தமிழ் சினிமாவில் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும் படம், ‘அவள் அப்படித்தான்’! ருத்ரய்யா இயக்கிய இந்தப் படம் இன்று வரை பேசப்படுவதற்குக் காரணம், பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்ட நேர்மையான கதையும் ஆழமான உரையாடல்களும். திரைக்கதை, உரையாடலை, எழுத்தாளர் வண்ணநிலவன், சோமசுந்தரேஸ்வர் (இயக்குநர் கே.ராஜேஷ்வர்), ருத்ரய்யா எழுதியிருந்தனர். ஒளிப்பதிவை நல்லுசாமி, ஞானசேகரன் செய்திருந்தனர். திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு முடித்து வெளிவந்த இருவரும் யாரிடமும் பணிபுரியாமல், நேரடியாகக் களமிறங்கிய படம் இது.
ஆவணப்பட இயக்குநர் அருண் (கமல்ஹாசன்), விளம்பர நிறுவனம் நடத்தும் அவர் நண்பன் தியாகு (ரஜினிகாந்த்), தனது வாழ்வில் நடந்த தொடர் தோல்விகளால் ஆண்கள் மீது நம்பிக்கையற்று இருக்கும் மஞ்சு (ஸ்ரீபிரியா), இவர்களைச் சுற்றி நடக்கும் கதைதான் படம். மஞ்சுவை மையாகக் கொண்டு இயல்பாக அமைந்திருந்த இந்தப் படத்தின் திரைக்கதையும், பெண்ணிய பார்வையும் பிரியாவின் நடிப்பும் படத்துக்குப் பலமான அமைந்தன.ஸ்ரீப்ரியா, கமல், ரஜினி மூன்றுபேரும் அந்தக் கதாபாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்திருப்பார்கள். கிளைமாக்ஸில் சரிதா, கமலுக்கு மனைவியாக வருவார். இந்தப் படத்தில் ரஜினியின் சிறப்பான நடிப்பைப் பார்க்கும்போதும், அவர் கையில் துப்பாக்கியையும் கத்தியையும் கொடுத்து தமிழ் சினிமா வீணடித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.
படத்தின் அறிமுகக் காட்சியில் இருந்து இறுதிவரை ஸ்ரீப்ரியாவின் கதாபாத்திர வடிவமைப்பும் எழுத்தும் அபாரம். அவருக்குச் சிறந்த நடிகைக்கானத் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று அப்போது கூறப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசின் சிறந்த படத்துக்கான இரண்டாவது பரிசும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது நல்லுசாமி, ஞானசேகரனுக்கும், சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது ஸ்ரீப்ரியாவுக்கும் கிடைத்தது.
படம் வெளியாகி இத்தனை வருடங்களானாலும் இதுபோன்ற கதாபாத்திரங்கள் இப்போதும் சமூகத்தில் உலவிகொண்டுதான் இருக்கின்றன. அதுதான் இந்தப் படத்தின் வெற்றியும் கூட. இதன் கிளைமாக்ஸ் ஹைலைட்டான விஷயம். யாரும் யூகிக்க முடியாத ஒரு நவீனச் சிறுகதையின் முடிவை போல அமைத்திருப்பார்கள்.
இருபதே நாளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் பாடல்களுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். கே.ஜே. ஜேசுதாஸ் பாடிய ‘உறவுகள் தொடர்கதை’, எஸ்.ஜானகி பாடிய ‘வாழ்க்கை ஓடம் செல்ல’, கமல் குரலில் ‘பன்னீர் புஷ்பங்களே’ பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
“எரிந்து போன வீடு, முறிந்துபோன உறவுகள், கலைந்துபோன கனவுகள், சுமக்க முடியாத சோகங்கள், மீண்டும் ஒரு முறை மஞ்சு இறந்துபோனாள். இந்தச் சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவால்தான் முடியும். அவள் பிறப்பாள், இறப்பாள், இறப்பாள், பிறப்பாள், அவள் அப்படித்தான்” என்று கமல் குரலில் வரும் வசனத்தோடு படம் முடியும்போது, ஒரு பெரும் சோகம் மனதைக் கவ்வி நிற்கும். அப்போதே, பெண்ணுரிமை, முற்போக்குச் சிந்தனையோடு பல விஷயங்களைப் பேசிய இந்தப் படத்தை ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் விட்டது துரதிர்ஷ்டம்தான்! பிறகு பல பகுதிகளில் இந்தப் படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது. 1978-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது ‘அவள் அப்படித்தான்’அவள் பிறப்பாள், இறப்பாள், இறப்பாள், பிறப்பாள்...அவள் அப்படித்தான்!.
அதிக ஆங்கில வசனம் ஏன்?: இந்தப் படம் பற்றி வண்ணநிலவனிடம் கேட்டோம். “இந்தப் படத்துக்குள்ள ரஜினி, கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா வந்ததுக்குக் காரணம் அனந்து சார்தான். கே.பாலசந்தரோட இருந்த அவர், ருத்ரய்யாவுக்கு நல்ல நண்பர். இந்தக் கதையை கேட்டுட்டு அவரே ரஜினி, கமலுக்கு ஃபோன் பண்ணி நடிக்க வச்சார். இதுக்காக அவங்களுக்கு அதிக சம்பளமும் கொடுக்கலை. அந்த காலகட்டத்துல மூனு பேருமே பிஸி. ரஜினி கால்ஷீட்டே இல்லை. மற்ற படங்கள்ல நடிச்சு முடிச்சுட்டு, ராத்திரி ஒரு மணி, ரெண்டு மணிக்கெல்லாம் வந்து நடிச்சுட்டுப் போவார். இந்தப் படத்துல வேலை பார்த்த எல்லோருமே பணத்துக்காக பண்ணலை. நட்புக்காகத்தான்.
படத்துல, ஏன் அதிகமான ஆங்கில வசனம்னு கேட்கிறீங்க. ஏன்னா, இந்தக் கதையில வர்ற முக்கிய கேரக்டர்கள், ‘எலைட்’டானவங்க. அதனால அப்படி வசனம் இருந்தது. அது திணிக்கப்படலை. இயல்பா வந்ததுதான். நான் பிளாஷ்பேக் காட்சிக்கு வசனம் எழுதினேன், சோமசுந்தரேஸ்வர் ஒன்லைன் எழுதினார். படத்துக்கு பின்னணி இசை அமைச்சது, எல்.வைத்தியநாதன். வெறும் 4 நாளே நாள்ல முடிச்சுக் கொடுத்தார். இதுல வரும் ‘பன்னீர் புஷ்பங்களே’ பாடலை நான் தான் எழுதறா இருந்தது. எனக்கு டியூனுக்கு சரியா எழுத வரலை. அப்புறம் அந்தப் பாடலை கங்கை அமரன் எழுதினார்.
படம் ரிலீஸ் ஆன பிறகு, பிரபல டைரக்டர் மிருணாள் சென் சென்னைக்கு வந்திருந்தார். அவர் சென்னை புளுடைமண்ட் தியேட்டர்ல படத்தைப் பார்த்துட்டு, சிலாகிச்சுப் பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டி, படத்துக்கு இன்னும் கவனத்தைக் கொடுத்தது. அந்த காலகட்டத்துல, ஆக்ஷன் படங்கள் அதிகமாக வந்ததால இந்தப் படத்தை ரசிகர்கள் சரியாகக் கண்டுக்கலைன்னு நினைக்கிறேன். இப்ப வரைக்கும் ‘அவள் அப்படித்தான்’ பேசப்படறதுக்கு எக்காலத்துக்கும் பொருந்துற அதோட கதைதான் காரணம்”.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago