கவர்ச்சி நடிகை என்பது வலியைக் கொடுத்தது: சோனா ஹைடன்

By செ. ஏக்நாத்ராஜ்

அஜித்தின் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனா ஹைடன். தொடர்ந்து குசேலன், அழகர் மலை உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துவிட்ட சோனா, இப்போது தனது வாழ்க்கைக் கதையை ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடராக இயக்குகிறார். ஷார்ட்பிளிக்ஸ் தளத்துக்காக இத்தொடரை இயக்கும் சோனாவிடம் பேசினோம்.

திடீர்னு இயக்குநர் ஆகிட்டீங்களே..?

திடீர்னு இல்லை. இது திட்டமிட்டதுதான். பத்து, பனிரெண்டு வருஷத்துக்கு முன்னாலஒரு வார இதழுக்காக என் வாழ்க்கைக் கதையைத் தொடரா எழுதினேன். நல்ல வரவேற்பும் கிடைச்சது. அது புத்தகமா வந்ததும் நான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கேனான்னு ஆச்சரியப்பட்டேன். பிறகு நேரம் கிடைக்கும்போது அதைத் திருத்திக்கிட்டே இருந்தேன். 2014-ம் வருஷம் டைரக் ஷன் கோர்ஸ்ல சேர்ந்து சில விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். பிறகு அந்த ஸ்கிரிப்டை ரெடி பண்ணினேன். வெப் தொடரா பண்ணலாம்னு தோணுச்சு. என் கூட ஷார்ட்பிளிக்ஸ் இணைஞ்சாங்க. சரின்னு ஆரம்பிக்கப் போறேன். இதை, நான் பணியாற்றிய படங்களோட அனைத்து இயக்குநர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

உங்க ‘பயோபிக்’கை நீங்களே இயக்குறது ஏன்?

ஏன்னா, என் வாழ்க்கையில் நடந்த சில உண்மைகளை நானே சொல்லணும்னு தோணுச்சு. இதுல 99% உண்மையை மட்டும்தான் சொல்லப் போறேன். அதுபற்றிஎன்ன விமர்சனங்கள் வந்தாலும் சரி. அதனால நானே இயக்கினாதான் சரியா இருக்கும்னு நினைச்சு பண்றேன். இது எமோஷனல் பயணம்.

சினிமாவா இல்லாம வெப் தொடரா பண்றீங்களே?

சில விஷயங்களை வெளிப்படையா சொல்லும்போது பலருக்குப் பிடிக்காது. நான் உட்பட அதுதான். அதுமட்டுமில்லாம ஓடிடி-ல பண்ணும்போது சுதந்திரமா, வெளிப்படையா சில விஷயங்களைச் சொல்ல முடியும். வெப் தொடரா பண்ண அதுவும் ஒரு காரணம்.

கவர்ச்சி நடிகைன்னு சொல்லும்போது அது பாதிப்பைக் கொடுத்ததா?

‘சிவப்பதிகாரம்’ படத்துல ‘மன்னார்குடி பளபளக்க’ பாட்டுக்கு ஆடும்போது, அதுதான் என் வாழ்க்கையை மாற்றப் போகுதுன்னு நினைச்சேன். ஆனா, என்னால கல்யாணம் கூட பண்ண முடியலை. அப்பதான், நான் ஏதோ தப்பு பண்ணிட்்டேனோன்னு தோணுச்சு.நான் கவர்ச்சி நடிகைங்கறது படத்துல மட்டும்தான்னு எப்படிச் சொல்லிப் புரிய வைக்கறது? அதனால அஞ்சு ஆறு வருஷம் சினிமாவுல இருந்து ஒதுங் கியே இருந்தேன். அது எனக்கு பெரிய பாதிப்பையும், வலியையும் கொடுத்தது.

‘ஸ்மோக்’ ஷூட்டிங் தொடங்கிவிட்டதா?

இன்னும் சில நாட்கள்ல தொடங்குது. சென்னைமற்றும் கேரளாவுல இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்குது. மலையாளத்துல எனக்கு வரவேற்பு இருப்பதால அங்கே டப் பண்ணி வெளியிடுவோம். இயக்கியபடி்நடிப்பது கஷ்டம் போல தெரியும். கூடுதலா தயாரிப்பு சுமையும் இருக்கு. ஆனாலும் எனக்குக் கடினமா இல்லை. கதாநாயகனா முகேஷ் கன்னா நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக கபில்ராய் பண்றார். புதியவர் ஒருவரை இசையமைப்பாளரா அறிமுகப்படுத்த இருக்கிறோம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE