய். வசனங்களுக்கான உச்சரிப்பு தொடங்கி நந்தினி பாத்திரத்துக்கே உரிய நளினத்துடன் கூடிய கம்பீரம் என மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

‘டாடா’ - சிந்து: கதாநாயகியாக அபரணா தாஸுக்கு இது முதல் படம். ஆனால், படத்தில் எங்குமே அதற்கான சாயல் தெரியாத வகையில், படம் முழுக்க இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். காதலனின் குணத்தை சகித்துக் கொண்டு இன்னலை அனுபவிக்கும் கர்ப்பிணியாகவும், பின்னர் பிரசவத்தின் போது விட்டுச் சென்ற தனது மகனை பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும்போது உடைந்து அழும்போது சிறப்பான நடிப்பை வெளிகொணர்ந்திருந்தார்.

‘அயோத்தி’ - ஷிவானி: மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த படம். இதில் வடமாநிலத்திலிருந்து தமிழகம் வரும்போது, தாயின் மரணத்தால் அவரது உடலை வைத்து செய்வதறியாமல் அள்ளாடும் இளம்பெண்ணாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருந்தார். இதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், ‘அயோத்தி’ படம் அவரது நடிப்பை வெளிக் கொண்டு வந்தது எனலாம்.

‘ஃபர்ஹானா’ - ஃபர்ஹானா: இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் ஐஸ்வரயா ராஜேஷ் நடித்திருந்த படம். படத்தின் பிரதான கதாபாத்திரமே அவர்தான் என்பதால் ஒட்டுமொத்த படத்தையும் சுமந்து ஸ்கோர் செய்திருந்தார். இஸ்லாமிய பெண் ஒருவர் தன் குடும்ப பொருளாதா சூழலுக்கு மத்தியில் வேலைக்கு செல்லும்போது ஏற்படும் சிக்கல்களை இயல்பாக பேசிய இப்படத்தின் தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் கனமறிந்து சிறப்பாக நடித்திருந்தார் ஐஸ்வரயா ராஜேஷ்.

‘குட் நைட்’ - அனு: மணிகண்டன் நடிப்பில் வெளியான இப்படத்தின் நாயகனுக்கு இணையாக படம் முழுக்க பயணிக்கும் கதாபாத்திரம். நாயகனின் குறட்டை பிரச்சினை தொடர்பான படம் என்பதால் நாயகியை டம்மியாக பயன்படுத்தாமல் மிக அழுத்தமான கதாபாத்திரம் நாயகியாக நடித்த மீத்தா ரகுநாத்துக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சிறுவயது முதல் ராசி இல்லாதவள் என்று முத்திரை குத்தப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியை படம் முழுக்க சுமக்கும் ‘அனு’ என்ற கதாபாத்திரத்தி முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருந்தார்.

குட் நைட் - மகா: அதே ‘குட் நைட்’ படத்தின் ‘மகா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரேச்சல் ரெபெக்காவின் நடிப்பை குறிப்பிடாமல் இருக்க முடியாது. ’கடைசி விவசாயி’ படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் சில காட்சிகளே வந்தாலும் பாராட்டுகளைப் பெற்ற ரேச்சலுக்கு இதில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். அதை செவ்வனே செய்து கதையின் ஓட்டத்துக்கு பங்காற்றியிருந்தார்.

சித்தா - சக்தி: மலையாளத்தில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர் என்று பாராட்டப்படும் நிமிஷா சஜயனின் முதல் தமிழ் என்ட்ரி. வழக்கம்போல தனது சிறப்பான நடிப்பை இதிலும் வழங்கியிருந்தார். இதில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து சக்தி கதாபாத்திரம் பேசும் சில அழுத்தமான வசனங்கள் பரவலாக கவனம் பெற்றன.

இறுகப்பற்று - மித்ரா, பவித்ரா, திவ்யா: மூன்று தம்பதிகளை சுற்றி நிகழும் இந்த கதையில் மூன்று அழுத்தமான கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மித்ராவாக ஷ்ரத்தாவுன், பவித்ராவாக அபர்ணதியும், திவ்யாவாக சானிய ஐயப்பன் நடித்திருந்தனர். கணவன் - மனைவிக்கு இடையே ஏற்படும் இயல்பான சிக்கல்களை பேசிய இந்த படமும் அதன் பெண் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ - மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று விவாதத்தை ஏற்படுத்திய இந்த படத்தை தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்தார் ஆர்.கண்ணன். படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், இதில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், எந்த இடத்தில் நிமிஷா சஜயனின் நடிப்பை நகலெடுக்காமல், தனக்கு உரிய பாணியில் அந்த மனைவி கதாபாத்திரத்தின் வலிகளையும், உணர்வையும் பார்வையாளர்களுக்கு கடத்தியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களுக்கு பெயர்கள் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்காது.

‘கண்ணகி’ - கீதா, கலை, நேத்ரா, நதி: நான்கு பெண்கள், நான்கு சூழல்கள் என கிட்டத்தட்ட ஒரு ஆந்தாலஜி பாணியிலான கதையை கொண்ட ஒரு படம். இந்தப் பட்டியலில் மிக சமீபத்தில் வெளியான படமும் இதுவே. போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் இதில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்த கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஸோயா ஆகிய நால்வருமே நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE