என் கால்ஷீட் எனக்கே கிடைக்கலை! - எஸ்.ஜே.சூர்யா

By செ. ஏக்நாத்ராஜ்

தீபாவளிக்கு வெளியாகிறது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. டிரெய்லரில் தெரியும் பிரம்மாண்டமும் ஸ்டைலான மேக்கிங்கும் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் மிரட்டல் லுக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. படம் பற்றி எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசினோம்

கேங்ஸ்டர் பின்னணி கதைதானா?

ஒரு சினிமா இயக்குநர், கேங்ஸ்டரோட கிரைம் உலகத்துக்குள்ள வர்றார். சினிமாங்கற கலை, இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வருது, இதன் மூலமா, கேங்ஸ்டரோட பழங்குடி பகுதி மக்களுக்கு என்ன நடக்குது அப்படிங் கறதுதான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. வழக்கமான கேங்ஸ்டர் கதையா இது இருக்காது.

ராகவா லாரன்ஸோட நடிச்ச அனுபவம் எப்படியிருக்கு?

இந்தப் படத்துல, ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு நல்ல நடிகர்ங்கற பேர் கிடைக்கும். அந்தளவுக்கு பிரம்மாதமா பண்ணியிருக்கார். ஒரு படத்துல வெற்றியும் பெயரும் கிடைச்சா எப்படியிருக்குமோ, அப்படியொரு படமா இது அவருக்கு இருக்கும். வாழ்க்கையில பின்னால திரும்பிப் பார்த்தா, திருப்தியா, மகிழ்ச்சியா உணர்ற படமாகவும் இருக்கும். எனக்கும் வித்தியாசமான படமா இருக்கும்.

முதல்ல இந்தப் படத்தில் நடிக்க தயங்கினீங்களாமே?

ஆமா. இயக்குநர் கதை சொல்லும்போது ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, டைரக்டரா நடிக்கணும்னு சொன்னதும் தயங்கினேன். ஏன்னா, இப்பதான் நல்லா நடிக்கிறதா எல்லோரும் சொல்லிட்டு வர்றாங்க. அதுக்கான அங்கீகாரத்தை வாங்கிட்டு வர்றேன். இந்த நேரத்துல டைரக்டரா பண்ணணுமா?ன்னு நினைச்சேன். ரெண்டு மூனு நாள் கழிச்சு பார்க்கும் போது ஓர் உண்மை புரிஞ்சுது. உலக அளவுல புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித் ரே அசிஸ்டென்டா நடிக்கிறதுக்கு கிடைச்ச பெரிய வாய்ப்பு அதுங்கறதை உணர்ந்தேன். இந்தியில ‘லகான்’ படம் ஹிட்டாகுதுன்னா, ஆமிர்கான் அதுல ஒரு ‘பிளேயர்’. அவர் ஹீரோ அப்படிங்கும்போது அவர் களத்துல ஆடறதைப் பார்க்க ரசிகர்களுக்கு ஆர்வம் இருக்கும். ‘சக்தே இண்டியா’ படத்துல ஷாருக்கான் ஒரு ‘கோச்’. கோச் அப்படிங்கறது ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். அவன் ஹீரோ ஆகவே முடியாது. ஆனா, அவரை ஹீரோவா வச்சு எப்படி ஹீரோயிசம் காட்டப் போறாங்கன்னு நினைச்சேன். ஆனா அதுல அப்படியொரு எமோஷன் வச்சிருந்தாங்க. படம் ஹிட். அதே போல இந்த ஸ்கிரிப்டல டைரக்டரா நான் நடிச்சாலும் அதுல என் கேரக்டருக்கு நடிப்பை வெளிப்படுத்தறதுக்கான இடம் இருக்கு. அது மட்டுமில்லாம ஒரே மாதிரி நடிச்சிட்டிருந்தா அது ரசிகர்களுக்கும் போரடிச்சுடும். வித்தியாசம் வேணும். இந்த கேரக்டர்ல அது எனக்கு கிடைச்சிருக்கு.

நீங்களும் இயக்குநர்... இதுல நடிக்கும்போது உங்க ‘டைரக்டர்’ வெளிவந்தாரா?

நான் இதுல டைரக்டரா நடிச்சிருக்கேன், அவ்வளவுதான். ஆனா, நீங்க நினைக்கிற மாதிரி அந்த டைரக்டர் வெளிவரலை. அதுக்கான அவசியமும் இல்லை. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என்ன எதிர்பார்த்தாரோ அதைதான் பண்ணியிருக்கேன். 1975-ம் வருஷ காலகட்டத்துல நடக்கிற கதை. ‘ரே தாசன்’ என் கேரக்டர் பெயர். சத்யஜித் ரே என்ன மாதிரி ஸ்டைல்ல இருப்பாரோ, அப்படியே என் உடைகள்ல இருந்து எல்லாத்தையும் பின்பற்றி நடிச்சிருக்கேன்.

