“நான் இயக்க நினைக்கும் ஹீரோ விஜய் சேதுபதி” - ஜெயம் ரவி

By செய்திப்பிரிவு

சென்னை: தான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும் இதில் மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இதனை இயக்கியுள்ளார்.

ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் வரும் செப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு நேற்று (செப்.24) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் ஜெயம் ரவி பேசியதாவது: “இறைவன் என்றாலே அன்புதான். எதற்காக இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, 'இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?' என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது. கரோனா காரணமாக 'ஜனகன மண' திரைப்படம் பாதியில் நின்றது. அதன் பின்புதான் 'இறைவன்' தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள்.

ஹெச்.வினோத் படங்கள் திரைத்துறையை புரட்டிப் போட்டவை. அவருக்கும் நன்றி. இயக்குநர் அஹமதின் அன்பும் நட்பும் எனக்கு எப்போதும் தேவை. 'பொன்னியின் செல்வன்' படம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் கேட்டார். ஏன் 'தனி ஒருவன் 2' பண்ண மாட்டாயா? என்று நான் திருப்பி கேட்டேன். அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம்தான்” இவ்வாறு ஜெயம் ரவி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE