ஆன்லைன் விளையாட்டு மோசடியை சொல்லும் ‘இமெயில்’

By செய்திப்பிரிவு

சென்னை: எஸ்ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘இமெயில்’. ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கும் இதில் நாயகனாக முருகா அசோக்குமார் நடித்துள்ளார். ஆர்த்தி ஸ்ரீ, ஆதவ் பாலாஜி, மனோகர், பில்லி முரளி உட்பட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இது தமிழ், கன்னட மொழிகளில் உருவாகி உள்ளது.

அவினாஷ் கவாஸ்கர் இசையமைக்கிறார். ஜுபின் பின்னணி இசையை மேற்கொள்கிறார். செல்வம் மாதப்பன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குநர் எஸ்.ஆர் ராஜன் கூறியதாவது: கதாநாயகியை மையப்படுத்திய இந்தப் படத்தின் கதையை முன்னணி நடிகைகளிடம் கூறினேன். யாருமே கேட்கக் கூட முன்வரவில்லை. ராகினி திவேதி கதை கேட்க ஒப்புக்கொண்டார். பிறகு சில நாட்கள் கழித்து நீங்கள் கூறிய கதையை அப்படியே எடுப்பீர்களா? என்று மட்டும் கேட்டார். அவர் எதிர்பார்த்தபடியே அப்படியே படமாக்கி இருக்கிறேன். கதாநாயகிக்குத் திடீரென ஒரு இமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் பரிசு காத்திருப்பதாகச் சொல்லப்பட, அந்த விளையாட்டுக்குள் இறங்கிய கதாநாயகி ஒரு மாஃபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டாரா? இல்லையா என்பதுதான் கதை. ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்திக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘இனி உத்திரம்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறேன். இவ்வாறு எஸ்.ஆர் ராஜன் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE