மக்கள் ஆணையிடுவதை ‘தளபதி’ செய்து முடிக்கிறேன்: ‘லியோ’ வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: “நம்மால ஈஸியா ஜெயிக்க முடியறதை பெறுவது வெற்றி இல்லை. நம்மால எதை ஜெயிக்கவே முடியாதோ, அதை ஜெயிக்கிறதுதான் வெற்றி” என்று ‘லியோ’ திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்த ‘லியோ’ திரைப்படம் அக்.19-ல் வெளியானது. இப்படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என் மீது இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க. என் உடம்பு தோலை உங்க காலுக்கு செருப்பா தச்சுப்போட்டாகூட, அந்த அன்புக்கு ஈடாகாது. உங்க உழைப்புல நீங்க எனக்காக செலவு பண்ற ஒவ்வொரு காசுக்கும் உண்மையா இருப்பேன். கொஞ்ச நாளாவே சமூக வலைதளங்கள்ல உங்க கோபம் அதிகமா இருக்கே. யார் மனசையும் புண்படுத்த வேண்டாம். அது நம்ம வேலை இல்லை. நமக்கு அதிக வேலை இருக்கு. காந்திஜி சொன்னதுபோல அகிம்சைதான் வலிமையான ஆயுதம்.

வழக்கமா சொல்ற மாதிரி ஒரு குட்டிக்கதை சொல்லிட்டு ஓடிப்போயிடறேன். ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. காட்டுல யானை, முயலு, மானு, மயிலு, காக்கா, கழுகு.. காடுன்னா இதெல்லாம் இருக்கும்தானே, அதுக்கு சொன்னேன். ஒருத்தர் வில் அம்பு எடுத்துட்டு போயி முயலை அடிச்சிடறாரு. இன்னொருத்தர் ஈட்டியோட போயி யானைக்கு குறிவைக்கிறாரு.. ஆனா மிஸ் ஆயிடுச்சு. ரெண்டு பேரும் ஊருக்கு திரும்பி வர்றாங்க. ஒருத்தர் கையில முயலோட. இன்னொருத்தர் கையில வேலோட. இதுல யார் கெத்துன்னு நினைக்கிறீங்க.யானைக்கு குறிவச்சவருக்குதான் வெற்றி. நம்மால ஈஸியா ஜெயிக்க முடியறதை பெறுவதற்கு பேரு வெற்றி இல்லை. நம்மால எதை ஜெயிக்கவே முடியாதோ, அதை ஜெயிக்கிறதுதான் வெற்றி. அதனால, பெருசா கனவு காணுங்க. பாரதியார் சொன்னதுதான், ‘பெரிதினும் பெரிது கேள்’. உங்க உழைப்பு அப்படி இருந்தா, நிச்சயமா நினைச்சதை அடைவீங்க.

‘லியோ’ பாட்டு ரிலீஸ் ஆனபோது, சில வார்த்தைகள் சர்ச்சையாச்சு. இப்ப ‘விரல் இடுக்குல தீப்பந்தம்’ அப்படின்னு எழுதுனாங்கன்னு வையுங்க. அதை ஏன் சிகரெட்டுன்னு நினைக்கிறீங்க. தீர்ப்பை மாற்றி எழுதற பேனாவா இருக்கலாம்ல. ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டாவ கொண்டா’ அப்படீன்னு ஒரு வரி. இதை ஏன் சரக்குனு நினைக்கிறீங்க. கூழாகூட இருக்கலாம்ல. சினிமாவுல நல்லவன், கெட்டவனை வேறுபடுத்தி காட்ட, சில விஷயங்கள் வைப்பது உண்டு. அதை எல்லாம் ரசிகர்கள் பின்பற்றுவாங்கன்னு சொல்ல முடியாது. பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துலயே மதுக்கடை இருக்கு. அதை கடந்து போய்தான் படிக்கிறாங்க.

ஏவிஎம் சரவணன் சார் ஒரு முறை கார்ல போகும்போது, வடபழனி சிக்னல்ல கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அம்மாவை பார்த்து நூறு ரூபாய் கொடுத்தார். அவங்களும் பணத்தை வாங்கிட்டு, “ரொம்ப நன்றி, நீ நல்லாயிருப்பே எம்ஜிஆர்”னு வாழ்த்தினாங்களாம். அந்த காலத்துல யாரு பணம் அள்ளிக்கொடுத்தாலும் அது எம்ஜிஆராகத்தான் இருக்கும்னு பேரு இருந்துச்சு.

புரட்சித் தலைவர்னா, ஒருத்தர்தான். நடிகர் திலகம், புரட்சிக் கலைஞர், உலக நாயகன், சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர்தான். அதே மாதிரி, ‘தல’ன்னா ஒருவர்தான், ‘தளபதி’ன்னா உங்களுக்கே தெரியும். என்னை பொருத்தவரை மக்களாகிய நீங்கதான் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி. நீங்க ஆணையிடுங்க, நான் செய்துவிட்டு போகிறேன். இவ்வாறு பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

16 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்