மழைநீர் வடிகால் என்ன ஆனது? - நடிகர் விஷால் கேள்வியும், மேயர் பதிலும்

By செய்திப்பிரிவு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். பின், தண்ணீர் வீட்டுக்குள் நுழையும் என்பது வழக்கமான விஷயம். அண்ணா நகரில் என் வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள். 2015-ம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். 8 வருடம் கழித்து அதைவிட மோசமாக நடப்பது கேள்விக்குறியாக உள்ளது.

மழைநீர் சேமிப்பு/வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. வாக்காளர் என்ற முறையில் இதைக் கேட்டுக் கொள் கிறேன். சென்னை தொகுதி எம்.எல்.ஏக் கள் தயவு செய்து வெளியில் வந்து சரி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். பொதுமக்களுக்குப் பாதுகாப்பாகவும் நம் பிக்கையாகவும் இருக்கும். எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பதைத் தர்மசங்கடமான, கேவலமான விஷயமாகப் பார்க்கிறேன். உடனடியாக இதைச் சரிசெய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். உதவுங்கள். இவ்வாறு விஷால் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் விஷாலுக்கு மேயர் பிரியாசமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிலில், “அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE