ஆயிரம் ரூபாய்: வழக்கமான பாணியில் இருந்து மாறிய எம்.ஆர்.ராதா! 

By செய்திப்பிரிவு

ஜெமினி, சாவித்திரி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், அசோகன், ராகினி, மோகனா உட்பட பலர் நடித்த படம், ‘ஆயிரம் ரூபாய்’. சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பரான சின்ன அண்ணாமலை தயாரித்த இந்தப் படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கதை, வசனம் எழுதி இயக்கினார்.

தற்கொலை முயற்சியில் இருக்கும் சந்தானம் ஒரு குழந்தையை காப்பாற்றுகிறார். குழந்தையின் தாய் ரேவதி அவருக்கு அறிவுரை சொல்லி அனுப்புகிறார். பிறகு மனம் மாறி ரயிலில் பல்பொடி வியாபாரம் செய்யும் சந்தானம், கூத்துக் கட்டும் வள்ளியைக் காதலிக்கிறார். குழந்தையை காப்பாற்றியதை பார்த்ததுமே, சந்தானத்தின் மீது காதல் கொள்கிறார் ரேவதி. இதற்கிடையில் ஆயிரம் ரூபாய் நோட்டும் இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட, அவர்கள் காதல் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பது கதை. இந்தப் படத்தின் இறுதியில் ஹீரோ வில்லனால் கொல்லப்பட, எல்லோருக்கும் காதல் தோல்வி என்று முடித்திருப்பார்கள்.
சந்தானமாக ஜெமினியும் வள்ளியாக சாவித்திரியும் நடித்திருந்தனர். சென்னை ஸ்லாங் பேசி மிரட்டியிருப்பார் சாவித்திரி. ரேவதியாக திருவிதாங்கூர் சகோதரிகளில் ஒருவரான ராகினியும் வில்லனாக எம்.ஆர்.ராதாவும் நடித்திருந்தனர். எம்.ஆர்.ராதா தனது வழக்கமான பாணியில் இருந்து மாறி இழுத்து இழுத்து பேசி நடித்திருப்பார். நாகேஷ் சிஐடி போலீஸாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சாவித்திரியின் நடிப்பு அப்போது பேசப்பட்டது.

‘தி மில்லியன் பவுண்ட் நோட்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி இதை உருவாக்கியதாகச் கூறப்படுகிறது. கே.வி. மகாதேவன் இசையில், மருதகாசி எழுதிய ‘ஆனாக்க அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம்’ என்ற பாடலும், கண்ணதாசன் எழுதி, பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசிலா பாடிய ‘பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போல பார்க்கல’என்ற பாடலும் சூப்பர் ஹிட்டாயின.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் வெளியாயின. சிவாஜி, சாவித்திரி நடித்த ‘கைகொடுத்த தெய்வம்’ 1964-ம் ஆண்டு ஜூலை மாதம் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றது. இதே வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வேண்டிய ‘ஆயிரம் ரூபாய்’ ஒரு மாதம் கழித்து இதே தேதியில் வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE