“மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டினர்” - ‘சித்தா’ குறித்து சித்தார்த்

By செய்திப்பிரிவு

சென்னை: “சித்தா படத்தைப் பார்த்து இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டினார்கள். மக்களுடையை உணர்வை இப்படத்தில் பிரதிபலித்துள்ளோம்” என்று நடிகர் சித்தார்த் பேசியுள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சித்தார்த், “ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக நான் ஒரு படம் தயாரிக்கும்போது எந்தவித சமரசமும் இல்லாமல் உண்மையை மட்டுமே படமாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அப்படியான ஓர் உணர்வை ‘சித்தா’ கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தை ஏன் என்னுடைய அறிமுகப் படம் என்று சொல்கிறேன் என்றால், மக்களுடைய உண்மையான வாழ்க்கையை அப்படியே படமாக்கியுள்ளோம். இதன் ப்ரீ- புரொடக்‌ஷன் வேலைகளுக்கு மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் எடுத்தோம்.

படம் எனக்கு திருப்தியாக வந்துள்ளது. நான், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உட்பட சில பேரைத் தவிர படத்திலுள்ள அனைவருமே புதுமுகம். இந்த முடிவையும் முன்கூட்டியே எடுத்தோம். படத்தில் குழந்தைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ள நிமிஷாவுக்கும் வாழ்த்துகள். அஞ்சலி நாயரும் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் தங்களுடைய வேலையை பாராட்டும்படி செய்துள்ளனர். பெரும்பாலான காட்சிகள் பழநியில் லைவ் லொகேஷனில் எடுக்கப்பட்டது.

இந்தப் படம் ஒரு எமோஷனல் திரில்லர். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் தான் வெளியிடுகிறது. படத்தை முதலில் பார்த்தவர் உதய் தான். ஒரு குழந்தை காணாமல் போகும்போது குடும்பம், காவல் நிலையம், பள்ளி என இந்த சுற்று வட்டாரங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதை நாம் எல்லோரும் கனெக்ட் செய்து கொள்ள முடியும். அன்போடும் அக்கறையோடும் இந்த படத்தை எடுத்துள்ளோம்.

என் குரு மணிரத்னம், கமல் ஆகியோரிடம் படத்தை போட்டு காண்பித்தேன். மிகவும் பாசிட்டிவாக சொல்லி பாராட்டினார்கள். அதுவே, எனக்கு பெரிய விருது கிடைத்தது போல தான். அடுத்து ஷங்கர், ரஹ்மானிடமும் படத்தை காண்பிப்பேன். படத்தை 300 தடவை பார்த்திருப்பேன். நன்றாக வந்துள்ளது. பெற்றோர்களுக்கு இப்படம் வழிகாட்டுதலாக இருக்கும” என்றார் சித்தார்த்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE