சிரித்து வாழ வேண்டும்: அமிதாப் பட ரீமேக்கில் எம்.ஜி.ஆர்!

By செய்திப்பிரிவு

பாலிவுட்டின் ஹிட் கதாசிரியர்கள் சலீம்கான் - ஜாவேத் அக்தர் ஜோடி. நட்சத்திர நடிகர்களுக்கு இணையான புகழும் வரவேற்பும் இந்தி சினிமாவில் அப்போது இவர்களுக்கு இருந்தது. இதில் சலீம் கான், பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் கானின் தந்தை!

1970 மற்றும் 80-களில் அந்தாஸ், அதிகார், ஷோலே, சீதா அவுர் கீதா,யாதோன் கீ பாரத் உட்பட பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இவர்கள் கதைதிரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்கள். அதில் ஒன்று ‘சஞ்ஜீர்’. அமிதாப்பச்சன், ஜெயா பாதுரி, பிரான் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை பிரகாஷ் மெஹ்ரா இயக்கி இருந்தார்.

இந்தியில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம்தான், தமிழில் ‘சிரித்து வாழ வேண்டும்’ ஆக மாறியது. ஆனந்த விகடன் எஸ்.எஸ்.பாலன் இயக்கினார், இந்தப் படத்தை. எம்.ஜி.ஆர், லதா, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு ஆர்.கே.சண்முகம் வசனம் எழுதியிருந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் புலமைப்பித்தனும் வாலியும் பாடல்கள் எழுதி இருந்தனர். ‘ஒன்றே சொல்வான்’, ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’, ‘நீ என்னை விட்டுப் போகாதே’, ‘பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ’, ‘உலகம் என்னும்’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

உதயம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. இந்த நிறுவனத்தின் லோகோ டிசைனை வடிவமைத்தவர் எம்.ஜி.ஆர். இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான ‘இதயம் பேசுகிறது’ மணியன், வித்வான் வே.லட்சுமணன் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர் மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார். இதயவீணை, சிரித்து வாழவேண்டும், பல்லாண்டு வாழ்க. ‘சிரித்து வாழவேண்டும்’ படத்தில், படத்தை இயக்கிய எஸ்.எஸ். பாலனையும் பங்குதாரராக சேர்த்துக்கொண்டனர்.

தனது கண் எதிரிலேயே தாய்- தந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்கள், கொள்ளைக் கூட்டத்தினர். கொல்பவனின் கையில் தொங்கும் குதிரை பொம்மை பிரேஸ்லெட் சிறுவன் மனதில் பதிந்துவிடுகிறது. அந்தச் சிறுவன் வளர்ந்து இன்ஸ்பெக்டர் ஆகிறான். கொள்ளைக் கூட்டத்தின் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கின்றன. அந்தக் கூட்டத்தின் தலைவனைச் சந்திக்கும் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கிறார். இறுதிக் காட்சியில், கொள்ளைக் கூட்டத் தலைவனின் கையில் இருக்கும் குதிரை பொம்மைபிரேஸ்லெட்டை பார்க்கும் இன்ஸ்பெக்டருக்கு தனது பெற்றோரைக் கொன்றவன் அவன்தான் என்று தெரிகிறது. பிறகுவழக்கம்போல பழிவாங்குவது கதை.

அமிதாப்பச்சன் நடித்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தார், எம்.ஜி.ஆர். இந்தியில் பிரான் நடித்த அப்துல் ரஹ்மான் கேரக்டர் கதைக்கு முக்கியமானதாக இருந்தது. அதனால் அந்த கேரக்டரில் இன்னொரு நடிகரை நடிக்க வைப்பதற்குப் பதிலாகத் தமிழில் எம்.ஜி.ஆரே நடித்தார். அந்த இஸ்லாமிய கேரக்டர் அப்போது பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’ பாடலில் எம்.ஜி.ஆரும் லதாவும் எட்டு முறை உடைகளை மாற்றியிருப்பார்கள். இது அப்போது அதிசயமாகப் பேசப்பட்டது.

1974-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்தை டிஜிட்டலில் வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE