பெண் பத்திரிகையாளர் தோளில் கை வைத்த விவகாரம்: மன்னிப்புக் கேட்டார் சுரேஷ் கோபி

By செய்திப்பிரிவு

கொச்சி: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், தீனா, ஐ, தமிழரசன்உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.பாஜகவை சேர்ந்த இவர், கேரள மாநிலம்கோழிகோடில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பெண் பத்திரிகையாளர் ஒருவர், “கேரளாவில், இத்தனை வருடங்களில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கூட பாஜகவால் கைப்பற்ற முடியவில்லையே?” என்று கேட்டார்.

அப்போது அவர் தோளில் கைவைத்தபடி சுரேஷ் கோபி பேசினார். அந்தப் பத்திரிகையாளர் அவர் கையைத் தட்டிவிட்டார். “மனிதர்களால் முடியாதது எதுவுமில்லை” என்ற அவர், சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவர் தோளில் கை வைத்தார். அவர் குரலில் மாற்றம் தெரிந்தது.“கேரளாவும் இந்தியாதான். அதைப் புரிந்து கொள்ளவேண்டும்” என்று கூறிவிட்டு, வெளியேறினார்.

பெண் பத்திரிகையாளர் தோளில் சுரேஷ் கோபி கைவைத்தது பத்திரிகையாளர்களிடையே அதிர்ச்சியைஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவின. கேரள பத்திரிகையாளர் சங்கம் இதற்குக் கண்டனம் தெரிவித்ததுடன் சுரேஷ் கோபி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. சமூக வலைதளங்களில் இந்தப் பிரச்சினை வைரலானதை அடுத்து சுரேஷ் கோபி மன்னிப்புக் கேட்டுள்ளார்.

“இதுவரை எப்போதும் பொதுஇடங்களில் தவறாக நடந்துகொண்டதில்லை. இந்தச் சம்பவத்தில் அந்தப் பெண் பத்திரிகையாளரின் உணர்வுகளை மதிக்கிறேன். எனது நடத்தையால் அவர்மனம் புண்பட்டிருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைச் சுரேஷ் கோபி தொட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE