கமலின் ‘தக் லைஃப்’ பட கதாபாத்திரத்தின் சாதிய அடையாளம்: நெட்டிசன்கள் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ நேற்று (நவ.6) வெளியானது. அதில் அவரது கதாபாத்திர பெயர் சாதிய அடையாளத்துடன் இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ள நிலையில், அறிமுக வீடியோவை படக்குழு நேற்று (நவ.6) வெளியிட்டது.

இந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசன், “என் பேரு ரங்க ராயர் சக்திவேல் நாயக்கன். காயல்பட்டினக்காரன்” என தொடங்குகிறார். ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் மாரிசெல்வராஜ் பேச்சுக்குப் பின் கமலின் ‘தேவர் மகன்’ படம் விவாதத்தை கிளப்பியது. கமலின் சாதிய பெயர் தொடர்பான பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் சாதிய அடையாளத்துடன் புதிய படத்தில் கமல் நடிக்க இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில், “சாதிய பெயரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொருவர், கமல்ஹாசனின் தொடர் சாதிய கதாபாத்திர பெயர்கள் குறித்து விமர்சித்துள்ளார்.

ஃபேஸ்புக் பக்கத்தில், “இப்படி சாதி பேசிட்டு அப்பறம் அது யாரையும் புண்படுத்துற நோக்கத்துல எடுத்தது இல்ல. நானே ஒரு சாதி ஒழிப்பாளன் தான்னு பேசுறது...” என ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.

எக்ஸ் தளவாசி ஒருவர், கிண்டலாக, “நாங்கள் சாதிய பெயரை நியாபகம் வைத்துகொள்வதில்லை” என ட்ரோல் செய்துள்ளார்.

“கதாபாத்திரத்துக்கு சாதிய பெயர் வைத்துள்ள இப்படத்தை தடை செய்ய வேண்டும்” என்றும் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE