“கூடுதல் ஷேர் வேணுமாம்!” - ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகளில் ‘லியோ’ ரிலீஸ் சிக்கலும் பின்னணியும்

By கலிலுல்லா

சென்னை: நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் நாளை (அக்.19) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சென்னை - ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகளில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு மொத்தம் 5 காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்திருந்த நிலையில், நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது. கடந்த 14-ஆம் தேதி முதல் ஆன்லைன் புக்கிங் தொடங்கிய நிலையில், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. எனினும், சென்னையின் முக்கிய திரையரங்குகள் இன்னும் புக்கிங் திறக்கவில்லை.

நேற்று (அக்.17) எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனர் அர்ச்சனா கல்பாத்தி, விநியோகஸ்தர்களுடனான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படாததால் டிக்கெட் புக்கிங் தாமதமாகும் என்று தெரிவித்திருந்தார். ரோகிணி திரையரங்கில் ‘இங்கு லியோ திரைப்படம் திரையிடப்படாது’ என போர்டு வைக்கப்பட்டுள்ளது. வெற்றி திரையரங்கிலும் இதேநிலை நீடிக்கிறது. சங்கம், தேவி உள்ளிட்ட திரையரங்குகளும் இன்னும் புக்கிங்கை தொடங்கவில்லை.

இது தொடர்பாக ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரணிடம் பேசுகையில், “எங்களுக்கும் விநியோகஸ்தர்களுக்குமான டெர்ம்ஸில் (Terms) சிக்கல் நிலவிவருகிறது. இந்தப் பிரச்சினை சரியானதும் படம் ரிலீஸ் செய்யப்படும். மற்ற எந்தப் பிரச்சினையும் இல்லை. ரோகிணி மட்டுமல்ல, நிறைய திரையரங்குகளில் இதே பிரச்சினை இருப்பதால் அவர்களுக்கும் புக்கிங்கை தொடங்கவில்லை. வழக்கமான விதிமுறைகளை தாண்டி விநியோகஸ்தர்கள் கூடுதல் நிபந்தனை விதிப்பதால் இந்த நிலை நீடிக்கிறது” என்றார்.

ரோகிணி திரையரங்கின் இயக்குநர் நிகிலேஷ் சூர்யா பேசுகையில், “நாங்கள் திரையிட மாட்டோம் என சொல்லவில்லை. விநியோகஸ்தர்கள் தரப்பிலான கமர்ஷியல் டெர்ம்ஸ் எங்களுக்கு ஒத்துப்போகவில்லை. வழக்கமானதை தாண்டி கூடுதலாக பணத்தை எதிர்பார்க்கிறார்கள். விஜய் படம் என்றால் ஒரு டெர்ம்ஸ் வைத்திருப்போம். அதனைத்தாண்டி அதிகமாக கேட்கிறார்கள். அதற்கு என்ன காரணம் தெரியவில்லை. இந்த ஒரு படத்துக்கு நாங்கள் ஒப்புக்கொண்டால் எல்லா படங்களுக்கும் அதே நிலை நீடிக்கும். அதனால் நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை” என்றார்.

இது தொடர்பாக வர்த்தக கண்காணிப்பாளர் ரமேஷ் பாலா பேசுகையில், “இந்தப் படத்தை பொறுத்தவரை படத்தின் தயாரிப்பு நிறுவனமாக செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமே தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது. தமிழகத்தில் 9 ஏரியாக்களாக பிரித்து உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்த விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களிடம் முதல் வார வசூலின் லாப கணக்கில் வழக்கமான சதவீதத்தை தாண்டி கூடுதலாக நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

முதல்வார வசூலில் விநியோஸ்தர்கள் 75 சதவீத லாபத்தை கேட்கிறார்கள். மீதி 25 சதவீதம் திரையரங்க உரிமையாளர்களுக்கு. இதற்கு முன் பொதுவாக பெரிய படங்களுக்கு 60-40 அல்லது 65-35 என்ற சதவீதத்தில் லாபத்தை விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பிரித்துகொள்வார்கள். இப்போது கூடுதலாக கேட்பது தான் சிக்கல். இந்த கணக்கு என்பது முதல் வாரத்துக்கு மட்டும். அடுத்தடுத்த வாரங்களில் விநியோகஸ்தர்களுக்கு லாபம் குறைந்து, திரையரங்கு உரிமையாளர்களுக்கு கூடும். திரையரங்கில் படம் ஓடும் நாட்களை பொறுத்து தியேட்டர்கார்களுக்கு லாபம்.

பொதுவாக பெரிய படங்களை பொறுத்தவரை முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் விலையை ரூ.1000 தொடங்கி கூடுதலாக விற்று திரையரங்கு உரிமையாளர்கள் லாபத்தை சரிகட்டிகொள்வார்கள். ஆனால் ‘லியோ’வுக்கு அரசு கடும் கட்டுபாடுகளை விதித்து கூடுதல் கட்டணம் குறித்து புகார் அளிக்க குழு அமைத்துள்ளது. இதனால் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி வசூலிக்க முடியாது.

மேலும், அதிகாலை சிறப்பு காட்சியும் இல்லை. இதற்கு முன் எந்த பெரிய படத்துக்கும் இப்படி நிகழ்ந்ததில்லை. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்களின் நிபந்தனைகளுக்கு செவி சாய்க்கவில்லை. ரெட் ஜெயன்ட் என்றால் அவர்கள் வார வாரம் படத்தை ரிலீஸ் செய்வதால் அவர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஒரு டெர்ம்ஸ் இருக்கும். ஆனால் இப்போது புது விநியோகஸ்தர்கள் என்பதால் சிக்கல் நிலவி வருகிறது. இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில் என்ன நடக்கப் போகிறது என தெரியவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்