ஜெமினி தயாரித்த முதல் திரைப்படம் ‘மதனகாமராஜன்’

By செய்திப்பிரிவு

மணிக்கொடி கால எழுத்தாளரான பி.எஸ்.ராமையா, பூலோக ரம்பை (1940), மணிமேகலை (1940), சாலிவாகனன் (1945), விசித்திர வினிதா (1946) உட்பட பல திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதியிருக்கிறார். அதில் ஒன்று, ‘மதனகாமராஜன்’.

பி.என்.ராவ் இயக்கிய இந்தப் படத்தில் கர்நாடக இசைக் கலைஞர் வி.வி.சடகோபன் என்ற வீரவநல்லூர் வேதாந்தன் சடகோபன் ‘மதனகாமராஜனாக’ நடித்தார். கே.எல்.வி வசந்தா, கதாநாயகியாக நடித்தார். இவர், ‘பூலோக ரம்பை’, ‘ரம்பையின் காதல்’ போன்ற படங்களில் நடித்தவர். எம்.வி.ராஜம்மா, கே.ஆர்.செல்வம், கொத்தமங்கலம் சுப்பு உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். மாயேந்திரபுரி இளவரசன் மதனகாமராஜன் (வி. வி.சடகோபன்). இவரும் அமைச்சர் மகன் குணசீலனும் (என். கிருஷ்ணமூர்த்தி) நண்பர்கள். குருதேவரின் (கொத்தமங்கலம் சுப்பு) மகள் பகவதிக்கு (எம்.எஸ்.சுந்தரிபாய்) இளவரசன் மேல் காதல் வருகிறது. ஏற்க மறுக்கிறார் இளவரசன்.

கோபம் கொள்ளும் பகவதி, இளவரசன் தன்னை பலவந்தம் செய்ததாகத் தந்தையிடம் பொய் சொல்கிறார். அவர் மகாராஜாவிடம் முறையிடுகிறார். அவர் இளவரசனைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிடுகிறார். ஆனால், இளவரசனும் நண்பனும் நாட்டை விட்டு ஓடி இந்திரபுரிக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது கதை. இது விறுவிறுப்பான தந்திரக் காட்சிகள் நிறைந்த படம்.

இருபது பங்குதாரர்களைக் கொண்ட திண்டுக்கல் அமிர்தம் டாக்கீஸ் நிறுவனம் இதைத் தயாரித்தது. கே.சுப்பிரமணியத்திடம் இருந்து அப்போதுதான் ‘மோஷன் பிக்சர்ஸ் புரொடயூசர்ஸ் கம்பைன்’ நிறுவனத்தை வாங்கி ஜெமினி ஸ்டூடியோ என பெயர் மாற்றி இருந்தார் எஸ்.எஸ்.வாசன். இந்த அமிர்தம் டாக்கீஸ், ஜெமினி ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்து இந்தப் படத்தைத் தயாரித்தது.

ஆனால், அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குள் பிரச்சினை ஏற்பட, எஸ்.எஸ்.வாசன் அந்தப் படத்தின் தயாரிப்பை ஏற்றார். அதனால் ஜெமினியின் முதல் தயாரிப்பாக இந்தப் படம் உருவானது. இந்தப் படத்தில்தான், திரைப்பட உருவாக்கத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார், எஸ்.எஸ்.வாசன். இதில் கதாநாயகனின் நண்பராக என்.கிருஷ்ணமூர்த்தி நடித்திருந்தார். இவர் அந்த கால டேபிள் டென்னிஸ் வீரர். சில படங்களில் நாயகனாக நடித்த இவர், பிறகு திரைத்துறையை விட்டுவிட்டு ராணுவத்தில் சேர்ந்துவிட்டார்.

அந்தக் காலகட்டத்தில், முசிறி சுப்பிரமணிய ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், களக்காடு ராமநாராயண ஐயர் என பல கர்நாடக இசைக் கலைஞர்கள் சினிமாவில் நடித்தார்கள். சிறப்பாக நடித்தாலும் பிறகு அவர்கள் இசைத்துறைக்கே திரும்பிவிட்டார்கள். அவர்களைப் போலவே இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த இசைக் கலைஞர் வி.வி.சடகோபன், நவயுகன், வேணுகானம், அதிர்ஷ்டம் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், மதனகாமராஜன் தவிர மற்ற படங்கள் வெற்றி பெறாததால் மீண்டும் இசைத் துறைக்கே திரும்பிவிட்டார்.

1941-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படத்துக்கு எம்.டி.பார்த்தசாரதி, எஸ்.ராஜேஸ்வரராவ் இசை அமைத்திருந்தனர். பாபநாசன் சிவன் பாடல்கள் எழுதியிருந்தார். மொத்தம் 22 பாடல்களுக்கு மேல். சடகோபன் பாடிய, ‘பிரேமா பிரேமா நீ இல்லாமல்’ என்ற காதல் பாடல் அப்போது பிரபலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்