ஷங்கரின் ஃபார்முலாவும் பிரமாண்டமும் - கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ அறிமுக வீடியோ எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோ எப்படி? - இயக்குநர் ஷங்கரின் அக்மார்க் டச்சான லஞ்ச விவகாரம், பிரமாண்டம் ஆகிய இரண்டுமே இந்தப் படத்தில் தவறாமல் இடம்பெற்றிருக்கிறது. வீடியோவின் தொடக்கத்தில், “எங்க தப்பு நடந்தாலும் நான் வருவேன்; இந்தியனுக்கு சாவே கிடையாது” என நடிகர் கமல் வெளிநாட்டிலிருந்து தொலைபேசியில் பேசுகிறார். பதவிக்காக கொடுக்கப்படும் லஞ்சம், கான்டரக்ட்டுக்காக லஞ்சம், என நீளும் வீடியோவில், காட்சிகள் எங்கும் பணம் நிறைந்து கிடக்கிறது.

‘அநியாயம் பழகிருச்சே... எதுவும் இங்க மாறலையே... எவனும் இங்க திருந்தலையே’ என அனிருத் குரலில் ஒலிக்கும் பாடல், நாற்காலியில் அதிகாரியை உட்கார வைத்து காக்கி உடையில் ‘லஞ்சம் லஞ்சம் லஞ்சம்’ என ஆக்ரோஷம் கொள்ளும் கமல் என இந்தக் காட்சிகள் ஏற்கனேவே ‘இந்தியன்’ முதல் பாகத்தில் பார்த்த லஞ்சக் கதையையே நினைவூட்டுகின்றன. புதுமையாக எந்த வசனமும், கதைக்கான லீடும் கிடைக்காதது ஒரே மாதிரியான டெம்ப்ளேட் களத்தை வெளிப்படுத்துகிறது.

மேலும், கரோனா காலத்தில் பிரதமர் மோடி பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்புமாறு கூறியதும், ஒளிவிளக்கு ஏற்ற சொன்ன காட்சிகளும் வீடியோவில் வந்து செல்கின்றன. ‘வணக்கம் இந்தியா...இந்தியன் இஸ் பேக்’ என கமல் சொல்வதுடன் வீடியோ முடிகிறது. புதிய இந்தியாவுக்கு ஏற்ற முறையில் இந்த இந்தியன் நவீன இந்தியனாக இருப்பானா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. பிரமாண்ட காட்சிகளும், அதற்கான மேக்கிங்கும் வீடியோவில் கவனம் பெறுகிறது. தவிர, கன்டென்ட் ரீதியாக படம் எந்த அளவுக்கு சுவாரஸ்யம் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அறிமுக வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE