காயத்ரி: சுஜாதா கதையில் வெளியான முதல் திரைப்படம்

By செய்திப்பிரிவு

எழுத்தாளர் சுஜாதாவின் நாவலை மையமாகக் கொண்டு உருவான படம், ‘காயத்ரி’. திரைப்படமான அவரது முதல் நாவலும் இதுதான்.நாவலில் இருந்த சில விஷயங்களை சினிமாவுக்காக கொஞ்சம் மாற்றி, திரைக்கதை அமைத்திருந்தார் பஞ்சு அருணாச்சலம். வசனம், பாடல்களை யும் அவரே எழுதியிருந்தார். படத்தை இயக்கியவர் ஆர்.பட்டாபிராமன்.

ஜெய்சங்கர், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராஜசுலோச்சனா, எம்.என்.ராஜம், அசோகன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

‘காலைப் பனியில் ஆடும் மலர்கள்’, ‘வாழ்வே மாயமா வெறும் கதையா’, ‘ஆட்டம் கொண்டாட்டம்’, ‘உன்னை தான் அழைக்கிறேன்’ ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. சுஜாதா மோகனின் முதல் தமிழ்ப் பாடல், இதில் இடம்பெற்ற ‘காலைப் பனியில் ஆடும்’ பாடல்தான்.

திருச்சியில் வசிக்கும் அப்பாவி பெண் காயத்ரியை (ஸ்ரீதேவி) சென்னை வாலிபர் ராஜரத்தினம் (ரஜினி) திருமணம் செய்கிறார். ரஜினியின் சகோதரியாக வரும் விதவைப் பெண் திருமணத்தை நடத்தி வைக்கிறார். ரஜினி வீட்டுக்கு வரும் ஸ்ரீதேவி, அங்கு ஏதோ மர்மமாக நடப்பதை உணர்கிறார். விதவை பெண், மாடர்ன் உடைக்குமாறி வீட்டிலேயே மது அருந்துகிறார். காயத்ரியின் சந்தேகம் வலுக்கிறது. ஒரு கட்டத்தில் ராஜரத்தினம் பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து,நீலப்படம் எடுத்து விற்பவர் என தெரியவருகிறது.

அதிர்ச்சி அடைகிறார். அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் துப்பறிவாளராக வரும் ஜெய்சங்கர், காயத்ரியை காப்பாற்றப் போராடுகிறார். ராஜரத்தினத்திடம் இருந்து அவரை மீட்டாரா இல்லையா? என்பது கதை.

ரஜினி, அப்போது வில்லன் வேடங்களில்தான் நடித்து வந்தார். இதில் ‘ஆன்டி ஹீரோ’ பாத்திரம். நீலப்படம் எடுக்கும் கதைதான் படம் என்றாலும் அதை ஆபாசமில்லாமல் படமாக்கி இருப்பார்கள். ரஜினியின் வேகமான பேச்சு, நின்று திரும்பிப் பார்க்கும் ஸ்டைலான பார்வை, கோட் சூட் அணிந்த அவர் தோற்றம் அப்போது ரசிக்க வைத்தன.

இந்தப் படம் வெளிவந்த பிறகு படத்தைப் பார்த்த சுஜாதா, ஏமாற்றமடைந்தார். திரைக்கதை மாற்றம் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. கதை வேறு, சினிமா வேறு என்று அவர் புரிந்து கொண்டதும் இந்தப் படத்தில்தான்.

1977-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது இந்தப் படம். 46 வருடமானாலும் இந்த ‘காயத்ரி’யின் ‘வாழ்வே மாயமா வெறும் கதையா’ பாடல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE