ஆர்ட் டைரக்டர் இயக்கிய ‘வீரக்கனல்’

By செய்திப்பிரிவு

தனது தனித்துவமான நடிப்பு மற்றும் உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் மயக்கியவர் பி.எஸ்.வீரப்பா. அவரைப் போலவே, வில்லத்தனமான அவர் சிரிப்பும் அவ்வளவு பிரபலம். வில்லனுக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவர் அவர். நடிப்பதோடு, தனது பி.எஸ்.வி பிக்சர்ஸ் மூலம் படங்களையும் தயாரித்து வந்தார். அவர் தயாரித்த படங்களில் ஒன்று ‘வீரக்கனல்’. இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியவர் ஜி.கே.ராமு. இவர் பிரபல ஆர்ட் டைரக்டரும் கூட. எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ உட்பட பல படங்களுக்கு இவர் கலை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார்.

இதில், ஜெமினிகணேசன், அஞ்சலி தேவி, எம்.சரோஜா, கே.ஏ.தங்கவேலு, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம் உட்பட பலர் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பாடல்களை கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினர்.

அரசன் திருமார்பனை மது, மாதுவுக்கு அடிமையாக்கி, தானே அரசன் ஆக திட்டமிடுகிறார், வேழநாட்டு அமைச்சர். இதற்காகத் தனக்கு எதிராக செயல்படுபவர்களை ஒழித்துக் கட்டுகிறார். அவரை எதிர்க்கும் பரந்தாமனையும் கொல்ல முயற்சிக்கிறார். அவரின் சதியில் இருந்து தனது தாயுடன் தப்பிக்கிறார் பரந்தாமன். ஆனால், அவர் தாயை பிடித்து வந்து கொல்கிறார் அமைச்சர். ஆவேசம் அடையும் பரந்தாமன், அமைச்சரை ஒழித்தே தீர்வதாக சபதம் செய்கிறார். இதற்கிடையில் அரசர், தனது மயக்கத்தில் இருந்து விடுபட்டு நாட்டின் உண்மை நிலை அறிகிறார். பிறகு என்ன நடக்கிறது என்று கதைச் செல்லும்.

அரசராக நடித்திருந்தார், பி.எஸ்.வீரப்பா. பரந்தாமனாக ஜெமினி கணேசனும், அமைச்சராக நம்பியாரும் நடித்திருந்தனர். வரலாற்றுப் படங்களில் கட்டாயம் இடம்பெறும் வாள் சண்டைக் காட்சிகளும் குதிரை துரத்தல்களும் இதிலும் உண்டு. காமெடி ஏரியாவை பார்த்துக்கொண்ட தங்கவேலு கலகலப்பாக்கினார். கிளைமாக்ஸில் வீரப்பா, நம்பியார், ஜெமினி போடும் வாள் சண்டை அப்போது பேசப்பட்டது. காஸ்ட்யூம்களும் நடனமும் இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று.

1960-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படத்துக்குப் பிறகுதான், சிவாஜி நடித்து வெற்றி பெற்ற ஆலயமணி படத்தைத் தயாரித்தார், பி.எஸ்.வீரப்பா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE