ஆலயமணி: கிளைமாக்ஸை மாற்றிய இயக்குநர்!

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவின் நட்சத்திர வில்லனான பி.எஸ்.வீரப்பா, தனது பி.எஸ்.வி பிக்சர்ஸ் மூலம் தயாரித்த முதல் படம் ‘பிள்ளைக் கனியமுது’. இதில் எஸ்.எஸ்.ஆர், ஈ.வி.சரோஜா நடித்தனர். அடுத்து ஜெமினி, அஞ்சலிதேவி நடித்த ‘வீரக்கனல்’ படத்தைத் தயாரித்தார் . அவர் தயாரிப்பில் மூன்றாவதாக உருவான படம், ‘ஆலயமணி’. பி.எஸ்.வீரப்பாவுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த படமான இதில் சிவாஜி கணேசனுடன், சரோஜாதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி, வீரப்பா, எம்.ஆர்.ராதா உட்பட பலர் நடித்திருந்தனர். .

ஜி.பாலசுப்ரமணியத்தின் மூலக்கதைக்கு, திரைக்கதை வசனம் எழுதியது ஜாவர் சீதாராமன். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். டி.எம்.எஸ். குரலிலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங்கிலும் ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ பாடல் அப்போது அனைத்து தரப்பினரின் பேவரைட். இந்தப் பாடலில் இடம் பெறும் ரசனையான ஹம்மிங் பாராட்டப்பட்டது. சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா குரலில், ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா?’, டி.எம்.எஸ் குரலில் ‘பொன்னை விரும்பும் பூமியிலே’, ‘சட்டி சுட்டதடா’, எஸ்.ஜானகி குரலில் ‘தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே’, சுசீலாவின் குரலில் ‘மானாட்டம்’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. பாடல்களுக்காகவே படத்தைப் பார்த்தவர்கள் ஏராளம்.

சிவாஜியின் நெருங்கிய நண்பர் கே.சங்கர். அவர் நடிப்பில் 7 படங்களை இயக்கியிருக்கும் அவர், எம்.ஜி.ஆர் நடிப்பில் 8 படங்களை இயக்கி இருக்கிறார். இதில் எம்.ஜி.ஆரின் சொந்தப்படமான ‘அடிமைப் பெண்’ணும் ஒன்று.

‘ஆலயமணி’ படத்தை ஆரம்பித்த பின் இயக்குநர் சங்கரை அழைத்த எம்.ஜி.ஆர் ‘பணத்தோட்டம்’ படத்தை இயக்கச் சொன்னார். ‘நான் ஆலயமணி படத்தை ஆரம்பித்துவிட்டேனே’ என்று சங்கர் சொன்னதும், ‘இதையும் நீங்கள்தான் இயக்க வேண்டும்’ என்று அன்பு கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர். அதை மறுக்க முடியாமல் சரி என்று சொல்லிவிட்டார். சிவாஜியின் ‘ஆலயமணி’யை காலை முதல் மதியம் வரை இயக்கும் சங்கர், பிறகு இரவுவரை எம்.ஜி.ஆரின் ‘பணத்தோட்டம்’ படத்தை இயக்குவார். இரண்டிலும் சரோஜாதேவிதான் நாயகி என்பதால் வசதியானது. ‘ஆலயமணி’ படப்பிடிப்பு வாஹினி ஸ்டூடியோவில் நடந்தது. ‘பணத்தோட்டம்’ சத்யா ஸ்டூடியோவில்.

அந்த காலத்திலேயே மனோதத்துவ ரீதியிலான கதையைகொண்ட படம் இது. பணக்கார சிவாஜியும் ஏழை எஸ்.எஸ். ஆரும் நண்பர்கள். இருவரும் சரோஜா தேவியை விரும்புகிறார்கள். சரோஜாதேவி எஸ்.எஸ். ஆரை விரும்புகிறார். ஒரு கட்டத்தில் சிவாஜியை திருமணம் செய்துகொள்கிறார் சரோஜாதேவி. விபத்தில் ஒரு காலை இழக்கும் சிவாஜி, சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டிய நிலைமை. பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.

‘ஆலயமணி’யின் கிளைமாக்ஸில் சிவாஜியும் சரோஜாதேவியும் இறந்துவிடுவது போல முதலில் எடுக்க நினைத்தார்களாம். ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால், பிறகு அதை மாற்றியதாகச் சொல்வார்கள். ‘ஆலயமணி’ படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆன முதல் நாளில் இயக்குநர் சங்கருக்கு போன் வந்தது. ‘உங்கள் படம் வெற்றிபெற்றுவிட்டது, வாழ்த்துகள்’ என்றது அந்தக் குரல். அந்த குரல் எம்.ஜி.ஆருடையது.

‘சட்டி சுட்டதடா’ பாடலுக்காக பி.எஸ்.வீரப்பா 20 நாள்கள் காத்திருந்தாராம். கண்ணதாசன், பாடலைக் கொடுக்கவில்லை. பலமுறை அழைத்தும் கொடுக்காததால் நேராக அவர் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். ‘சும்மா சட்டி சுட்டுருச்சு, கை விட்டுருச்சுனு ஒரு பாடலை எழுதிக் கொடுக்கிறதை விட்டுட்டு இவ்ளோ நாளா இழுத்தடிக்கிறீங்களே?’ என்று ஆவேசமாகக் கேட்டிருக்கிறார் வீரப்பா. அவர் பேசிய வார்த்தைகளை வைத்துதான் ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்ற பாடல் எழுதப்பட்டது.

இந்தப் படம் தெலுங்கில் ‘குடி கண்டலு’ என்ற பெயரில் என்.டி.ஆர் நடிப்பிலும் இந்தியில் ‘ஆத்மி' என்ற பெயரில் திலீப்குமார் நடிப்பிலும் ரீமேக் ஆனது. இந்தியில் பீம்சிங் இயக்கியிருந்தார். தமிழில் பிளாக் அண்ட் ஒயிட் படமாக உருவான இதை, இந்தியில் வண்ணப்படமாக எடுத்தார் பி.எஸ்.வீரப்பா. ஆனால், இந்தியில் இந்தப் படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

1962ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது இந்தப் படம்.

சிவாஜியின் ‘ஆலயமணி’யை காலை முதல் மதியம் வரை இயக்கிய சங்கர், பிறகு இரவு வரை எம்.ஜி.ஆரின் ‘பணத்தோட்டம்’ படத்தை இயக்கினார். இரண்டிலும் சரோஜாதேவிதான் நாயகி என்பதால் வசதியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

மேலும்