“உடல்மொழியும், பேச்சுத்திமிரும் வக்கிரம்” - ஞானவேல்ராஜாவை சாடிய பொன்வண்ணன்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக அமீருக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே நிலவும் பிரச்சினை குறித்து நடிகர் பொன்வண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ‘பருத்தி வீரன்’ படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குநர் அமீர் மீது குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக தன்னுடைய தரப்பு விளக்கத்தை அமீர் அறிக்கையாக வெளியிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஞானவேல்ராஜாவை நேரடியாக குறிப்பிட்டு விமர்சித்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் பொன்வண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘பருத்திவீரன்’ திரைப்படம் பற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களின் சமீபத்திய ஊடகப் பேட்டியைப் பார்த்தேன். அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல், நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.

அத்திரைப்படம் ஆரம்பித்து முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை. அதன்பின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன். பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு தொடர்ந்தது.

ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பலநாட்கள் எடுத்து கொண்டே இருந்தார். நானும், உடனிருந்த சமுத்திரகனியும் செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதானப்படுத்திவிட்டு, டப்பிங், எடிட்டிங், ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலைபார்த்தார். பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது.

இதனால்தான், பணத்துக்காக தனது ‘படைப்புக்கு என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும். படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும், விமர்சனங்களாலும், வசூல்ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த தேசிய விருது அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.

படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும், திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.

உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக திருடன், வேலை தெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. அந்த ஊடக பேட்டி முழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும், வக்கிரமாக இருந்தது.

தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும் அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ? வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை. இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சினைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.

பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும், உறவும் மீண்டும் மலரவேண்டும்” இவ்வாறு பொன்வண்ணன் தனது பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE