கலைக்கோயில்: இயக்குநர் ஸ்ரீதருக்காக கொள்கையைத் தளர்த்திய நடிகர்!

By செய்திப்பிரிவு

முத்துராமன், ரவிச்சந்திரன், டி.எஸ்.பாலையா, நாகேஷ், ராஜஸ்ரீ நடித்து சூப்பர் ஹிட்டான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை அடுத்து, சி.வி.ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம், ‘கலைக்கோயில்’. வீணை வித்வானான ஓர் இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. இதைக் கேட்டதும் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தனது பாக்கியலட்சுமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில், தானே தயாரிக்கிறேன் என்றார். அவருடன் கலை இயக்குநர் கங்காவும் இணைந்து கொண்டார்.

இதில், எஸ்.வி.சுப்பையா, ஆர்.முத்துராமன், நாகேஷ், சந்திரகாந்தா, ராஜஸ்ரீ, ஜெயந்தி, வி.கோபாலகிருஷ்ணன், வி.எஸ்.ராகவன் உட்பட பலர் நடித்தனர். இதில் எஸ்.வி.சுப்பையா கதாபாத்திரத்துக்கு முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தவர், ரங்காராவ். அவர் சரியான நேரத்துக்குப் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என்ற புகார்கள் அப்போது இருந்தன. அதையும் மீறி,அவரை நேராக அழைத்துப் பேசி, ஒப்பந்தம் செய்தார் ஸ்ரீதர்.

சொன்ன நேரத்துக்கு ஸ்பாட்டில் நிற்பேன் என்று உறுதியளித்தார் ரங்காராவ். ஆனால், முதல் நாள் படப்பிடிப்பில் எல்லோரும் காத்திருக்க, அவர் மட்டும் ஆப்சென்ட். அவர் வீட்டுக்கு ஃபோன் செய்தால், ‘காலையிலேயே கிளம்பி போய்விட்டாரே’ என்றார்கள்.

அவர் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த ஸ்ரீதர், எஸ்.வி.சுப்பையாவுக்கு உடனடியாக ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரவழைத்தார். அவரிடம் இன்னொரு சிக்கல். அவர் ஒட்டு மீசை, தாடியுடன் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையுடையவர். ஸ்பாட்டுக்கு வந்தஎஸ்.வி.சுப்பையா, கேரக்டரை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், அந்த தாடி மேட்டரை சொன்னதும், எதிர்பார்த்தது போலவே நடிக்க மறுத்துவிட்டார்.

பிறகு அந்த கேரக்டரின் முக்கியத்துவம், பேச வேண்டிய வசனங்கள்ஆகியவற்றை ஸ்ரீதர் விளக்கியதும், ‘உங்களுக்காகஎன் கொள்கையைத் தளர்த்தி நடிக்கிறேன்’ என்று சம்மதித்தார் எஸ்.வி.சுப்பையா. இதில் முத்துராமன் வீணை வித்வான். அவருக்காக, வீணை வாசித்தவர், இசை மேதை சிட்டி பாபு.

டி.ராமமூர்த்தியுடன் இணைந்து இசை அமைத்திருந்தார், எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா குரலில் ‘நான் உன்னைச் சேர்ந்த செல்வம்’, பாலமுரளி கிருஷ்ணா, பி.சுசீலா குரலில் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’, பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி குரலில், ‘முள்ளில் ரோஜா’, எல்.ஆர்.ஈஸ்வரிகுரலில், ‘வரவேண்டும் ஒரு பொழுது’, சுசீலா பாடிய ‘தேவியர் இருவர் முருகனுக்கு’ ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

26 நாளில் இந்தப் படத்தை எடுத்து முடித்தார் ஸ்ரீதர். இந்தப் படத்தின் மீது அதிக நம்பிக்கையும் வைத்திருந்தார் அவர். ஆனால், விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்ற இந்தப் படம், வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. ‘காதலிக்க நேரமில்லை’ வெற்றி காரணமாக விநியோகஸ்தர்கள் பலர், ‘கலைக் கோயில்’படத்தைப் போட்டிப்போட்டு வாங்கினர். அவர்களுக்கு நஷ்டம் என்பதை உணர்ந்த ஸ்ரீதர், கணிசமான தொகையைத் திருப்பி வழங்கியிருக்கிறார், அப்போதே! 1964-ம் ஆண்டு, இதே நாளில்தான் இந்தப் படம் வெளியானது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE