தேன் நிலவு: காஷ்மீரில் படமான முதல் தென்னிந்திய திரைப்படம்!

By செய்திப்பிரிவு

இயக்குநர் ஸ்ரீதர், வீனஸ் நிறுவனத்தில் இருந்து பிரிந்து, தனியாகத் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் ‘சித்ராலயா’. தனது வீட்டின் பெயரையே தயாரிப்பு நிறுவனத்துக்கும் வைத்தார் ஸ்ரீதர். தம்பி சி.வி.ராஜேந்திரன் அவர் நண்பர்களான கோபு, வின்சென்ட், சுந்தரம், திருச்சி அருணாச்சலம் ஆகியோரை ஒர்க்கிங் பார்ட்னர்களாக நியமித்தார். இந்த நிறுவனத்தின் மூலம் முதன் முதலாக அவர் தயாரித்த படம், ‘தேன் நிலவு’!

ஜெமினி கணேசன் கதாநாயகன். அப்போது,இந்திப் படங்களில் பிசியாக இருந்த வைஜயந்தி மாலா கதாநாயகி. எம்.என். நம்பியார், தங்கவேலு, எம்.சரோஜா, பி.ஏ.வசந்தி ஆகியோர் நடித்தனர்.

பணக்கார தங்கவேலு, தனது இரண்டாவது மனைவியுடனும் மகள் வைஜயந்தி மாலாவுடனும் காஷ்மீருக்கு ஹனிமூன் செல்கிறார். ஜெமினியை தன் புது மானேஜர் என்று நினைத்துக்கொண்டு அவரையும் கூட்டிச் செல்கிறார். உண்மையில் புது மானேஜர் நம்பியார். வைஜயந்தி மாலாவும் ஜெமினியும் காதல் வசப்பட, நம்பியார் சதி செய்கிறார். ஜெமினியை போலீஸ் தேடுகிறது. பிறகு உண்மைகள் வெளிவர என்ன நடக்கிறது என்பது கதை.

ஏ.எம். ராஜா இசையமைத்திருந்தார். ஸ்ரீதர் படங்களுக்கு அவர்தான் அப்போது இசையமைத்து வந்தார். முதலில் இதற்கு மருதகாசி பாடலாசிரியராக ஒப்பந்தமாகி 3 பாடல்களை எழுதினார். இசை அமைப்பாளர் ஏ.எம். ராஜாவுக்கும் அவருக்கும் ‘விடிவெள்ளி’ படத்தின் போது பிரச்சினை இருந்ததால், அவருடன் பணியாற்ற மாட்டேன் என்று சொல்லிவிட்டார் மருதகாசி. இதற்காக எழுதிய 3 பாடல்களையும் கைவிடும்படி சொல்லிவிட்டார். பிறகுதான் கண்ணதாசன் எழுதினார். ‘ஓஹோ எந்தன் பேபி’, ‘பாட்டுப் பாடவா’, ‘நிலவும் மலரும்’, ‘மலரே மலரே தெரியாதா?’, ‘சின்ன சின்ன கண்ணிலே’, ‘காலையும் நீயே’, ‘ஊரெங்கும் தேடினேன்’ என அனைத்துப் பாடல்களும் ஹிட்.

அப்போதெல்லாம் செட்டில்தான் பெரும்பாலான திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவுட்டோர் என்றால் ஊட்டி, கொடைக்கானல், மைசூர் என்று செல்வார்கள். ஆனால், ‘தேன் நிலவு’ படத்தை காஷ்மீரில் எடுத்தார் ஸ்ரீதர். 2 மாதங்கள் அங்கு படப்பிடிப்பு. நடிகர், நடிகைகள் குடும்பத்துடன் அங்கு வரலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டது. டெக்னீஷியன்களுக்கு இந்தச் சலுகை கிடையாது. மொத்தம் 52 நாட்களில் படத்தை முடித்தார், ஸ்ரீதர். காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் இதுதான்.

‘ஓஹோ எந்தன் பேபி’ பாடலை, தால் ஏரியில் எடுத்தார் ஸ்ரீதர். வைஜயந்தி மாலாவுக்கு நீச்சல் தெரியாது என்பதால், அதைக் கற்றுக்கொண்டு வந்து இந்தக் காட்சியில் நடித்தார் அவர். படம் முடிந்து சென்சார் சென்றால் சிக்கல்.

காஷ்மீர் மலைவாசிகளுக்கும் ஹீரோவுக்கும் கிளைமாக்ஸில் மோதல் வருகிறது. “இது, சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமான காஷ்மீருக்கும் இந்தியாவின் இதர பகுதிக்குமான சுமுக உறவைப் பாதிக்கும்” என்றார் அப்போதைய தணிக்கை அதிகாரி சாஸ்திரி. பிறகு கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி கொடைக்கானலில் எடுத்தார்கள். ஆனால் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் எடுபடவில்லை. படம் சுமாராகத்தான் ஓடியது. ஆனாலும் படத்தின்பாடல்கள் இப்போது வரை இனிமை தருகிறது. 1961-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது, இந்தப் படம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE