பார்க்கிங் Review: எம்.எஸ்.பாஸ்கர், ஹரிஷ் ஸ்கோர் செய்த ‘டாப் கியர்’ சம்பவம்!

By கலிலுல்லா

ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஈஸ்வர் (ஹரிஷ் கல்யாண்) தனது மனைவி அதிகாவுடன் புதிதாக வீடு ஒன்றின் மேல்தளத்தில் வாடகைக்கு குடியேறுகிறார். அதே வீட்டின் கீழ் தளத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் அரசு ஊழியரான இளம்பரிதி (எம்.எஸ்.பாஸ்கர்). இருவருக்கும் இடையிலான உறவு ஆரம்பத்தில் சுமுகமாவே செல்கிறது. கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியின் போக்குவரத்துக்காக புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஈஸ்வர்.

இப்போது பிரச்சினை கார் மூலமாக உருவெடுக்கிறது. ஈஸ்வர் தனது காரை பார்க் செய்வதால், இளம்பரிதியால் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்துவது சிரமமாக உள்ளது. தொடக்கத்தில் சிறு கீறலால் ஏற்படும் பிரச்சினை போக போக மோதலாக வெடிக்கிறது. இந்த சண்டை ஒருகட்டத்தில் இருவருக்குமான ‘ஈகோ’வாக மாற, என்ன நடந்தது என்பதே படத்தின் திரைக்கதை.

இதெல்லாம் ஒரு பிரச்சினையா என தோன்றும் சிலருக்கு, இதுதான் பிரச்சினையே என்று ‘பார்க்கிங் சிக்கல்’ என்ற ஒற்றை வரியை வைத்துக்கொண்டு மனித மனங்களின் விறுப்பு, வெறுப்பு, கோபம், வன்மங்களை கலைத்துப்போட்டு அடுக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். தொடக்கத்தில் கதையையும், கதை மாந்தர்களையும் கட்டமைக்க எடுத்துக்கொள்ளும் நேரம் மட்டும் கொஞ்சம் அயற்சி.

அப்போது வரும் பாடல் தொந்தரவு. பின்னர் கதைக்குள் கார் நுழைந்ததும், டாப் கியரில் பயணிக்கிறது திரைக்கதை. பரபரப்பாக நகரும் காட்சிகள் அடுத்து என்ன என்ற ஆர்வத்தை கூட்டுகின்றன. முரண்பட்ட இரண்டு கதாபாத்திரங்களின் ‘ஈகோ’வை கூர்மைப்படுத்திக்கொண்டே சென்று ஓரிடத்தில் ப்ரேக் அடித்து நிப்பாட்டி, இருவரும் சமாதானம் அடைந்துவிடுவார்களோ என நினைக்கும்போது மீண்டும் வேகமெடுப்பது விறுவிறுப்பு கூட்டுகிறது.

இங்கே பார்க்கிங் என்பதைத் தாண்டி அகம்பாவம்தான் பிரச்சினை. எந்த அளவுக்கு என்றால், வீட்டில் புதிய மிக்ஸி ஜார் வாங்க கஞ்சத்தனம் காட்டும் கதாபாத்திரம், தனது ஈகோவுக்கு இழுக்கு எனும்போது காரை வாங்க தயாராகிறது. சுயநலத்தின் உச்சமாக தனது ஈகோவுக்காக வீட்டு பெண்ணையே பலிகொடுக்க தயங்காதது, மாறி மாறி பழிவாங்குவதில் கவனம் செலுத்தும் இரண்டு ஆண்களும், குடும்பம் குறித்தோ, பெண்களுக்கான பிரச்சினைகள் குறித்து சிந்திக்காதது என ஆணாதிக்க உளவியலை பதிவு செய்கிறது படம். எம்.எஸ்.பாஸ்கர் - ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரங்களை சமரசமின்றி ஆழமான வடிவமைப்பு படத்தின் மொத்த ஆன்மா.

கர்ப்பிணியாக இருந்தால் இறுதியில் இதுதான் நடக்கும் என்ற கணிக்க கூடிய க்ளைமாக்ஸ் பார்த்து பழகியவை. அதேபோல, இருவருக்குமான பழிவாங்கல் காட்சி ஒரு எல்லைத் தாண்டி நீண்டுகொண்டே செல்வது நம்பகத்தன்மையை கூட்டவில்லை. அதுவரை வேகமாக வந்த திரைக்கதைக்கு இவை ஸ்பீடு ப்ரேக்கர்கள்.‘நான்’ என்ற அகம்பாவம் கொண்டு வன்மத்தின் மொத்த உருவமாக தனது அனுபவ நடிப்பால் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மெருகேற்றி பார்வையாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். ஆங்காங்கே வரும் அவரின் முக பாவம், எள்ளலாக பார்ப்பது, வெற்றிக் களிப்பில் பழைய பாடல் ஒன்றை கேட்கும் காட்சியில் மிரட்டுகிறார்.

பொறுமையிழந்து கோபம் கொள்வது, மனக்குழப்பத்தால் தவிப்பது, இறங்கி வருவது, அமைதியின்மை, பழிவாங்க துடிப்பது என ஹரிஷ் கல்யாண் தனது நடிப்பில் கவனிக்க வைக்கிறார். இந்துஜா பொறுமையும், பிரச்சினையை தவிர்க்கும் முனைப்பிலும் இரக்கம் கோரும் கதாபாத்திரத்தை நேர்த்தியாகவே கையாண்டிருக்கிறார். தவிர, எம்எஸ் பாஸ்கரின் மனைவி ரமா ராஜேந்திரன், மகள் பிரார்த்தனா நாதன் யதார்த்தமான நடிப்பில் நடுத்தர குடும்பத்தை கண்முன் நிறுத்துகின்றனர். இளவரசு சில சீன்களே வந்தாலும் அழுத்தம் சேர்க்கிறார்.

உடைந்த கண்ணாடியிலிருந்து கேமரா வெளியேறும் இடைவேளைக் காட்சி, காரை முந்தி நிறுத்துவதில் நடத்தும் போராட்டம், எம்எஸ் பாஸ்கர் காரை ஹரிஷ் பின்தொடரும்போது வரும் ஹெலிகேம் ஷாட்ஸ் என ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு தனித்து தெரிகிறது. சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் எதும் ஈர்க்கவில்லை. குறிப்பாக, இறுதியில் வரும் சென்டிமென்ட் பாடலில் கூடுதல் மெனக்கெடல் இருந்திருந்தால் அந்தக் காட்சியின் கனத்தை இன்னும் கூட்டியிருக்கும். மற்றபடி அவரது பின்னணி இசை விறுவிறுப்புடன் டென்ஷனை உருவாக்கத் தவறவில்லை. ஃபிலோமின் ராஜ் டிரான்சிஷன் மற்றும் ஷார்ப் கட்ஸ் படத்துக்கு பலம்.

மொத்தமாக, ஆங்காங்கே சில கீறல்கள் விழுந்தாலும் கூட, மனித மனங்களின் குரூரங்களும், ஈகோவும் நிறைந்த கதையை நேர்த்தியாக பார்க் செய்ய முயன்றுள்ளது படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்