‘இறைவி’ படத்துல இருந்து உங்க நடிப்புல பெரிய வித்தியாசம் தெரியுது. நுணுக்கங்கள் வெளிப்படுதுன்னு சொல்றாங்க... எப்படி வந்தது இந்த மாற்றம்?

நான் இயக்குநரா இருக்கும் போது, வெவ்வேறு ஹீரோக்கள்கிட்ட நடிப்பை வாங்கியிருக்கேன். என் படத்துல நான் கேட்கிற நடிப்பையும் அவங்க கொடுக்கிறாங்க, மற்ற படத்துல இன்னொரு டைரக்டர் கேட்கற நடிப்பையும் கொடுக்கிறாங்க. அதனாலதான் பெரிய ஹீரோக்கள் அந்த இடத்துல இருக்காங்க. பொதுவா ‘பிளேயர்’ மனநிலை, ‘கோச்’ மனநிலைன்னு ரெண்டு இருக்கு. கேமராவுக்கு பின்னால நின்னா, கோச். கேமராவுக்கு முன்னால வரணும்னா ‘பிளேயர்’ மனநிலை வேணும். நான் இயக்கி நடிக்கும்போது எனக்கான கேரக்டரை நானே எழுதினேன். அதனால அது சரியா அமைஞ்சது. மற்ற இயக்குநர்கள்கிட்ட நடிக்க போகும்போது ஆரம்பத்துல சரியான படங்கள் அமையல. ‘இறைவி’ல இருந்து அது அமைய ஆரம்பிச்சுது. ஒரு படம் ஹிட்டாகுது, ஆகலைங்கறது நம்ம கையில இல்லை. ஆனா, உனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியா செஞ்சியா, இல்லையா அப்படிங்கறதுல கவனம் எடுத்துக்கணும்னு நினச்சேன். அதுக்கு புரொபஷனல் நடிகன் ஆகணும்னு தோணுச்சு. அதுக்காக நானே, படங்கள் பார்த்து எனக்கு பயிற்சி கொடுத்துக்கிட்டேன்.

இப்ப இருக்கிற இயக்குநர்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?

முன்னாடி எப்படின்னா, இயக்குநர் ஓர் உலகத்தை சித்தரிக்கிறார். அதுல முதல் பாதியில ஒரு பிரச்சினையை வைக்கிறார். இரண்டாம் பாதியில அதை தீர்க்கிற மாதிரி விஷயம் இருக்கும். இன்னைக்கு திரைக்கதை பேட்டர்ன் மாறுது. ஆனா, சினிமாவுக்கான இலக்கணத்தை மீற முடியாது. ஒரு காரை புதுசா ஆக்கணும்னு கதவை மாத்தலாம், கலரை மாத்தலாம், வீலை மாத்த முடியாது இல்லையா?. ரொம்ப நாளா வட்டமாகவே இருக்கேன்னு சதுரமா வீல் அமைக்க முடியாது. அந்த ‘வட்டம்’தான் எமோஷன்ஸ். இன்னைக்கு கதை சொல்லப்படும் முறையில மாற்றங்கள் இருக்கு. அதுக்கு நாமும் மாறிக்கணும்.

தீபாவளிக்கு வெளியாகிற உங்களோட முதல் படம் இதுன்னு சொன்னாங்களே?

தீபாவளிக்கு நான் இயக்கிய படங்கள் கூட வந்ததில்லை. இதுதான் முதல் முறை. பெரிய ஹீரோக்கள் படம் தீபாவளிக்கு வந்திருந்தா, இந்தப் படத்துக்கான ரிலீஸ் அமைச்சிருக்காது. ‘மாநாடு’ ரிலீஸ் நேரத்துல கூட, படம் பார்த்துட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்கிட்ட சொன்னேன், ‘படம் எப்பரிலீஸ் ஆகுதோ, அன்னைக்குத்தான் தீபாவளி’ன்னு. ‘ஜிகர்தண்டா 2’ படத்துக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்னு நம்பறேன். படம் பார்த்துட்டு வெளிய வரும்போது வேற மனநிலையில வருவாங்க.

நீங்க இயக்குறதா இருந்த ‘கில்லர்’ என்னாச்சு?

இப்ப உள்ள நிலையில எஸ்.ஜே.சூர்யா கால்ஷீட் எஸ்.ஜே.சூர்யாவுக்கே கிடைக்காத நிலைமைதான் இருக்கு. இப்ப சில நல்ல படங்கள்ல தொடர்ந்து நடிச்சிட்டிருக்கேன். இதுல கிடைக்கிற பணத்தைக் கொண்டு அடுத்தும் சினிமாவுல போடறதுக்கான உழைப்பு அது. எனக்கு பெரிய திட்டங்கள் ஏதுமில்லை. நேரம் கிடைக்கும்போது, இயக்குநர் எஸ்.கே.சூர்யாவை கண்டிப்பா பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE