தமிழ்நாடு டாக்கீஸின் ‘பெண் மனம்’ 

By செய்திப்பிரிவு

தென்னிந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர், எஸ்.சவுந்தரராஜன். பாத்திர வியாபாரம் செய்து வந்த இவர் சினிமா மீதான ஆர்வத்தில் பைனான்சியராக வந்தார். பிறகு தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர் என சினிமாவில் பயணிக்கத் தொடங்கினார். தமிழ்நாடு டாக்கீஸ் என்ற தனது நிறுவனம் மூலம் 1930-ல் இருந்து 1950-கள் வரை தமிழ், தெலுங்கில் பல படங்களைத் தயாரித்து இயக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல புதுமுகங்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார், இவர். நடிகை வசுந்தரா தேவி, ரஞ்சன், கிருஷ்ணகுமார் உட்பட பலரை இவர் அறிமுகம் செய்துள்ளார்.

இவர் தயாரித்து இயக்கிய படம், ‘பெண் மனம்’. இதில் டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான டி.கே.சண்முகம் ஹீரோவாக நடித்தார். வி.கே.ராமசாமி, எஸ்.ஏ.நடராஜன், எம்.வி.ராஜம்மா, எம்.என்.ராஜன், மேனகா, சி.டி.ராஜகாந்தம், கே.எஸ்.அங்கமுத்து, புளிமூட்டை ராமசாமி, கொட்டாபுளி ஜெயராமன் உட்பட பலர் நடித்தனர்.

தஞ்சாவூரில் மனைவி மீனாட்சி மற்றும் 3 குழந்தைகளுடன் வசிக்கும் பரமசிவத்தை வறுமை விரட்டுகிறது. மனைவியிடம் சொல்லாமல் கொழும்பு செல்லும் பரமசிவம் அங்கு நாடகக் குழுவில் சேர்கிறார். இங்கு கஷ்டப்படும் மனைவி, குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரை சாது ஒருவர் காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் சொந்த ஊருக்குத் திரும்பும் பரமசிவம், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கண்டுபிடித்து சேர்ந்தாரா என்பது கதை.

பெண்களை மையப்படுத்தி உருவான சென்டிமென்ட் படம் இது. பரமசிவமாக டி.கே.சண்முகமும் மீனாட்சியாக எம்.வி.ராஜம்மாவும் நடித்தனர். கதை, வசனம், பாடல்களை தஞ்சை ராமையா தாஸ் எழுதினார். எம்.ஆர்.புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு கர்நாடக இசைக் கலைஞர் குன்னக்குடி வெங்கடராம ஐயர் இசை அமைத்தார். இவர் பஞ்சாப் கேசரி (1938), குபேர குசேலா (1943), மகா மாயா (1944), கிருஷ்ண பக்தி (1949), மங்கையர்க்கரசி (1949) ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. 1952-ம் ஆண்டுஇதே தேதியில்தான் வெளியானது, இந்தப் படம். ‘பெண் மனம்’ என்ற பெயரில் 1963-ம் ஆண்டு மீண்டும் ஒரு படம் வெளியானது. அதில் நாகேஸ்வர ராவ், அஞ்சலிதேவி நடித்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE