என் பேய் பட இமேஜை ‘ஜிகர்தண்டா 2’ உடைக்கும்: ராகவா லாரன்ஸ் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள படம், ‘ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் 10-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது:

இது கேங்ஸ்டர் கதை. பழங்குடி பின்னணியில் உருவாகி இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக நடித்திருக்கிறார். 1975-ம் ஆண்டில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்து உடைகள் போல் அணிந்து நடித்தது புதிதாக இருந்தது. பிரபலமாக இருக்கிற ஒரு ரவுடி, கலைத்துறைக்குள் வரும் போது என்ன மாற்றம் நடக்கிறது என்பது கதை. அந்த மாற்றம் அழுத்தமாகவும் வலி நிறைந்ததாகவும் இருக்கும். கடைசி 20 நிமிடம் படம் வேறு மாதிரி இருக்கும்.

படம் முடிந்து வெளியே வரும்போது நல்ல படம் பார்த்த திருப்தியோடு மக்கள் வருவார்கள். ‘ஜிகர்தண்டா’ நான் நடிக்க வேண்டிய படம். அந்தக் கதையை என்னிடம்தான் கார்த்திக் சுப்புராஜ் சொன்னார். அப்போது நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அதில் நடிக்க முடியவில்லை. அதனால் இதில் நடிக்க நானாகத்தான் கேட்டேன். நிமிஷா சஜயன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அவருடன் நடிக்கும் போது கவனமாக இருந்தேன். இந்தப் படத்தில் என் கேரக்டருக்கு ‘ரெஃபரன்ஸ்’ இல்லை.

இதுமாதிரி கேரக்டரை முன்பு பார்த்ததுமில்லை. மதுரை ஸ்லாங்கில் பேசி நடித்திருக்கிறேன். எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தது சிறப்பாக இருந்தது. நான் டான்ஸ் படம், ஆக்‌ஷன் படம் எல்லாம் முயற்சி செய்துவிட்டு, பேய் படம் பண்ணினேன். வழக்கமாக பேய் படம் என்றால் பயம் மட்டும்தான் இருக்கும். அதில் ஒரு மெசேஜ் சொல்லி காமெடி சேர்த்து பண்ணலாம் என்று முயற்சி செய்த படம் ‘முனி’. அது ‘காஞ்சனா’வில் நன்றாக ஒர்க் அவுட் ஆனது. பேய் படம் பண்ணினால்தால் வெற்றி பெற முடியும் என்ற இடத்துக்கு அது என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. எனக்கு இருக்கும் அந்த பேய் பட இமேஜை இந்தப் படம் உடைக்கும். இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE