அன்னை இல்லம்: நாகேஷை கண்டித்த தணிக்கை அதிகாரி!

By செய்திப்பிரிவு

கல்யாண்குமார் நடித்த ‘மணி ஓசை’ மூலம் இயக்குநராக அறிமுகமான பி.மாதவன், அடுத்து இயக்கிய படம், ‘அன்னை இல்லம்’. தாதா மிராஸியின் மூலக் கதைக்கு பாலசுப்பிரமணியம் திரைக்கதை எழுதினார். ஆரூர்தாஸ் வசனம் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். டைட்டிலில், ‘திரை இசை திலகம்’ கே.வி.மகாதேவன் என்று போட்டிருப்பார்கள். பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு.

தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானம், சிவாஜியின் நெருங்கிய நண்பர். அவரை மட்டுமே வைத்து படங்கள் தயாரித்து வந்தார். இயக்குநர் பி.மாதவனின் முதல் படம் சுமாராக ஓடினாலும் அவரை தயாரிப்பாளர் சந்தானத்திடம் பரிந்துரைத்தார் சிவாஜி. அதற்குக் காரணம் டி.ஆர்.ரகுநாத், ஸ்ரீதர் ஆகியோரிடம் மாதவன் உதவி இயக்குநராகப் பணியாற்றியதால் சிறப்பாக இயக்குவார் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்டதுதான், ‘அன்னை இல்லம்’.

சிவாஜி கணேசனுடன், தேவிகா, முத்துராமன், எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, நாகேஷ், ஜெயந்தி, சச்சு, ஓ.ஏ.கே.தேவர் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஒரு காலத்தில், ஊருக்கு வாரி கொடுத்து வள்ளலாக திகழ்ந்த ரங்காராவ், ஒரு கட்டத்தில் ஏழையாகிறார். அவர் மீது கொலைக் குற்றமும் சுமத்தப்படுகிறது. மூத்த மகன் சிவாஜி அவருடனும், இளைய மகன் முத்துராமன், அம்மாவுடன் வாழ்கிறார்கள். நம்பியார் செய்யும் சதியால் தூக்குத் தண்டனை கிடைக்கிறது ரங்காராவுக்கு. அவரைக் காப்பாற்றப் போராடுகிறார் சிவாஜி. இறுதியில் குடும்பம் எப்படி ஒன்றாகிறது என்பது கதை.

சிவாஜி கணேசனின் சொந்த வீட்டுப் பெயரையே இந்தப் படத்துக்குத் தலைப்பாக வைத்தனர். சிவாஜி, ரங்காராவ், தேவிகா ஆகியோரின் நடிப்பு இதில் பேசப்பட்டது. நாகேஷ் திக்குவாய் கொண்டவராக நடித்திருப்பார். இப்படி பேசி நடித்ததன் மூலம் திக்குவாய் கொண்டவர்களை வேதனை பட வைத்துவிட்டதாகக் கூறி, அப்போதைய தணிக்கை அதிகாரி சாஸ்திரி, நாகேஷை நேரில் அழைத்து கண்டித்தார்.

கண்ணதாசன் வரிகளில் ‘எண்ணிரண்டு பதினாறு வயது’, நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது’, ‘சிவப்பு விளக்கு எரியுதம்மா’, ‘மடி மீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்’, ‘என்ன இல்லை’ என்பது உட்பட பாடல்கள் மெகா ஹிட்.

அப்போது, சென்னை வானொலியில் இரவு 11 மணிக்கு மேல் அதிக முறை ஒலித்த பாடல், இந்தப் படத்தின் ‘மடி மீது தலைவைத்து’. இப்போது கேட்டாலும் புது உணர்வை தரும். ‘சிவப்பு விளக்கு எரியுதம்மா’ பாடலை சென்னையின் அப்போதைய மிகவும் உயரமான கட்டிடமான எல்.ஐ.சி-யின் மேல் தளத்தில் படமாக்கி இருந்தனர். இது அப்போது பேசப்பட்டது.

இந்தப் படத்துக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் எம்.ஜி.ஆர் நடித்த ‘பரிசு’ படத்துக்கும் வசனம் எழுதியிருந்தார். இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி, 100 நாட்கள் ஓடின.

1963 ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது ‘அன்னை இல்லம்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE