மன்னிப்பு கேட்டுவிட்டதால் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்: காவல் துறைக்கு நடிகை த்ரிஷா கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்ததை அடுத்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின்கீழ் சென்னை ஆயிரம்விளக்கு மகளிர்போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, ‘எனது சக திரைநாயகி த்ரிஷாவே, என்னை மன்னித்துவிடு’ என்று மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘தவறு செய்வது மனிதம்; மன்னிப்பது தெய்வ குணம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, த்ரிஷாவிடம் இதுபற்றி விசாரித்து, அவர் அளிக்கும் பதில்களின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில்கூறப்பட்டது. த்ரிஷா தரப்பில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு கேட்டு ஆயிரம்விளக்கு மகளிர் போலீஸார் அவருக்கு கடிதம் அனுப்பினர்.

இந்நிலையில், காவல் துறைக்குத்ரிஷா அனுப்பியுள்ள கடிதத்தில்`மன்சூர் அலிகான், தான் தெரிவித்தகருத்துக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய அறிவுறுத்தலின்பேரிலேயே, மன்சூர் அலிகான் மீது மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே, அடுத்தகட்ட நடிவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE