“நடிகன் தன்னை தயார் செய்துகொள்வது என்பது அவனது அன்றாட வாழ்விவல் பின்னிப் பிணைந்துவிட வேண்டும். அப்போதுதான் அவன் கலையின் உண்மையை (Artistic Truth) அடைய இயலும்” என்பார்கள். அந்த வகையில் தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு புதிய கதாப்பாத்திரங்களின் வழியே மக்களுடன் பின்னிப் பிணைந்த கலைஞன் நடிகர் விக்ரம்.
90-களில் பல கனவுகளுடன் தொடங்கியது நடிகர் விக்ரமின் திரையுலகப் பயணம். பன்முகத் திறமை கொண்ட அவரது நடிப்பாற்றலை வெளிக்கொணரும், தருணத்துக்காக அவர் வருடக் கணக்கில் காத்துக் கிடந்தார். இதனிடையே, அவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக கைக்கொடுக்கவில்லை. இவரது காலத்தில் தங்களது திரைப் பயணத்தை தொடங்கிய நடிகர்கள் பலரும் ரசிகர்களின் கவனம் பெற்று, வானத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், முதல் வெற்றிக்கான தடத்தை நோக்கிய தேடலில் விக்ரம் சோர்ந்தே போயிருந்தார்.
1990-ல் தொடங்கி 98-வரையிலான ஆண்டுகளில் மீரா, புதிய மன்னர்கள் மற்றும் உல்லாசம் ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்கள் விக்ரமை நினைவில் வைத்துக்கொள்ள உதவியிருந்தன. இருப்பினும், இந்தப் படங்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. டெலிவிஷனில் இருந்து தொடங்கிய திரைப் பயணத்தில் விக்ரம் ஒருமுறைகூட வெற்றியைக் கொடுக்காத சினிமாவை விடாமல் துரத்திக் கொண்டிருந்தார். இடைப்பட்டக் காலத்தில் அமராவதி மற்றும் பாசமலர்கள் திரைப்படத்தில் அஜித்துக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார்.
அதேபோல ஜாதிமல்லி, புதிய முகம் திரைப்படங்களில் நடிகர் வினீத்துக்கும், காதலன், ராசய்யா, மின்சார கனவு மற்றும் விஐபி ஆகிய படங்களில் பிரபு தேவாவுக்கும், காதல் தேசம், விஐபி, பூச்சூடவா, ஆசைதம்பி, ஜாலி, இனி எல்லாம் சுகமே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல படங்களுக்கு அப்பாஸுக்கும் பின்னணி குரல் கொடுத்திருப்பார். என்றாவது வெள்ளித்திரைக்கு முன் வெற்றி பெற போராடிய விக்ரம் ஒரு டப்பிங் கலைஞராக திரைக்குப் பின்னால் மட்டுமே ஜெயித்துக் கொண்டிருந்தார்.
» கனமழை எச்சரிக்கை: பழநி, மணிமுத்தாறு, கோவை, திருச்சியில் தயார் நிலையில் 12 பேரிடர் மீட்பு குழுக்கள்
» “சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் மத மாற்றம் அதிகரிப்பு” - அமித் ஷா குற்றச்சாட்டு
அந்தநேரத்தில் வெளிவந்தது ‘சேது’ திரைப்படம். விக்ரம் போலவே முதல் வெற்றிக்காக காத்திருந்த இயக்குநர் பாலாவின் முதல் திரைப்படமும் அதுதான். பெரும் போராட்டங்களுக்குப் பின் வெளியான அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் சரியாக போகவில்லை. ஒருவழியாக இரண்டாவது மூன்றாவது வாரங்களில் இருந்து அந்தப்படத்துக்கு மெல்ல மெல்ல வரவேற்பு கிடைக்கத் துவங்குகிறது. தமிழகமெங்கும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். படத்தின் வெற்றியில் பாலாவின் இயக்கத்துக்கு இணையாக விக்ரமின் நடிப்பு பட்டிதொட்டியெங்கும் பேசுபொருளானது. முதல் பாதியில் 'சீயான்' கதாபாத்திரத்தில் கல்லூரியின் ரக்கட் பாயாக வரும் விக்ரமையும் அவரது நண்பர்களையும் மறக்க முடியாதது.
அப்படியே அதற்கு நேரெதிராக இரண்டாவது பாதியில் வரும் விக்ரமின் நடிப்பு அதுவரை கலகலப்பாக இருந்த தியேட்டருக்குள்ளும், நமக்குள்ளும் ஒரு நிசப்தத்தைக் கொண்டு வந்திருக்கும். மெலிந்த தேகமும், மொட்டைத் தலையுமாய் வரும் அந்த கதாப்பாத்திரம் படம் முடிந்து வெகுநேரத்துக்குப் பின்னரும் படம் பார்த்தவர்களின் மனதுக்குள் ஒரு கனத்த மவுனத்தை சுமக்க செய்திருக்கும். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், அந்த மனநல மருத்துவமனை வேனுக்குள் ஏறுவதற்கு முன் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்லும் விக்ரமை, தமிழ்த் திரையுலகும், ரசிகர்களும் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கத் தொடங்கியது அங்கிருந்துதான்.
அதிலிருந்து இரண்டு ஆண்டுகால இடைவெளி மீண்டும் விக்ரம் வந்தார். இந்தமுறை கனகவேலாகவும், காசியாகவும் பரிணமித்த விக்ரமை திரையுலகம் உற்றுநோக்கத் தொடங்கியது. எத்தனை திறமையான படைப்பாக இருந்தாலும் சந்தையில் விலைபோக வேண்டும். சினிமாவில் அதுதான் ரொம்ப முக்கியம். அப்படியான நேரத்தில்தான் விக்ரமுக்கு கைகொடுத்து உதவிய திரைப்படம் ‘தில்’. கமல்ஹாசன் தவிர அதுவரை போலீஸ் கதாப்பாத்திரத்துக்கு அத்தனை சிரத்தை யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். வெறுமனே போலீஸ் உடையில், அவர்களது டிரேட் மார்க் ஹேர் ஸ்டைலுடன்தான் நடித்திருப்பார்கள்.
ஆனால், இந்தப் படத்தில் கனகவேல் ககதாப்பாத்திரத்தில் வரும் விக்ரம், உடலை வருத்தி, தலைமுடி திருத்தி மிடுக்காக வரும் காட்சிகள் மிரள வைத்திருக்கும். போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற மிடில் கிளாஸ் குடும்பத்து இளைஞனாக வரும் விக்ரம் தனது தன்னிகரற்ற நடிப்பால் லட்சியத்துக்கானப் போராட்டத்தில் ஏற்படும் வலிகளையும் வேதனைகளையும் தீர்க்கமாக வெளிப்படுத்தியிருப்பார். விக்ரமின் நீண்டகாலப் போராட்டத்துக்கு கிடைத்த ரசிகர்களின் அங்கீகாரத்தை பட்டைத்தீட்டியப் பாத்திரங்களில் கனகவேல் கதாபாத்திரம் தனித்துவம் வாய்ந்தது.
‘தில்’ திரைப்பபடம் வெளியான அதே ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மற்றொரு திரைப்படம் ’‘காசி’. ‘வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே நானும்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான் ‘காசி’. ஆனால், திரையுலகில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று தவமாய் தவமிருந்த விக்ரமின் நடிப்புத் திறமைக்கு நிறைவாய் இரை கிடைத்த படம் இதுதான். சீயானாகவும், கனகவேலாகவும் உடலை வருத்திக்கொண்ட விக்ரம் இம்முறை தனது கண்களை வருத்தி நடித்திருந்த திரைப்படம் இது. படத்துக்குப் படம் வித்தியாசம் காட்ட எத்தனித்த அவரது பயணத்தில் ‘காசி’ ஒரு மைல்கல் என்றால் மிகையல்ல.
நடிகர் திலகம் தொடங்கி பலரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக பல படங்களில் நடித்திருப்பர். அவ்வாறான திரைப்படங்களில் பெரும்பாலும் கருப்புக் கண்ணாடி அணிந்து கொள்வர். அந்த அடர் கருப்புக் கண்ணாடிதான் நடிகர்களை பார்வையற்றவர்களாக அதுவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருந்தது. ஆனால் ‘காசி’யில் கண்ணாடியே அணியாமல் பார்வையற்றவராக வரும் விக்ரம் தனது கண்களை வருத்திக்கொண்டு மேற்கொண்ட முயற்சியும் அர்ப்பணிப்புமிக்க அவரது உழைப்பும் ‘காசி’ மீது மக்களுக்கு பரிதாபத்தையும், கருணையையும் ஏற்படுத்தியிருக்கும். மேலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கே உரிய உணரும் திறனை படம் முழுக்க இயல்பாக வெளிக்காட்டியிருப்பார். இதுதான் அதுவரை விக்ரமையும் அவரது திறமையையும் கண்டுகொள்ளாமல் கண் மூடிக்கிடந்த கோடிக்கணக்கான கண்களைத் திரும்பிப் பார்க்க செய்திருந்தது.
கிட்டத்தட்ட 4 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பாலாவின் இயக்கத்தில் சூர்யாவுடன் விக்ரம் நடிப்பதாக செய்தி வெளியானது. சீயான், கனகவேல், காசியாக அவதரித்த விக்ரம் இந்தமுறை என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லா மட்டத்திலும் எகிறியது. விக்ரமை இம்முறை சித்தனாக செதுக்கியிருந்தார் பாலா. சினிமாவில் முன்எப்போதும் பேசப்பட்டிராத கதாப்பாத்திரம் சித்தனுடையது. குரலற்ற எத்தனையோ சித்தன்களின் மவுனத்தை தனது திடமான நடிப்பால் உரக்கப் பேசி உயிர்ப்பித்திருக்கும் விக்ரமின் நடிப்பு.
இடுகாட்டுச் சடங்குகளும், பாடைகளும் படையல்களும் வாழ்வாக்கப்பட்ட சித்தனும் இந்த சமூகமும் நேருக்கு நேர் சந்திக்கும்போது நிகழும் மாற்றங்களை விக்ரம் வெளிக்காட்டிய விதம் பாராட்டுக்குரியது. இறுக்கம், உறுதி, நட்பு, கோபம், சோகம் என சித்தனாக வரும் விக்ரமின் நடிப்பை இப்போது பார்த்தாலும் பரவசம்தான். இறுதிக் காட்சியில் ஆக்ரோஷமும் அழுகையும் கலந்த சித்தனாக விக்ரம் நடித்த காட்சிகள் காண்பவரின் சித்தத்தை கலங்கடித்திருக்கும். 90-களில் தொடங்கிய விக்ரமின் கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் விருதளித்து கவுரவித்தது, அதுவரை தீண்டப்படாமல் இருந்த இந்த சித்தன் கதாப்பாத்திரம்தான். ‘பிதாமகன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது விக்ரமுக்கு கிடைத்தது.
சேதுவில் தொடங்கி பிதாமகன் வரை சிரத்தையான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் ஒருபக்கம், தில், தூள், ஜெமினி, சாமி என வணிக ரீதியான வெற்றிப் படங்கள் ஒருபக்கம் என சென்று கொண்டிருந்த விக்ரமின் திரை வாழ்க்கையை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற படம் என்றால் அது ‘அந்நியன்’. இயக்குநர் ஷங்கரின் இந்தப் படத்தில் அம்பி, ரெமோ, அந்நியன் என 3 கதாபாத்திரங்களின் வழியே தனது முத்திரையைப் பதித்திருப்பார் விக்ரம். மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் (Multiple personality Disorder) எனும் உளவியல் சிக்கல் கொண்ட கதாப்பாத்திரத்தில் விக்ரம் தனது முழுமையான நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தியிருப்பார்.
ராமானுஜமாக வரும் அம்பி கதாபாத்திரத்தில் சாதுவாகவும், ரெமோ கதாபாத்திரத்தில் ரொமான்டிக்காகவும் வரும் விக்ரம் அந்நியன் கதாபாத்திரத்தில் அதிரடி நாயகனாகவும் அதகளம் செய்திருப்பார். பிரகாஷ் ராஜ் தனியறையில் வைத்து விசாரிக்கும் அந்தக் காட்சியில் அம்பியாகவும் அந்நியனாகவும் மாறி மாறி மோனோ ஆக்டிங் மோடில் நடித்து ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் விக்ரம் தன்பக்கமாக ஈர்த்திருப்பார். தனது கதாப்பாத்திரங்களுக்காக மொட்டை அடித்துக் கொள்வதையும் தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொள்வதுமே நடிப்பென கருதாமல் ஒவ்வொரு தோற்றத்துக்கும் உயிர் கொடுத்து வித்தியாசம் காட்டி மக்களிடத்தில் கொண்டு சேர்த்திருப்பார் விக்ரம்.
2005-ல் அந்நியனுக்குப் பிறகு, லிங்குசாமியின் பீமா, சுசி கணேசனின் கந்தசாமி மணிரத்னத்தின் ராவணன் என விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்தப் படங்கள் எதிர்பார்த்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் விக்ரமின் நடிப்பாற்றல் மேலும் மேலும் மெருகேறிக் கொண்டே இருந்தது. ஒரு நீண்ட காத்திருப்புக்குப் பின்னர், 2011-ல் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘தெய்வத் திருமகள்’ படம் வெளியானது. மனநிலை பிறழ்வு கொண்ட கிருஷ்ணா கதாப்பாத்திரம் அழகிய கவிதை போல் எழுதப்பட்டிருக்கும்.
I am Sam என்ற ஆங்கிலப்படத்தின் ரீமேக்தான் இந்தத் திரைப்படம். கிருஷ்ணாவாக வரும் விக்ரமின் நேர்த்தியான நடிப்பில் குழந்தைத்தனமும், வெகுளித்தனமும் நிறைந்திருக்கும். படத்தின் மாஸ்டர் பீஸ் படத்தில் வரும் கோர்ட் சீன்கள்தான். ஒவ்வொரு வாய்தாவுக்கு வரும்போதும் தனது மகளைப் பார்க்க முடியாத ஏக்கத்தையும் சோகத்தையும் அடக்கிக் கொள்ளும் கிருஷ்ணா, மகளும் தந்தையும் நீதிபதி முன்பு நடக்கும் இறுதி விசாரணைக் காட்சியில் சைகை மொழியில் வெளிப்படுத்திக்கொள்ளும் காட்சி நிச்சயம் கண்ணீரை வரவழைக்கும். அடர்த்தி மிகுந்த அந்த கண்ணீர்த்துளிகளே விக்ரமின் நடிப்புக்கான பாராட்டுப் பத்திரம்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னர் ‘ஐ’ படத்தில் ஷங்கருடன் மீண்டும் இணைந்தார் விக்ரம். இந்தமுறை விக்ரமுக்கு சவால் நிறைந்த பாத்திரம். கூன் வளைந்த கதாபாத்திரம். நாயக பிம்பத்தை வளர்த்துக் கொண்டு மசாலா திரைப்படங்களில் நடித்து புகழ் சேர்த்துக் கொள்ள விரும்பாத நடிகர் விக்ரம் இதுபோன்ற சவாலான பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். எதிர்பார்த்த அளவுக்கு இந்தத் திரைப்படம் பெருவெற்றியை பெறாதபோதும், விக்ரமின் ஆத்மார்த்தமான நடிப்பும் புதிய முயற்சியும் அவருக்கு பெரும்புகழை சேர்த்தது. லிங்கேசனாகவும் கூனனாகவும் வரும் விக்ரமின் நடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
2022-ல், ஆதித்த கரிகாலனாக 12- ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனில் வந்து நின்ற விக்ரமை மீண்டும் அதே வாஞ்சையுடன் தமிழ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். நாவல் படித்த அனைவருக்குமே ஆதித்த கரிகாலனின் கதையும் முடிவும் நன்றாகவேத் தெரியும். ஆனாலும் அந்த கதாபாத்திரத்தில் விக்ரம் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு படத்துக்கான வரவேற்பை மேலும் பெரிதாக்கி இருந்தது. அந்தக் கதாப்பாத்திரத்துக்கான நியாயத்தை விக்ரமும் சிறப்பாகவே செய்திருந்தார். ஆனாலும் படத்தின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பு, இரண்டாம் பாகத்துக்கு கிடைக்கவில்லை. ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம் தனியாகவே மின்னியிருந்தார்.
புராணங்கள் வரலாற்றுக்கும், பேராசைகள் அழிவுக்கும், குருதி சிந்தும் போர்கள் சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் என்ற அடைமொழி தாங்கி வெளியாக இருக்கிறது ‘தங்கலான்’ படத்தின் டீசர். கோலார் தங்கவயல் பகுதியில் சுதந்திரத்துக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களின் நகல் போல வரும் விக்ரமின் தோற்றம் மிரட்சியை தருகிறது. ஏறத்தாழ 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து ரத்தம் சிந்தி நடித்துக் கொண்டிருக்கும் விக்ரமின் திரைப் பயணத்தில், சீயான், கனகவேல், காசி, சித்தன், அந்நியன், கிருஷ்ணா, கூனன், ஆதித்த கரிகாலன் போல தங்கலானும் இருக்கும் என்பது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.
"கலைஞன் என்பவன் தந்தக் கூட்டுக்குள் தனிமையைத் தேடிக் கொள்பவன் அல்ல. அவன் பொது வாழ்வின் துயரங்களையும் மகிழ்ச்சியையும் உரிய வகையில் பிற மனிதர்களோடு பகிர்ந்து கொள்பவன்" என்ற ஆல்ஃபர் காம்யுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப தனது பயணத்தில் தங்கலான் அரசனாக தொன்மை சமூக வாழ்வின் துயரத்தையும் மகிழ்ச்சியையும் பகிர காத்திருக்கும் விக்ரமின் இந்த முயற்சியும் வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஆசையுமாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago