சித்தார்த் வெளியேற்றப்பட்ட விவகாரம்: வருத்தம் தெரிவித்த சிவராஜ் குமார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ‘சித்தா’ பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் கன்னட நட்சத்திர நடிகர் சிவராஜ் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூருவில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக கூட்டமைப்பு ( (KFCC) அலுவலகம் அருகே கன்னட திரைப் பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு கன்னட நட்சத்திர நடிகர் சிவராஜ் குமார் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பாக சிவராஜ்குமார் பேசுகையில், “மற்றவர்களின் உணர்வுகளை நாம் எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. கன்னட திரையுலகம் சார்பாக நேற்றைய சம்பவத்துக்கு நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார்த். இதைச் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், அதைக் கண்டு நாங்கள் மிகுந்த மன வருத்தம் அடைகிறோம். இனி இப்படி நடக்காது” என்றார்.

மேலும், “கன்னட மக்கள் உலகம் முழுவதும் நல்ல மதிப்பும், மரியாதையையும் பெற்று விளங்குகின்றனர். பரஸ்பர மரியாதையுடன் பல்வேறு மொழி, கலாசாரத்தை உள்ளடக்கி அனைத்து தரப்பு மக்களும் வாழும் மாநிலம் கர்நாடகாவைப் போல எங்குமில்லை. உலகம் முழுவதும் நாம் சம்பாதித்த மரியாதையை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப் பிணைப்பு தான் கதை. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். படம் நேற்று (செப்.28) திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு சூழ்ந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். அப்போது அவர்கள், “காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE