லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான ‘விக்ரம்’ படத்துக்குப் பிறகு தமிழ் ரசிகர்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட சொல் ‘எல்சியூ’ (LCU). ’லியோ’ படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இது LCU-வில் இடம்பெறுமா என்பதே ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இதன் காரணமாக இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பும் உருவாகியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை ‘லியோ’ பூர்த்தி செய்ததா என்பதைப் பார்க்கலாம்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய மலைக் கிராமத்தில் மனைவி, பிள்ளைகள் என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் பார்த்திபன் (விஜய்). காஃபி ஷாப் வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விடும் காட்டு விலங்குகளை பிடிக்கும் அனிமல் ரெஸ்க்யூவராகவும் இருக்கிறார். அப்படி ஒருமுறை ஊருக்குள் வந்து விடும் கழுதைப்புலியை திறமையாக பிடிப்பதால் ஊர் மக்களிடம் நன்மதிப்பை பெறுகிறார். இன்னொரு பக்கம் செயற்கையாக விபத்துகளை ஏற்படுத்தி பணம் பறிக்கும் மிஷ்கின் கும்பலால் தன் மகளின் உயிருக்கு ஆபத்து வரும் நேரத்தில் தன்னையே அறியாமல் ஒட்டுமொத்த கும்பலையும் கொன்றுவிடுகிறார்.
சிறைக்குச் சென்று வெளியே வரும் அவரது புகைப்படத்தைப் பேப்பரில் பார்த்து, பல வருடங்களுக்கு முன்பு இறந்துபோன லியோ தாஸ் தான் பார்த்திபனா என்பதை தெரிந்து கொள்ள வருகின்றனர் போதைப் பொருட்களை கடத்தும் ஆண்டனி தாஸும் (சஞ்சய் தத்) அவரது தம்பி ஹரால்ட் தாஸும் (அர்ஜுன்). இவர்களால் பார்த்திபனுக்கும், அவரது குடும்பத்துக்கும் பல இடையூறுகள் நிகழ்கின்றன. அவற்றில் இருந்து பார்த்திபன் தப்பித்தாரா, இறந்துபோன லியோ யார், இப்படம் LCU-வில் இடம்பெற்றதா? - இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘லியோ’ திரைக்கதை.
(முன்குறிப்பு: நிறைவாக விமர்சனம் செய்வதற்கு சில ஸ்பாய்லர்களைப் பகிர வேண்டியுள்ளதால், படம் பார்க்காதவர்கள் இனிவரும் பகுதியை தேவையெனில் தவிர்க்கலாம்.)
படம் ஆரம்பிக்கட்டபோது இது டேவின் குரோனன்பெர்க் இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு வெளிவந்த ‘A History of Violence’ படத்தின் தழுவல் என்று கூறப்பட்டு வந்தது. எனினும், படக்குழு அதனை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், ‘லியோ’ படத்தின் தொடக்கத்திலேயே இது அப்படத்தின் தாக்கத்தில்தான் என்ற நன்றி அறிவிப்புடனேயே படம் ஆரம்பிக்கிறது. படத்துக்கு முந்தைய புரொமோஷன் பேட்டிகளில் முதல் 10 நிமிடங்களை ரசிகர்கள் கண்டிப்பாக தவறவிடவேண்டாம் என்று படக்குழு தொடர்ந்து ஹைப் ஏற்றிவிட்டது. ஆனால், அதுவே அந்தக் காட்சிகளுக்கு வில்லனாகிவிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு சொதப்பல்தான் அங்கு நிகழ்ந்தது. ஊருக்குள் புகுந்த கழுதைப்புலியை ஹீரோ கொல்லாமல் அடக்கி, அதனை வனத்துறை ரேஞ்சரான கவுதம் மேனன் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு ஹீரோ ஏதாவது புத்திசாலித்தனமாக செய்திருந்தால் ஹைப் ஏற்றப்பட்ட அந்த 10 நிமிட காட்சியில் அரங்கமே அல்லோலகல்லோலப் பட்டிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை.
உண்மையில், ஹீரோவின் என்ட்ரியாக இருந்திருக்க வேண்டியது அந்த காஃபி ஷாப் சண்டைக் காட்சிதான். ‘கருகரு கருப்பாயி’ பாடல் கிராமோஃபோனில் பின்னணியில் ஒலிக்க வில்லன்களை விஜய் வதம் செய்வது அக்மார்க் லோகேஷ் டச். இதன்பிறகுதான் படம் சூடுபிடிக்கிறது. விஜய் சிறைக்கு சென்று வருவது, விஜய் குடும்பம் தொடர்பாக காட்சிகள், சஞ்சய் தத், அர்ஜுன் கும்பல் விஜய்யை தேடி வருவது என திரைக்கதையில் தொய்வுகள் இல்லாமல் தூக்கிப் பிடிக்கும் சில காட்சிகள் முதல் பாதியை நகர்த்திச் செல்கின்றன. விஜய் - த்ரிஷா இடையிலான காட்சிகள், கவுதம் மேனன் - விஜய் இடையிலான நட்பு ஆகியவை சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. எனினும், முந்தைய லோகேஷ் படங்களோடு ஒப்பிடுகையில், இடைவேளை காட்சியை இதில் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்ற உணர்வு எழுகிறது. டீசரில் வைரலான அந்த ‘ப்ளடி ஸ்வீட்’ வசனம் சப்பென்று வைக்கப்பட்டது ஏமாற்றம். கொள்ளை கும்பலைச் சேர்ந்த மிஷ்கினின் இறுதிச் சடங்கின்போது அவரது வீட்டைச் சுற்றி பன்றிகள் இருப்பது போன்று காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
படத்தின் பெரும் பிரச்சினையே இரண்டாம் பாதிதான். திரைக்கதையில் எந்தவித புதுமையையும் செய்யாமல் ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவை மட்டும் நம்பி இரண்டாம் பாதியை எழுதியுள்ளார் லோகேஷ். விஜய் சண்டை போடுகிறார், போடுகிறார். அதை மட்டும்தான் போட்டுக் கொண்டே இருக்கிறார். அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன்னால் சுமார் 25 நிமிடம் நடக்கும் ஒரு சண்டைக் காட்சி, சஞ்சய் சத் - விஜய் இடையே நடக்கும் கார் சேஸிங் காட்சியெல்லாம் காதில் புகை வரவைத்துவிடுகின்றன. லியோ கதாபாத்திரத்துக்கான ஃப்ளாஷ்பேக் எழுதப்பட்ட விதம் படு சொதப்பல். மடோனோ செபாஸ்டியன் கதாபாத்திரம், மூடநம்பிக்கை, நரபலி என தாறுமாறாக எங்கெங்கோ செல்கிறது திரைக்கதை. பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் என்று நினைத்துக் கொண்டே சம்பந்தமே இல்லாமல் வைக்கப்பட்ட கேமியோக்கள் எல்லாம் படுசொதப்பல்.
லோகேஷ் - விஜய் கூட்டணியின் முந்தைய படமான ‘மாஸ்டரில்’ விஜய் நடை, உடை, பாவனை அனைத்தும் அதற்கு முன்பு பார்த்திராத வகையில் ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும். இதில் அதைவிட ஒருபடி மேலே சென்று எமோஷனல், ஆக்ஷன், அழுகை, கோபம் என நடிப்பில் மிளிர்கிறார். அமைதியான குடும்பத் தலைவனாக பார்த்திபன் கதாபாத்திரத்திலும், ஆக்ஷனில் அதிரடி காட்டும் லியோ கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மனைவி தன் மீது சந்தேகப்படுவது தெரிந்து உடைந்து அழும் காட்சியில் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் படங்களில் நாயகிக்கு வேலை இல்லை என்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் த்ரிஷாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக எழுதப்பட்டுள்ளது. விஜய் - த்ரிஷா இடையிலான கெமிஸ்ட்ரியும் பல வருடங்களுக்குப் பிறகும் கூட சிறப்பாக ஒர்க் அவுட் ஆகிறது. வில்லன் வலிமையாக இருந்தால் படத்தின் சுவாரஸ்யம் கூடும் என்பது திரைக்கதை விதி. இதில் சஞ்சய் தத், அர்ஜுன் என்ற இரண்டு வில்லன்கள் இருந்தும் இருவருமே சொத்தை வில்லன்களாக காட்டப்பட்டிருக்கிறார். அதிலும் அர்ஜுன் எல்லாம் சிகரெட் பிடிப்பதற்காக மட்டுமே நடிக்கவைக்கப்பட்டிருக்கிறார்.
வனத்துறை அதிகாரியாக வரும் கவுதம் மேனன் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். படத்தில் நெப்போலியனான வரும் ஜார்ஜ் மரியனும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளார். இவர்கள் தவிர பிரியா ஆனந்த், மிஷ்கின், சாண்டி உள்ளிட்டோர் வீணடிக்கப்பட்டுள்ளனர். அதிலும் அனுராக் காஷ்யப் கதாபாத்திரம் எல்லாம் பரிதாபம். தானே தேடி வந்து இந்தப் படத்தில் நடித்ததாக அனுராக் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தேடி வந்த குற்றத்துக்காக ஒரு பெரிய இயக்குநர் என்ற இரக்கம் கூட இல்லாமல் இப்படியா செய்வது? மடோனா செபாஸ்டியன் கதாபாத்திரம் எல்லாம் எதற்காக வைக்கப்பட்டது என்றே தெரியவில்லை.
அனிருத் இசையில் ‘நான் ரெடிதான் வரவா’, ‘Badass' பாடல்கள் சிறப்பு. சென்சார் பிரச்சினையால் ‘நான் ரெடி’ பாடலின் பெரும்பாலான வரிகள் ‘டவுங் டவுங்’ என்றே வருகிறது. பின்னணி இசையில் கூடுதல் உழைப்பு காட்டியிருக்கலாம். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு வெண்மை படர்ந்த பனிப் பிரேதசத்தின் அழகை கண்முன் கொண்டுவருகிறது. லோகேஷ் படங்களுக்கே உரிய அடர்ந்த செந்நிற லைட்டிங் படத்தை ஒரு டார்க் டோனிலேயே வைத்திருக்க உதவியுள்ளது. சஞ்சய் தத்தின் போதைப் பொருள் கிடங்கு, விஜய்யின் வீடு, காஃபி ஷாப் ஆகியவற்றியின் நேர்த்தியில் கலை இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.
லோகேஷ் கனகராஜின் முந்தையப் படங்கள் அனைத்திலும் ரசிகர்களுக்கான சின்னச் சின்ன சர்ப்ரைஸ் அம்சங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கும். உதாரணமாக படம் முழுக்க வரும் ஒரு டம்மி கதாபாத்திரம் திடீரென வீறு கொண்டு எழுந்து வில்லன்களை துவம்சம் செய்யும். ‘கைதி’ நெப்போலியன், ‘விக்ரம்’ ஏஜெண்ட் டினா போன்றவை உதாரணம். அப்படியான விஷயங்கள் 'லியோ'வில் மிஸ்ஸிங். சர்ப்ரைஸ் என்று நினைத்து வைக்கப்பட்ட சில காட்சிகளிலும் கூட சர்ப்ரைஸ் இல்லாமல் போனது சோகம். படத்தின் க்ளைமாக்ஸில் வரும் அந்த ‘ஒரு’ குரலைத் தவிர.
திரைக்கதையில் உழைப்பை கொட்டாமல் மேல்பூச்சுகளையும், வெற்று ‘ஹைப்’களையும் மட்டுமே நம்பி நீண்டநாள் தாக்குப்பிடிக்க முடியாது என்பதற்கு ‘லியோ’ சரியான உதாரணம். விஜய்யின் நடிப்பு, ஸ்டைலிஷ் மேக்கிங், தெறிக்கவிடும் ஆக்ஷன், முதல் பாதியை தாங்கிப் பிடிக்கும் சில காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் ‘லியோ’ மிகப் பெரிய ஏமாற்றம் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். இரண்டாம் பாதியின் ஃப்ளாஷ்பேக் காட்சியை சிறப்பாக எழுதி, தேவையற்ற ஆக்ஷன் காட்சிகளை கத்தரித்திருந்தால் ‘லியோ’ பதுங்காமல் பாய்ந்திருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago