“கன்டென்ட் தான் முக்கியம்... பட்ஜெட் அல்ல!” - விஷாலுக்கு மோகன்.ஜி பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: “சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம்; படத்தின் பட்ஜெட்டுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமில்லை” என இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ‘வா வரலாம் வா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, “தமிழ் சினிமாவை பொறுத்தவரை கன்டென்ட் தான் வெற்றிபெறும். சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம் என பிரிக்க வேண்டாம். முன்பு இங்கு பேசியவர்கள் கூறினார்கள், விஷாலின் கூற்றால் பல இயக்குநர்களுக்கு சின்ன பட்ஜெட் படங்கள் கிடைக்கவில்லை என்று. அப்படி மிஸ்ஸான இயக்குநர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, வருத்தப்படவேண்டாம். சின்ன பட்ஜெட் என்பதெல்லாம் முக்கியமில்லை. கன்டென்ட் தான் முக்கியம்.

உதாரணமாக நான் இருக்கிறேன். ரூ.75 லட்சத்தில் திரவுபதி படம் எடுத்தேன். தமிழ்நாட்டில் ரூ.18 கோடியை அப்படம் வசூலித்தது. ‘ருத்ரதாண்டவம்’ ரூ.4 கோடியில் உருவாக்கினோம். ரூ.13 கோடி தமிழ்நாட்டில் வசூலித்தது. ‘பகாசூரன்’ ரூ.5 கோடியில் உருவாக்கினோம். 3 படங்களையும் நான் தான் தயாரித்தேன். மூன்றுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். இவையெல்லாம் விஷால் சொன்ன பட்ஜெட்டில் எடுத்த படங்கள்தான். ஆனால் விஷால் சொன்னதில் ஓர் உண்மை உள்ளது. ஓடிடியில் ரூ.4, 5 கோடி பட்ஜெட் படங்களை மதிப்பதில்லை. அவர்களை சந்திப்பதற்கே அலைக்கழிப்பார்கள். அதனை மறுக்க முடியாது.

குறைந்த பட்ஜெட் படங்களை சேட்டிலைட் சானல் மற்றும் ஓடிடி நிறுவனத்தை தொடர்புகொண்டு வியாபாரம் செய்வது மிகவும் கடினமான விஷயம். அவர்கள் உங்களைத் தேடி வந்தால் மட்டும் தான் உங்களுக்கு வியாபாரம். மக்கள் எந்த படத்தை அதிகமாக பார்க்க வேண்டும் என நினைக்கிறார்களோ அந்தப் படங்களைத் தான் ஓடிடி நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன. மக்கள் பார்க்கும் வகையில் படங்களை இயக்குவது நம் கடமை.

மலையாளத்தில் ரூ.10 லட்சத்தில் உருவான படம் ரூ.13 கோடியை வசூலித்தது. ஆக, சினிமா அப்படி ஒரு மேஜிக் தான். அதற்கு பட்ஜெட் பெரிய விஷயமில்லை. இந்த வருடம் ‘குட் நைட்’, ‘பகாசூரன்’, ‘அயோத்தி’, ‘போர்தொழில்’ ஆகிய படங்கள் ரூ.4-5 கோடியில் உருவாக்கப்பட்ட படங்கள் தான். நல்ல வரவேற்பை பெற்றன. பட்ஜெட்டுக்கும், வெற்றிக்கும் சம்மந்தமில்லை. கன்டென்ட் தான் முக்கியம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE