‘பார்க்கிங் பிரச்சினை சாதாரணமானதல்ல!’ - ஹரிஷ் கல்யாண் பேட்டி

By செ. ஏக்நாத்ராஜ்

ஹரிஷ் கல்யாண், இந்துஜா நடித்திருக்கும் ‘பார்க்கிங்’ பட டிரெய்லருக்கு அவ்வளவு வரவேற்பு. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கும் இந்தப் படம் டிச.1ல் வெளியாகிறது. 'பலூன்' இயக்குநர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. ஹரிஷ் கல்யாணிடம் பேசினோம்.

சாதாரண பார்க்கிங் பிரச்சினைதான் கதையா?

பார்க்கிங் பிரச்சினை சாதாரணமானதல்ல. அது எப்படி வளர்ந்து, ஈகோவாகி என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துது அப்படிங்கறதுதான் இந்தப் படம். கதையை டைரக்டர் சொன்னதுமே அதுல கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சுது. நானும் சைக்கிள் ஓட்டுற காலத்துலயே, அந்த பார்க்கிங் பிரச்சினையை சந்திச்சிருக்கேன். சமீபத்துல கூட பார்க்கிங் பிரச்சினை பெரிய வில்லங்கத்தைக் கொண்டு வந்திருக்கிற செய்திகளையும் பார்த்திருக்கோம். பார்வையாளர்கள் யாரோ ஒருத்தரோட கதையா இதை பார்க்காம, தங்களையும் கதைக்குள்ள இணைச்சுக்கிறதுக்கு இதுல நிறைய ஸ்கோப் இருக்கு. கார், பைக் வச்சிருக்கவங்க எல்லோரையுமே இந்தப் படம் டச் பண்ணும்னு தோணுச்சு. உடனே ஓகே சொல்லிட்டேன்.

நீங்க என்ன கேரக்டர் பண்றீங்க?

என் கேரக்டர் பெயர் ஈஸ்வர். திருச்சியில இருந்து சென்னைக்கு புதுசா வந்திருக்கிற ஆள். ஐடி கம்பெனியில வேலை பார்க்கிறேன். இந்த தலைமுறையை பிரதிபலிக்கிற கேரக்டர். ஜாலியா, வாழ்க்கையை அதன் போக்குல அனுபவிக்கிறவன். மனைவியா இந்துஜா நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தோட கதையும் சரி, மேக்கிங்கும் சரி எல்லோருக்கும் பிடிக்கும்.

பார்க்கிங் பிரச்சினையை மட்டும் வச்சு இரண்டரை மணி நேரம் கதை பண்றது கஷ்டமாச்சே?

உண்மைதான். ஆனா, இதுல சில உண்மைச் சம்பவங்களும் இருக்கு. டைரக்டருக்கு இது சவாலாதான் இருந்தது. இந்தக் கதையை அவர் உருவாக்குனதுமே தன்னோட நண்பர்கள்கிட்ட, தெரிஞ்சவங்ககிட்ட சொல்லியிருக்கார். அப்ப அவங்க ‘எனக்கு இப்படியொரு அனுபவம்,எனக்கு இப்படி நடந்துச்சு’ன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. அவங்க சொன்னதையும் சேர்த்து ரொம்பசுவாரஸ்யமா, எமோஷனலோட இந்தக் கதையை பண்ணியிருக்கார். இப்ப வீட்டுல ஒருத்தருக்கு உடல் நிலை சரியில்லைனா, உடம்பை பார்த்துக்கோங்கன்னுஆறுதல் சொல்வோம். ஆனா, கார்ல ஒருத்தன் கோடு போட்டுட்டான்னு சொன்னா அதைத் தாங்கிக்கவே முடியாது. அப்படியே கொதிச்சுருவோம். இந்த எமோஷன்தான் படம்.

உங்களுக்கு எம்.எஸ்.பாஸ்கர்தான் வில்லனா?

வில்லன்னு சொல்ல முடியாது. என் குடும்பமும் எம்.எஸ்.பாஸ்கர் சார் குடும்பமும் வாடகைக்கு இருக்கிறோம். எங்களுக்குள்ள கார் பார்க் பண்றதுல ஆரம்பிக்கிற பிரச்சினை எங்க கொண்டு போய் விடுதுன்னு கதை போகும். எம்.எஸ்.பாஸ்கர் சார், முந்தையை தலைமுறையை பிரதிபலிக்கிறவரா ரொம்ப அருமையா நடிச்சிருக்கார். இப்ப ஐடி-ன்னா பெரியவங்களை கூட பெயர் சொல்லிக் கூப்பிட கலாச்சாரம்தான் அங்க இருக்கு. ஆனா, எம்.எஸ்.பாஸ்கர் சாரால அப்படி இருக்க முடியாது. அதனால ரெண்டு பேருக்குள்ளயுமே கோபம் இருக்கும். அது வெவ்வேற மாதிரி வெளிப்படும். ஸ்கிரிப்ட் புக்ல என்ன இருந்ததோ, அதை அப்படியே படமாக்கி இருக்கார் இயக்குநர்.

படத்துக்காக 2 காரை புதுசா வாங்கியதா சொன்னாங்களே?

ஆமா. கதை முழுவதும் அதைப் பற்றிங்கறதால ரெண்டு கார் தேவைப்பட்டது. அது சொந்தமா இருந்தா நல்லாயிருக்கும்னு புதுசாவே வாங்கி படப்பிடிப்பை நடத்தினோம். மொத்தம் 35 நாள் ஷூட்டிங். விருகம்பாக்கம், வளசரவாக்கம் பகுதியிலயே ஷூட்டிங்கை முடிச்சுட்டோம். சில காட்சிகளை மட்டும் ஈசிஆர்ல எடுத்தோம்.

பார்க்கிங் பிரச்சினைக்குத் தீர்வு ஏதும் சொல்றீங்களா?

இந்தப் பிரச்சினைக்கு தீர்வுன்னு சொல்ல முடியாது. இது தொடர்ந்துட்டுதான் இருக்கும். அதை எல்லாம் விட மனிதாபிமானம் வேணும்னு சொல்ற படம். இப்ப வண்டியில லேசா இடிச்சுட்டா, கத்திட்டுப் போறதைவிட, ‘ஸாரி’ன்னு ஒரு வார்த்தை இறங்கி வர்றதுல என்ன இழந்திட போறோம்? அப்படி சொன்னா அது அதோட முடிஞ்சுரும். பேசிட்டே இருந்தா அது ஈகோவாகி, பெரிய பிரச்சினையிலதான் முடியும். இதுக்குன்னு இல்லை. எந்த சண்டையை தீர்க்கவும் மனிதாபிமானம் முக்கியம்.

இதுக்கு முன்னால அமைதியான, பக்கத்து வீட்டு பையனா நடிச்சிருக்கீங்க...இதுல வேற மாதிரி இருக்கே?

ஆமா. இதுக்கு முன்னால லவ்வர் பாய், பக்கத்து வீட்டுப் பையன், அப்பாவி பையன் மாதிரி நடிச்சிருக்கேன். இதுல கொஞ்சம் மெச்சூர்டான, கல்யாணமாகி மனைவியோட புதுவீட்டுக்கு போயிருக்கிற, பொறுப்பானவனா நடிச்சிருக்கேன். அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை சரியா பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்