எதிர்நீச்சல்: மாடிப்படி மாதுவான நாகேஷ்

By செய்திப்பிரிவு

கஷ்டங்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிற அனாதையின் எதிர்நீச்சலை, அழகாகச் சொன்ன படம் ‘எதிர்நீச்சல்’. கஞ்சன்ரங்கா என்ற வங்க மொழி நாடகத்தின் பாதிப்பில் உருவான நாடகம் இது. கே.பாலசந்தரின் ஆஸ்தான நடிகரான நாகேஷ், கதாநாயகனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. நாடகமாக நடத்தப்பட்டபோதே வரவேற்பைப் பெற்ற அதை அப்படியே படமாக்கினார் கே.பாலசந்தர்.

கலாகேந்திரா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தில், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், காந்த்,எம்.ஆர்.ஆர்.வாசு, சவுகார் ஜானகி, ஜெயந்தி, மனோரமா உட்பட பலர் நடித்தனர்.

ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒண்டு குடித்தன குடியிருப்பில் வசிக்கிறார், மாடிப்படி மாது. அனாதையான அவர் அங்கிருப்பவர்கள் ஏவும் வேலைகளைச் செய்து அவர்கள் தரும் உணவை உண்டு கல்லூரியில் படிக்கிறார். கிடைக்கிற அவமானங்கள், வருகிற திருட்டுப் பட்டம், காதல், மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நீச்சல் போட்டுக் கடந்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் கதை.

பட்டு மாமியாக சவுகார் ஜானகி கலக்கி இருப்பார். முந்தைய படங்களில் அழுகை காட்சிகளில் அதிகம் நடித்து சென்டிமென்ட் நடிகை எனப் பெயர் வாங்கியிருந்த சவுகாரை, அப்படியே மாற்றியிருந்தார் பாலசந்தர். எதற்கெடுத்தாலும் சினிமா படத்தின் பெயரை உதாரணமாகச் சொல்லும் அவர் கதாபாத்திரத்துக்கு அப்போது அவ்வளவு வரவேற்பு.

பட்டுவின் கணவர் கிட்டுவாக காந்த். மனநல சிகிச்சை பெற்றுத் திரும்பியிருப்பார் ஜெயந்தி. எம்.ஆர்.ஆர்.வாசுவின் தங்கை மனோரமா. ரிடையர்ட் பெரியவராக மேஜர் சுந்தர்ராஜன். மலையாள நாயர், முத்துராமன். இருமல் தாத்தா… இவர்கள்தான் அந்த ஒண்டு குடித்தனக்காரர்கள். இதில் ஜெயந்தியின் சகோதரராக வரும் தேங்காய் சீனிவாசனுக்கு கெஸ்ட் ரோல். இருமல் தாத்தாவின் கேரக்டரை காண்பிக்காமல் இருமல் சத்தத்தை மட்டுமே காட்டியிருக்கும் கே.பாலசந்தரின் டைரக்‌ஷன் அப்போது பாராட்டப்பட்டது.

வி.குமார் இசை அமைத்திருந்தார். வாலி பாடல்களை எழுதினார். ‘அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா?’, ‘சேதி கேட்டோ சேதி’, ‘தாமரை கன்னங்கள்’, ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா,’ ‘என்னம்மா பொன்னம்மா’ ஆகிய பாடல்கள் ஹிட்டாயின. இதில், ‘என்னம்மா பொன்னம்மா’ பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி இசை அமைத்தார்.

1968-ம் ஆண்டு இதே தேதியில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தைத் தெலுங்கில் சம்பரலா ராம்பாபு என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இந்தியில் ‘லகோன் மே ஏக்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. நாகேஷ் கதாபாத்திரத்தில் மெஹ்மூத் நடிக்க, நாயகியாக ராதா சலூஜா நடித்தார். படத்தை இயக்கியவர் ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE