இளையராஜாவுடன் இசையிரவு 35 | ‘மழை வருது மழை வருது...’ - மனக் குடைக்குள் ‘வயலின்’ சாரல்!

By குமார் துரைக்கண்ணு

மழை பெய்யத் தொடங்கும் போதெல்லாம் இன்ஸ்டா, ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக ஊடகங்களில் எல்லாம் வெள்ளமென நிரம்பி வழிகிறது இசைஞானி இளையராஜாவின் இசையும் பாடல்களும். ஆவி பறக்கும் ஒரு தேநீர் கோப்பை புகைப்படத்தின் பின்னணியில் பின்னூட்டமாக வரும் ராஜாவின் இசையும் பாடலும், அதை பதிவிட்ட நபர்களது மனதின் அவதானிப்புகளை எல்லாம் மின்னல் போல் திசையெங்கும் பளிச்சிட செய்கிறது.

யாரோ ஒரு நபர், ஏதோ ஒரு டீக்கடையின் தேநீர் கோப்பையில் தனது மனதின் கதகதப்பையும் மழையின் ஈரத்தையும் நிரப்பி, ராகதேவனின் இசை கலந்து சமூக ஊடகங்களில் பரிமாறும் அந்த தேநீர் சுகமான நினைவுகள் பொதிந்தவை. எங்கோ, யாருடைய மனசுக்குளோ பட்டாம்பூச்சியின் சிறகை விரிக்கச் செய்த அந்த பாடல், இணையத்தின் வழியே ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பகிரப்படுகிறது. ஆனால், அப்பாடலைக் கேட்கும் அனைவருக்குள்ளும் அதே பட்டாம்பூச்சியின் ஸ்பரிசத்தை ஏதோ ஒருவகையில் உணரச் செய்வதே மேஸ்ட்ரோவின் சிறப்பே.

மழை அனைத்தையும் ஈரமாக்கும். ராஜாவின் இசை மழையை ஈரமாக்கும். அவரது இசையில் மழை நனைந்த கதையை ஒரு புத்தகமாக கொண்டு வரலாம் எனும் அளவுக்கு மழை பாடல்களையும், மழை தொடர்பான காட்சிகளையும் தனது இசையால் கரைத்தவர் இசைஞானி. இந்தப் பாடல் காட்சியில் மழை வராது, ஆனால் நம் மனதுக்குள் மழையைக் கொண்டுவரும் பாட்டு. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த படம் 'ராஜா கைய வெச்சா'. இப்படத்தில் வரும் "மழை வருது மழை வருது" பாடல்தான் அது. பாடலை கவிஞர் புலமைப்பித்தன் எழுத, ஜேசுதாஸ் உடன் சித்ரா இணைந்து பாடியிருப்பார்.

தரை தொடும் முன்பே சமிக்ஞைகளால் எச்சரிக்கும் மழை. இப்பாடலின் தொடக்க இசையும் அப்படித்தான், மழையில் நனையாதிருக்க செய்யும் மனிதர்களின் ஆயத்தங்களைப் போலவே கேட்கப்போகும் பாடலுக்கு நம் மனதை ஆயத்தமாக்கியிருக்கும். அந்த ஓபனிங் கிடாரும், பெல்லும் மழைக்கு முன்பாக கூடும் கருமேகத்துக்குள் நம்மை கடத்தி சென்று விடும். அதன்பின் தின்னமாக வரும் காந்தர்வனின் குரலில் வரும் லா லால லா லால லாலா என்ற லல்லபி இன்னும் சற்று நீளாத என ஏங்கிடும் போது, வலிக்காமல் முகத்தின் மீது விடாது விழும் முத்துமணித் துளிகளாய் வரும் ஏழெட்டு கவுன்ட்டில் வரும் சந்தூர் இசையில் மொத்த மனதும் நனைந்து போகும்.

தூறாலாய் பெய்யும் மழையை கடக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக நனைந்து போவோம். அதுவும் வாகனத்தில் செல்லும்போதோ, மூடப்படாத பேருந்தின் ஜன்னலோரத்தில் அமர்ந்து பயணிக்கும்போதோ அடர்த்தியான காற்றை சமாளிக்க முடியாமல் முகத்தில் பளாரென விழும் மழை போலத்தான், பாடலின் முதல் சரணத்துக்கு முன்வரும் இடையிசையை ராஜா அமைத்திருப்பார். வயலின் உள்ளிட்ட ஸ்டிரிங் இசைக் கருவிகளுடன் கிடாரும் பெல்லும் மழைத் தூறலாய் பெய்ய, ஒரு லாங் நோட்டில் வரும் அந்த புல்லாங்குழலின் ஆலாபனைதான் காற்றின் கனத்தையும் மழையின் சுவையையும் மனதுக்கு தந்திருக்கும்.

தகிக்கும் வெயிலுக்கு மழை எப்போதும் அஞ்சாது. சிலநேரங்களில் வெயிலோடு சேர்ந்து மழையும் பெய்யும். அதுபோன்ற நேரங்களில் வெயிலை நம்பி முன்செல்லவும் முடியாமல், மழைக்குப் பயந்து பின்வாங்கவும் முடியாமல் மனம் படாதபடும். அதுவொரு இதமான வேதனை. அதைத்தான் இப்பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்வரும் இசை விவரித்திருக்கும். இரு வேறு ட்ராக்குகளில் பயணிக்கும் வயலின்கள் வெயிலும் மழையுமாய் மனதை பரிதவிக்கச் செய்திருக்கும். அந்த இடத்தில் தீர்க்கமாக விழும் பியானோ மற்றும் பாடல் முழுவதும் பின்தொடர்ந்து வரும் அந்த பெல்லின் ஒலியும் வானில் இருந்து கீழ் விழுந்து தெறிக்கும் மழைத்துளிகளாய் மனதை சிதற செய்திருக்கும். அந்த இடத்தில் இருந்து இரண்டாவது சரணம் தொடங்குவதற்குமுன் வரும் முன்வரும் ஒரு சின்ன இடைவெளியை புல்லாங்குழல், வயலினை வைத்து இசைஞானி நிரப்பியிருக்கும் அந்த இடத்தில் மனதோடு சேர்த்து நம்மையும் முழுமையாக நனைந்து போக செய்திருப்பார். இசைஞானியின் இசைமழை தொடரும்... | மழை வருது மழை வருது பாடல் இணைப்பு இங்கே

முந்தைய அத்தியாயம்: இளையராஜாவுடன் இசையிரவு 34 | ‘சொர்க்கத்தின் வாசற்படி’ - எண்ணக் கனவுகளை கலைத்துவிடும்‘கிடார்’!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

48 mins ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்