முதல் பார்வை: உள்குத்து

By உதிரன்

கோயில் வாசலில் பூ விற்கும் ஒரு இளைஞன் திட்டமிட்டுப் பழிதீர்க்கப் புறப்பட்டால் அதுவே 'உள்குத்து'.

மீன் சந்தையில் மீன் வெட்டும் வேலையைச் செய்து வருகிறார் பால சரவணன். 'சுறா சங்கர்னா சும்மாவா' என உதார் விட்டு வரும் அவரிடம் வந்து சேர்கிறார் தினேஷ். 'எம்.பி.ஏ படித்திருக்கிறேன், வீட்டில் சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டேன்' என்று தன் கதைச் சுருக்கத்தைக் கூறும் தினேஷுக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார் பால சரவணன். தினேஷை அந்தக் குப்பத்தில் சேர்த்துக்கொள்வதால் மீன் சந்தை தொழிலாளர் சங்கத் தலைவர் செஃப் தாமு கோபமாக, அவரை தன் தனிப்பட்ட அணுகுமுறையால் சாந்தப்படுத்துகிறார் பால சரவணன். சுறா சங்கர் என்ற அடைமொழியில் கடற்கரை ஓரம் உட்கார்ந்திருந்த ஒரு ரவுடியை மிரட்ட, அவர் பாலாவை வெளுத்து வாங்குகிறார். இதைக் கேள்விப்பட்டு வரும் தினேஷ் அந்த ரவுடியைத் தாக்குகிறார். பிறகுதான் அந்த இளைஞர் 'காக்கா மணி' சரத் லோகிதஸ்வாவின் ஆள் என்பது தெரிய வருகிறது. இதனால் எதிர்ப்புகளை சம்பாதிக்கும் தினேஷை ஸ்கெட்ச் போட்டு தூக்க ஒரு கும்பல் புறப்படுகிறது. தினேஷ் என்ன ஆனார், அவர் யார்? பின்புலம் என்ன என்று விரிகிறது திரைக்கதை.

வழக்கமான பழிவாங்கல் கதைதான். ஆனால், அதைச் சொல்லும் விதத்தில் வித்தியாசத்தைக் கடைபிடித்து கவனிக்க வைக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜு. மிகப் பெரிய மாஸ் சினிமாவுக்கான அத்தனை தகுதிகளும் படத்தில் இருக்கின்றன. ஆனால், தினேஷ், பாலசரவணன் என்று திருடன் போலீஸ் கூட்டணியையே களத்தில் பயன்படுத்தி இருப்பது அவரது துணிச்சலைக் காட்டுகிறது. அந்தத் துணிச்சலிலும் உள்ளே ஒன்றை வைத்து வெளியே ஒன்றை செய்யும் 'உள்குத்து' பொருத்தம் அமைந்துவிடுகிறது.

இயல்பான, எளிமையான, நம்பகமான நாயகனாக தினேஷ் படம் முழுக்க தன் இருப்பைப் பதிவு செய்கிறார். பாசமுள்ள குடும்பத்தில் ஒருவனாய் இருக்கும்போதும், நட்புக்கு முக்கியத்துவம் தரும் விதத்திலும் தினேஷ் பளிச்சிடுகிறார். மிகப் பெரிய ரவுடியை எதிர்க்கிறோம் என்று தெரிந்தும் கால் மேல் கால் போட்டு கெத்து காட்டுவது, அடிபணியாமல் இருப்பது, அதற்குப் பிறகு ஆடும் கபடி ஆட்டம், 'உள்குத்து' ஆட்டம் என ரசிக்க வைக்கிறார். எமோஷன் காட்சிகளில் மட்டும் தினேஷ் இன்னும் தன்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

நந்திதாவுக்கு தினேஷைக் காதலிப்பதைத் தவிர வேறு வேலையில்லை. எனவே, அதை மட்டும் சரியாகச் செய்கிறார்.

சுறா சங்கர்னா சும்மாவா என சும்மா கூச்சல் போட்டு உதார் விடும் பால சரவணன் முதல் பாதி முழுக்க கடுப்படித்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் சமாளிக்கிறார்.

சரத் லோகிதஸ்வா, திலீப் சுப்புராயன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன் என எல்லோருக்கும் மிக முக்கியமான கதாபாத்திரங்கள். ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு போட்டிபோட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். ஜான் விஜய், திலீப் சுப்புராயன் நடிப்பு சிறப்பாக உள்ளது.

மீன் சந்தையையும், கபடி ஆட்டத்தையும் கண் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா. ஜஸ்டின் பிரபாகரன் இசை பரவாயில்லை ரகமாகவே இருக்கிறது. பிரவீனின் எடிட்டிங் கச்சிதம். சண்டைக் காட்சிகள் ஈர்க்கின்றன.

ஹீரோ பில்டப், டூயட், மாஸ் சீன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல் நேராக கதைக்குள் சென்றுவிடும் கார்த்திக் ராஜுவின் சமரசமில்ல நேர்மை படத்துக்குள் தானாக இழுத்துச் செல்கிறது. கதைக்குத் தேவையான அளவிலேயே காட்சிகள் நகர்வது திரைக்கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. அதுவும் இடைவேளை வரை தினேஷின் பின்புலத்தை யூகிக்க முடியாமல் திரைக்கதை நகர்த்தியிருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இரண்டாம் பாதியும் அந்த எதிர்பார்ப்பை சரியாகப் பூர்த்தி செய்தது.

சரத் லோகிதஸ்வா எப்படி தினேஷை உடனடியாக நம்புகிறார், தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார், பிறகு எப்படி சந்தேகப்படாமல் இருக்கிறார் என்ற கேள்விகள் எழுகின்றன. இதைத் தவிர்த்துப் பார்த்தால் படத்துக்குத் தேவையான நியாயத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு செய்திருக்கிறார். தினேஷ் ஏன் அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவை என்பதையும் இறுதிக் காட்சியில் நிறுவுவது இயக்குநரின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது.

மொத்தத்தில் 'உள்குத்து' தகுதியான சினிமாவுக்குரிய தரத்துடன் மிளிர்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்